Watch Video | சுட்டி மாணவியின் கணக்குக் கேள்விகள் :காவலர் கணித ஆசிரியரான கதை!
போலீஸ் பூத்தின் போக்குவரத்துக் காவலர் மகேந்திரன், மாணவி ஒருவருக்கு போலீஸ் பூத் வாசலில் அமர்ந்தபடி கணக்குப் பாடம் சொல்லித் தருகிறார்.
பிராட்வே பேருந்து நிலையம் அருகே இருக்கும் பூக்கடை போலீஸ் பூத் அனைவரும் அறிந்த இடம். மக்கள் அதிகம் நடமாடும் அந்தப் பகுதியில் சாலையின் மத்தியில் ஒரு போலீஸ் பூத் இருப்பது மக்களுக்கு எப்போதும் ஒருவித எச்சரிகை உணர்வை ஏற்படுத்திக் கொண்டே இருக்கும். ஆனால் இந்த உணர்வை மாற்றியிருக்கிறது ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு சமயத்தில் நிகழ்ந்த சம்பவம். ஞாயிறு முழு ஊரடங்கு காரணமாக வெறிச்சோடி இருக்கிறது கடைகள் நிரம்பி வழியும் அந்தச் சாலை. ஒன்றிரண்டு பேரின் நடமாட்டம் தவிர அந்தப் பகுதி காலியாகக் காணப்படுகிறது.
Meet S Mahendra, a traffic police personnel who helps Deepika, a 7th standard student who lives on the footpath with her family, with mathematics, at C1 Flower Bazaar Police Booth.
— The New Indian Express (@NewIndianXpress) January 10, 2022
Express Video | @ddmallick pic.twitter.com/RjEHqApBwj
அப்போதுதான் அந்தச் சம்பவமும் மக்கள் கண்களுக்குத் தென்படுகிறது. போலீஸ் பூத்தின் போக்குவரத்துக் காவலர் மகேந்திரன் மாணவி ஒருவருக்கு போலீஸ் பூத் வாசலில் அமர்ந்தபடி கணக்குப் பாடம் சொல்லித் தருகிறார். அந்த மாணவியின் பெயர் தீபிகா. சாலைதான் வீடு, அதில்தான் தனது அம்மா அப்பாவுடன் வசித்து வருகிறார்.அருகில் இருக்கும் அரசுப்பள்ளியில் 7ம் வகுப்புப் படிக்கிறார். தீபிகாவுக்கு கணிதத்தில் குழப்பம் வரவே அதனைச் சொல்லிக் கொடுத்து எளிதாகப் புரியவைக்கிறார் மகேந்திரன். குழந்தை தீபிகாவும் போலீஸ் என்கிற எவ்வித அச்சமும் இன்றி அவரிடம் சந்தேகங்கள் கேட்கிறார். ஒரு ஆசிரியரும் மாணவரும் போல இருவரும் இயல்பாக உரையாடும் இந்த காணொளிதான் தற்போது வைரலாகி வருகிறது.
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு கடந்த ஒரு வாரமாக கடுமையாக அதிகரித்து வருகிறது. கடந்த மூன்று தினமாக 10 ஆயிரத்திற்கும் அதிகமாக காணப்பட்டு வந்த பாதிப்பு இன்று 13 ஆயிரத்து 990 ஆக அதிகரித்துள்ளது. இந்த பாதிப்புகள் பொங்கல் பண்டிகையில் மேலும் அதிகரிக்கும் என்று மருத்துவ வல்லுனர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில், பொங்கல் பண்டிகையில் பொதுமக்கள் கூட்டம் கூடுவதைத் தவிர்க்கும் விதமாக தமிழ்நாடு அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதன்படி,
- வரும் 14ஆம் தேதி முதல் 18ஆம் தேதியான தைப்பூசம் வரை அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்கள் நேரடியாக சென்று வழிபட அனுமதி இல்லை
- 16ஆம் தேதியான ஞாயிற்றுக்கிழமை அன்றும் 2வது முறையாக முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும்
- பொதுமக்களின் நலன் கருதி, பொங்கலுக்கு வெளியூர் செல்லும் பேருந்துகளில் 75% இருக்கைகளில் மட்டுமே பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
- இரவு ஊரடங்கு வரும் ஜனவரி 31-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே தமிழ்நாட்டில் தற்போது இரவு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இருப்பினும், இரவு ஊரடங்கின்போது பொதுமக்களின் நலன் கருதி மாவட்டத்திற்கு உள்ளேயும், மாவட்டத்திற்கு வெளியேயும் போக்குவரத்து சேவை இயக்கப்பட்டு வருகிறது.அதே சமயத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவிலும்,. கொரோனா தடுப்பு விதிமீறல்களில் ஈடுபடும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் மீது நடவடிக்கை எடுத்து அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.