பெற்றோரே ஜாக்கிரதை! கவனமா பார்த்துக்கோங்க! ஃபிரிட்ஜை திறந்த 5 வயது சிறுமி பலி!
எந்த அளவுக்கு சுதந்திரமாக செயல்பட விடுகிறோமோ அதே அளவு அவர்களின் நலன்களிலும் பாதுகாப்பிலும் பெற்றோர் முழு கவனம் செலுத்த வேண்டும்.
சென்னையில் 5 வயது சிறுமி குளிர்சாதனப்பெட்டி(ஃபிரிட்ஜ்)யை திறந்தபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வீட்டில் குழந்தைகள் எப்போதும் விளையாடிக்கொண்டே தான் இருக்கும். அவர்களுக்கு சரி-தவறு, நல்லது-கெட்டது என புரிய காலம் எடுக்கும். குழந்தைகள் என்றால் விளையாட்டாகத்தான் இருக்கும். அதில் தவறு ஏதும் இல்லை. ஆனால் அதையும் மீறி சில இடங்களில் அவர்களிடம் கண்டிப்பு காட்ட வேண்டியதும் அவசியமாகிறது.
எந்த அளவுக்கு சுதந்திரமாக செயல்பட விடுகிறோமோ அதே அளவு அவர்களின் நலன்களிலும் பாதுகாப்பிலும் பெற்றோர் முழு கவனம் செலுத்த வேண்டும். சின்ன சின்ன விஷயங்கள் கூட அவர்களின் வாழ்க்கையை பறித்துவிடக்கூடிய அளவுக்கு பெரிதாக மாறலாம்.
குழந்தைகள் இருக்கும் வீட்டில் ஒவ்வொரு விஷயங்கள் மீதும் பொருட்களின் மீதும், அன்றாட செயல்பாடுகள் மீதும் கவனம் இருக்க வேண்டியது அவசியமான ஒன்று. குழந்தைகள் வளர்ப்பு என்பது ஒரு தவம். நாம் செய்யும் சிறு தவறு கூட தவத்தை இல்லாமல் செய்துவிடும். அதுபோன்ற நிலைதான் இப்போது சென்னையில் அரங்கேறியிருக்கிறது.
சென்னையில் ஃபிரிட்ஜை திறந்த 5 வயது சிறுமி மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அந்த குடும்பத்தையே நிலை குலைய செய்துள்ளது.
சென்னை ஆவடி நந்தவன மேட்டூர் நேதாஜி தெருவைச் சேர்ந்தவர் கவுதம். இவரது மனைவி பிரியா. இந்த தம்பதிக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இதில் மூத்த மகள் ரூபாவதிக்கு 5 வயது. இவர் ஆவடியில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று வழக்கம்போல் பள்ளிக்கு சென்றுவிட்டு மாலை வீடு திரும்பியுள்ளார். வீட்டிற்கு வந்த குழந்தை அங்கு இருந்த ஃபிரிட்ஜை திறந்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக ஃபிரிட்ஜில் மின் கசிவு இருந்துள்ளது. இதையறியாத குழந்தை ரூபாவதி ஃப்ரிட்ஜை தொட்டதும் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். நிலை குலைந்த சிறுமியை தூக்கிக்கொண்டு அவரது தாய் ப்ரியா மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
ஆனால் அங்கு சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த போலீசார் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.