Chennai Rain 8 Death: மிக்ஜாம் புயலால் எவ்வளவு உயிரிழப்பு? போக்குவரத்து மாற்றம்? மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் லிஸ்ட்! - முழு விவரம்
Chennai Rain 8 Death: மிக்சாம் புயலால் சென்னையில் கொட்டிய கனமழையால் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Chennai Rain 8 Death: மிக்சாம் புயலால் சென்னையில் கொட்டிய கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய 10 ஆயிரம் பேர் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் பெருமழை:
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில், கடந்த ஞாயிறு இரவு தொடங்கி நேற்று இரவு வரை கனமழை கொட்டி தீர்த்தது. கடந்த 47 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பெய்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. சென்னையில் மாநகரின் செயல்பாடு என்பதே பெரும்பாலும் ஸ்தம்பித்துள்ளது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. அங்கு சிக்கியுள்ளவர்களை படகுகளை கொண்டு மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சென்னையில் கடந்த 45 மணி நேரத்தில் 47 செ.மீ மழைப் பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக காட்டுப்பாக்கம் - 29 செ.மீ., நுங்கம்பாக்கம் - 24 செ.மீ., மீனம்பாக்கம் - 19 செ.மீ. மழை பெய்துள்ளது. இந்நிலையில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து காவல்துறை தரப்பில் விரிவான அறிக்கையாக வெளியிடப்பட்டுள்ளது.
8 பேர் பலி - ஆயிரக்கணக்கானோர் பேர் மீட்பு:
சென்னை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பத்மநாபன், முருகன், கணேசன், பரத், செல்வம் மற்றும் மிராஜுல் இஸ்லாம் ஆகிய 6 பேருடன், அடையாளம் தெரியாத இரண்டு உடல்களும் மீட்கப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கானோர் பத்திரமாக மீட்கப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். சென்னை மாநகராட்சியில் 58 இடங்களில் விழுந்த மரங்கள் அகற்றப்பட்டுள்ளன. பசுமை வழிச்சாலை மற்றும் ஈசிஆர் சாலைகளை அவசர தேவைகளுக்கு மட்டும் பயன்படுத்திக் கொள்ளவும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
மூடப்பட்டுள்ள சுரங்கப்பாதைகள்:
- கணேசபுரம் சுரங்கப்பாதை
- கெங்குரெட்டி சுரங்கப்பாதை
- செம்பியம் சுரங்கப்பாதை
- வில்லிவாக்கம் சுரங்கப்பாதை
- துரைசாமி சுரங்கப்பாதை
- மாட்லி சுரங்கப்பாதை
- ரங்கராஜபுரம் சுரங்கப்பாதை
- மவுண்ட், தில்லை கங்கா நகர் சுரங்கப்பாதை
- சைதாப்பேட்டை - அரங்கநாதன் சுரங்கப்பாதை
- பழவந்தாங்கல் சுரங்கப்பாதை
- சி.பி. சாலை சுரங்கப்பாதை
- வியாசர்பாடி சுரங்கப்பாதை
- திருவொற்றியூர், மாணிக்கம் நகர் சுரங்கப்பாதை
- ஆர்பிஐ சுரங்கப்பாதை
- கோயம்டு, புதிய பாலம் சுரங்கப்பாதை
- ஹாரிங்டன் சுரங்கப்பாதை
- சூளைமேடு, லொயாலா சுரங்கப்பாதை ஆகியற்றில் தண்ணீர் தேங்கியுள்ளதால் மூடப்பட்டுள்ளது.
போக்குவரத்தில் மாற்றம்:
மஞ்சம்பாக்கம் - வடபெரும்பாக்கம் சாலையிலான போக்குவரத்து முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளது. புழல் ஏரியிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடயே, தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் வெள்ளத்தில் சிக்கி இருப்பவர்களை மீட்டு வருகின்றனர். ராணுவத்தினரும் பல பகுதிகளில் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். படகுகளை வாடகைக்கு எடுத்தது மட்டுமின்றி, மீனவர்களின் படகுகளும் மீட்பு பணிக்காக பயன்படுத்தப்பட்டுள்ளன. ஓர்ரு நாட்களில் சென்னை முழுவதும் இயல்பு நிலைக்கு திரும்பும் என மாநகராட்சி அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.