திருமணம் செய்து கொள்வதாக கூறி , இளம் பெண்ணுடன் உல்லாசமாக இருந்து ஏமாற்றிய இளைஞர்
சென்னையில் நடந்த குற்ற செய்திகளை கீழே காணலாம்

" திருமணம் செய்து கொள்கிறேன் " என ஏமாற்றி இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருந்த இளைஞர்
சென்னை மதுரவாயலைச் சேர்ந்த 25 வயது பெண் , தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவர் விருகம்பாக்கம் அனைத்து மகளிர் போலீசில் புகார் ஒன்றை அளித்தார். அதில் 2019 - ல் கல்லுாரியில் படிக்கும் போது நண்பராக பழகிய ஹர்ஷவர்தன் ( வயது 25 ) என்னை காதலித்தார். திருமணம் செய்வதாக கூறி, பல இடங்களுக்கு அழைத்து சென்று உல்லாசமாக இருந்தார்.
பின்பு 2024 நவம்பர் 3 - ம் தேதி , இரு வீட்டாரும் அழைத்து பேசி , இரு ஆண்டுகளுக்கு பின் திருமணம் செய்வதாக கூறினர். இதை நம்பி 2025 செப்டம்பர் 25ம் தேதி , என் வீட்டில் என்னுடன் உல்லாசமாக இருந்தார். பின்பு, அவரை தொடர்பு கொள்ளும் போது , என்னிடம் பேசுவதை தவிர்த்தார். இதுகுறித்து கேட்டால் , என்னை திருமணம் செய்ய மறுத்து மிரட்டுகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் குறிப்பிட்டிருந்தார். இதுகுறித்து விசாரித்த விருகம்பாக்கம் போலீசார் வெங்கடேசா நகரை சேர்ந்த ஹர்ஷவர்தனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கல்லூரி சீட் வாங்கி தருவதாக கூறி , லட்சத்தில் பணம் பெற்று மோசடி செய்த நபர்
சென்னை கோடம்பாக்கம் யு.ஐ., காலனியை சேர்ந்தவர் லட்சுமி சந்திரகலா ( வயது 49 ) ஐ.டி., ஊழியர். இவரது தம்பி அலிபாய் என்பவர் வாயிலாக சபி சுமன் என்பவர் அறிமுகமாகியுள்ளார். லட்சுமி சந்திரகலாவின் மகளுக்காக பிரபல கல்லூரியில் சீட் வாங்கி தருவதாக கூறி 6.16 லட்சம் ரூபாயை சபி சுமன் கடந்த 2024 டிசம்பரில் பெற்றுள்ளார்.
ஆனால் அதன் பின் கல்லூரியில் சீட்டும் வாங்கி தராமல் வாங்கிய பணத்தையும் திரும்ப தராமல் ஏமாற்றி வந்துள்ளார். பின்பு 2.5 லட்சம் ரூபாய் மட்டும் திரும்ப கொடுத்துள்ளார். மீதமுள்ள பணத்தை கொடுக்காமல் மோசடி செய்துள்ளார். இதுகுறித்து , கோடம்பாக்கம் போலீசில் லட்சுமி சந்திரகலா புகார் அளித்துள்ளார். புகாரின் உண்மைத் தன்மை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மது போதையில் வாலிபரை வெட்டிய 6 பேர் கைது
சென்னை குன்றத்துார் அருகே பூந்தண்டலம், டி.சி நகரை சேர்ந்தவர் ஆனந்த் ( வயது 24 ) இவரது வீட்டிற்கு கடந்த 30 - ம் தேதி அதிகாலை 2:30 மணிக்கு சென்ற மர்ம நபர்கள் , ஆனந்தை வீட்டில் இருந்து வெளியே அழைத்து கத்தியால் வெட்டி விட்டு ஆட்டோவில் ஏறி தப்பியுள்ளனர். பலத்த வெட்டுக்காயமடைந்த ஆனந்தை , அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு , சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
திருமுடிவாக்கம் போலீசார் விசாரணையில் , ஆனந்தை மது போதையில் முன் விரோதம் காரணமாக வெட்டியது அதே பகுதியை சேர்ந்த குமார் ( வயது 20 ) சூர்யா ( வயது 24 ) அய்யப்பன் ( வயது 23 ) செல்வம் ( வயது 21 ) விஜய் ( வயது 25 ) மணி கண்டன் ( வயது 23 ) ஆகியோர் என்பது தெரிந்தது.
மேலும் இவர்கள் பூந்தண்டலம் பகுதியை சேர்ந்த லோகநாதன் ( வயது 24 ) என்பவரை கடந்த 30 - ம் தேதி வெட்டியதும் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து இவர்களிடம் இருந்து ஆட்டோ மற்றும் கத்திகளை பறிமுதல் செய்த போலீசார், ஆறு பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.





















