மாமல்லபுரத்தில் ஒரு உயிர் கூட போகக்கூடாது.. முதல்முறையாக உயிர் காப்பாளர் நியமனம்.. மாவட்ட நிர்வாகம் அதிரடி...
Mamallapuram Beach Life Guard : மாமல்லபுரம் பகுதியில் கடலில் சிக்கி உயிருக்கு போராடுபவர்களை காப்பாற்ற உயிர் காப்பாளர் நியமனம்
செங்கல்பட்டு மாவட்டத்திலேயே முதல் முறையாக கடலில் சிக்கியவர்களை காப்பாற்ற உயிர் காப்பாளர் ( Life Guard ) நியமிக்கப்பட்டுள்ளார். உயிர் காப்பாளருக்கு நியமன ஆணையை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
மாமல்லபுரம் கடற்கரை - Mamallapuram Beach
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் கடற்கரை கோயிலில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் மிக முக்கிய இடமாக திகழ்ந்து வருகிறது. நாள்தோறும் தமிழ்நாடு மட்டுமில்லாமல், வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிவது வழக்கமாக உள்ளது. வார இறுதி நாட்களிலும் விடுமுறை நாட்களிலும் ஏராளமான இளைஞர்களும், கடற்கரையில் குளிப்பதற்காகவும் மகிழ்ச்சியாக நேரத்தை செலவு செய்வதற்காகவும் வருகைக்கு புரிவது வழக்கம்.
காவு வாங்கும் மாமல்லபுரம் கடற்கரை
அவ்வாறு வரும் இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் சில சமயம் தடையை மீறி, கடலில் இறங்கி ஆபத்தான பகுதிகளில் குளிப்பதால் அபாயம் ஏற்படுகிறது. அவ்வாறு கடலில் இறங்கி குளிக்கும் நபர்கள் அலையில் சிக்கி உயிரிழக்கும், நிலையும் தொடர்ந்து வருகிறது. இதுவரை மாமல்லபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார கடற்கரையில் மட்டும் கடந்த 5 ஆண்டுகளில் 50க்கும் மேற்பட்ட, மக்கள் உயிரிழந்துள்ளனர்.
இரண்டு மாதங்களுக்கு முன்பு கூட கொடூர சம்பவம்
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஆந்திராவில் இருந்து 40 பேர் கொண்ட மாணவர்கள் மாமல்லபுரத்தை சுற்றி பார்க்க வருகை புரிந்திருந்தனர். அப்பொழுது மாமல்லபுரம் கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்த பொழுது, 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் அலையில் சிக்கினர். 4 நபர்கள் அதில் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் 6 பேர் உயிரிழந்தனர்.
உயிர் காப்பாளர் - Life Guard
இந்தநிலையில் தொடர்ந்து, மகாபலிபுரம் பகுதியில் உயிரிழப்புகள் நடைபெற்ற வருவதால், நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். இதனை அடுத்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் , மாமல்லபுரம் கடற்கரை பகுதியில் வரும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக் கருதி, உயிர் காப்பாளர் ( Life Guard ) ஒருவரை நியமனம் செய்ய உத்தரவிட்டார்.
இதன் அடிப்படையில் மாமல்லபுரம் சிறப்பு நிலை பேரூராட்சி சார்பில் ஒப்பந்த ஊழியர் கிருஷ்ணராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். மாவட்ட ஆட்சியரை சந்தித்த கிருஷ்ணராஜ் நியமன ஆணையை நேரில் பெற்றுக் கொண்டார். ஒப்பந்த ஊழியரிடம் மாவட்ட ஆட்சியர், எந்த மாதிரியான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தல் கொடுத்தார். தொடர்ந்து கிருஷ்ணராஜுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரவும் உத்தரவு பிறப்பித்தார். மாவட்ட ஆட்சியர் இந்த உத்தரவு பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது
விருப்பப்பட்ட வேலை
இதுகுறித்து கிருஷ்ணராஜ் கூறுகையில் , இதுவரை 50க்கும் மேற்பட்டோர் நபர்களை காப்பாற்றி இருப்பதாகவும், கடற்கரையில் உயிரிழந்தவர்கள் உடல்களையும் மீட்டிருப்பதாகவும், தான் இந்த வேலையை விரும்பி செய்வதாகவும், தனக்கு அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் ஒப்பந்த அடிப்படையில் வேலை கொடுத்திருப்பதற்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும், இதனால் மாவட்ட ஆட்சி இருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் தெரிவித்தார். இனி தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை திறம்பட செய்வேன் எனவும், வேலையை உரிமையுடன் செய்வது தனக்கு மிகவும் உத்வேகத்தை கொடுக்கும் என கிருஷ்ணராஜ் தெரிவித்தார்