Chengalpattu: செங்கல்பட்டு கலெக்டருக்கு வாரண்ட்.. கலெக்டரை அதிர வைத்த நீதிபதி.. நடந்தது என்ன?
"செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியருக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், ஆஜராகாத செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியருக்கு வாரண்ட் பிடிக்கப்பட்டது"

"நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், நேரில் ஆஜராகாத செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியருக்கு எதிராக வாரண்ட், பிறப்பித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது"
கருணை அடிப்படை வேலை
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த ஆனைகுன்றம் கிராமத்தில், கிராம உதவியாளராகப் பணியாற்றிய முனுசாமி என்பவர் கடந்த 2001-ம் ஆண்டு திடீரென உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து முனுசாமி மகன் ராஜகிரி, தந்தை உயிரிழப்பிற்கு பிறகு, தனக்கு கருணை அடிப்படையில் வேலை வாய்ப்பு வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்
கருணை அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்ற, மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், மூன்று மாதங்களுக்குள் ராஜகிரிக்கு கருணை அடிப்படையில், பணி வழங்க வேண்டும் என கடந்த 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நீதிமன்றம் மூலம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்தநிலையில் நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி ராஜகிரி, மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தாக்கல் செய்தார்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
சென்னை உயர்நீதிமன்றத்தில், வழக்கை விசாரித்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரை நேரில் ஆஜராக உத்தரவிட்டு, சட்டப்பூர்வ நோட்டீஸ் பிறப்பித்தார். இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மாவட்ட ஆட்சியர் ஆஜராகவில்லை. ஏற்கனவே செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியருக்கு வாரண்ட்
இதையடுத்து, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியருக்கு எதிராக ஜாமீனில் வெளிவரக் கூடிய வாரண்ட் பிறப்பித்த நீதிபதி, விசாரணையை ஏப்ரல் 4-ம் தேதிக்குத் தள்ளிவைத்தார். இது தொடர்பாக அறிவிப்பு வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு அரசு பணி இருந்ததால் ,செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஆஜராகவில்லை என அரசு தரப்பு வழக்கறிஞர் வாதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.




















