வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு: சென்னை காவல் ஆணையர்
வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் கூறினார்.
தமிழ்நாட்டில் 234 தொகுதிகளுக்கும் நேற்று சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து, வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டு பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டன.
இந்நிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள லயோலா கல்லூரி மையத்தில் சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் இன்று ஆய்வு செய்தார். இதன்பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், “ஸ்ட்ராங் ரூமில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கண்காணிப்பு கேமராக்கள் மூலம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன” என்றார்.
மேலும், “சென்னையில் நான்கு மையங்களில் வாக்கு எண்ணும் பணி நடைபெற உள்ளது. ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையங்களிலும் 500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். தேர்தல் அன்று விதிமீறல் தொடர்பாக 10 வழக்குகள் பதிவாகியுள்ளன” என்று கூறினார்.