மேலும் அறிய
Advertisement
Chennai Airport: 20 சுங்கத்துறை அதிகாரிகள் திடீர் இடம் மாற்றம்..! குருவிகளால் வந்த வேதனை..!
4 சுங்கத்துறை சூப்பிரண்டுகள் உட்பட, 20 சுங்கத்துறை அதிகாரிகள் திடீர் இடம் மாற்றம், சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு.
சென்னை சர்வதேச விமான நிலையத்தில் கடந்த 14 ஆம் தேதி வியாழக்கிழமை, காலை 8 மணி அளவில், ஓமன் நாட்டு தலைநகர் மஸ்கட்டில் இருந்து ஓமன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் வந்தது. அந்த விமானத்தில் மிகப்பெரிய அளவில் கடத்தல் பொருட்கள் வருவதாக, சென்னை தியாகராய நகரில் உள்ள, மத்திய வருவாய் புலனாய் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை அடுத்து மத்திய வருவாய் புலனாய்வு தனிப்படையினர், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு விரைந்து வந்தனர்.
மஸ்கட்டில் இருந்து வந்த ஓமன் ஏர்லைன்ஸ் விமானத்தின் 186 பயணிகளையும் நிறுத்தி வைத்து சோதனை நடத்தினர். அந்த சோதனை நீண்ட நேரமாக நடந்தது. அதில் 113 பயணிகள் கடத்தல் குருவிகள் என்று கண்டறியப்பட்டது. அதன்பின்பு மற்ற பயணிகளை, மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் வெளியே அனுப்பிவிட்டு, கடத்தல் குருவிகள் 113 பேர்களிடமும், தொடர்ந்து விசாரணையும், சோதனையும் நடத்தினார்கள். இந்த விசாரணை நள்ளிரவு வரை நீடித்தது. கடத்தல் குருவிகளுக்கு சென்னை விமான நிலைய சுங்க அலுவலகத்திலேயே, அமர வைத்து, வாழை இலைகள் போட்டு உணவுகள் பரிமாறப்பட்டன.
அதோடு கடத்தல் குருவிகள் 113 பேரையும் தனித்தனியாக, தனி அறைகளில் வைத்து முழுமையாக சோதனை நடத்தினார். அப்போது அவர்களிடம் இருந்து 13 கிலோ தங்கம், 120 ஐபோன்கள் உட்பட 204 செல்போன்கள், லேப்டாப்புகள், சிகரெட் பண்டல்கள், பதப்படுத்தப்பட்ட குங்குமப்பூக்கள் உள்ளிட்ட கடத்தல் பொருட்களை, அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதன் சர்வதேச மதிப்பு ரூ. 14 கோடி. இதையடுத்து 113 கடத்தல் குருவிகள் மீதும் சுங்கத்துறை சட்ட விதிகளின்படி வழக்குகள் பதிவு செய்து, அவர்களை சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில், ஒரே விமானத்தில், ஒரே நேரத்தில் 113 கடத்தல் குருவிகள் சிக்கியதோடு, அவர்களிடம் இருந்து ரூ. 14 கோடி மதிப்புடைய, 13 கிலோ தங்கம் உள்ளிட்ட கடத்தல் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது, மத்திய வருவாய் புலனாய்வு துறை உயர் அதிகாரிகளிடையே மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தக் கடத்தல் சம்பவத்தில் சென்னை விமான நிலையத்தில், பணியில் உள்ள சிலர் உடந்தையாக இருக்கலாம் என்ற தகவல் வெளியானது. இதை அடுத்து டெல்லியில் உள்ள உயர் அதிகாரிகள், இது பற்றி முழுமையாக விசாரித்து தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவு பிறப்பித்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில், கடந்த 14 ஆம் தேதி வியாழன் அன்று, மஸ்கட் ஓமன் ஏர்லைன்ஸ் விமானம், வந்து தரை இறங்கிய போது, சென்னை விமான நிலைய சுங்கத்துறை பிரிவில் இருந்த அதிகாரிகள், 20 பேர்கள் ஒட்டுமொத்தமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சுங்கத்துறை சூப்பிரண்டுகள் 4 பேர், 16 இன்ஸ்பெக்டர்கள் மொத்தம் 20 பேர், சென்னை விமான நிலையத்தில் இருந்து உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டு, சென்னையில் உள்ள சுங்கத்துறை தலைமை அலுவலகத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். மேலும் இவர்கள் 20 பேரும் உடனடியாக, சென்னை விமான நிலைய பணியிலிருந்து, தங்களை விடுவித்துக் கொண்டு, சுங்கத்துறை தலைமை அலுவலகத்திற்கு செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவை சென்னை விமான நிலைய சுங்கத்துறை முதன்மை ஆணையர் பிறப்பித்துள்ளார்.
இதற்கிடையே சென்னை விமான நிலையத்தில், சுங்கத்துறையில் பணியில் இருந்த உதவி ஆணையர்கள், துணை ஆணையர்கள் சிலரையும், சுங்கத்துறை தலைமை முதன்மை ஆணையர் இடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அதற்கான விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.
சென்னை விமான நிலையத்தில், ஒரே நேரத்தில் ஒரே விமானத்தில், 113 கடத்தல் குருவிகள் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 13 கிலோ தங்கம் உட்பட ரூ. 14 கோடி கடத்தல் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது, எந்த அளவு பரபரப்பை ஏற்படுத்தியதோ, அதைப் போன்று, அதன் எதிரொலியாக, சென்னை விமான நிலையத்தில், பணியில் இருந்த சுங்கத்துறை அதிகாரிகள் 20 பேர், ஒட்டு மொத்தமாக, ஒரே நேரத்தில் பணியிட மாற்றம் செய்யப்பட்டது, சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
இந்தியா
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion