மழையால் ரயில்வேக்கு வந்த சிக்கல்.. மதுராந்தகத்தில் காத்துக் கிடக்கும் ரயில்கள்.. காரணம் என்ன ?
Chengalpattu: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் மழைநீர் தேங்கி நிற்பதால், ரயில்கள் தாமதமாக செல்கின்றன.

மதுராந்தகம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் மழை நீர் சூழ்ந்து இருப்பதால் ரயில்கள், 30 கிலோமீட்டர் வேகத்தில் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன.
குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் 27 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்ததன் அடிப்படையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் பரவலாக கன மழை பெய்து வருகிறது. நேற்று காலை முதல் தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது.
செங்கல்பட்டு மாவட்ட நிலவரம் என்ன ?
செங்கல்பட்டு மாவட்டத்தை பொருத்தவரை செங்கல்பட்டில் 10 சென்டிமீட்டர் மழையும், திருப்போரூரில் 43 மில்லி மீட்டர் மழையும், திருக்கழுக்குன்றத்தில் 70 மில்லி மீட்டர் மழையும், மதுராந்தகத்தில் 123 மில்லிமீட்டர் மழையும், செய்யூரில் 46 மில்லிமீட்டர் மழையும் தாம்பரத்தில் 48 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று காலை முதலே கன மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பகுதியில் சுமார் 12 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதன் காரணமாக மதுராந்தகத்தில் பல்வேறு இடங்களில் மழையால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் மதுராந்தகம் ரயில் நிலையத்தில் உள்ள ரயில் தண்டவாளம் சுற்றி அதிகப்படியான வெள்ள நீர் செல்வதால் தென்மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி செல்லும் ரயில்கள் தாமதமாக செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
நெல்லை, விழுப்புரம், தூத்துக்குடி ,திருச்சி, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து சென்னைக்கு செல்லும் ரயில்கள் ஒரு மணி நேரம் வரை தாமதமாக செல்கின்றன. இந்த பகுதியில் 30 கிலோமீட்டர் வேகத்தில் இயக்க ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன. ரயில்கள் தாமதமாக புறப்பட்டு செல்வதால் பயணிகள் மிகவும் .சிரமம் அடைந்துள்ளனர்.





















