Chengalpattu Smart City: சென்னை வேண்டாம்... செங்கல்பட்டே போதும்.. குட்டி சென்னையாய் மாறப்போகும் செங்கல்பட்டு...!
Chengalpattu Town: "செங்கல்பட்டு நகரத்தை நவீனமாக மாற்றி அமைக்கும் முயற்சியில், சிஎம்டிஏ நிர்வாகம் களத்தில் இறங்கியுள்ளது"

சென்னை புறநகர் பகுதியாக இருக்கக்கூடிய செங்கல்பட்டு, தனி மாவட்டமாக உருவாக்கிய பிறகும் வளர்ச்சியில் பின்தங்கிய நகரமாகவே இருந்து வருகிறது. சென்னை புறநகர் பகுதியாக இருக்கக்கூடிய செங்கல்பட்டு நாள்தோறும் பல ஆயிரக்கணக்கானோர் வந்து செல்லக்கூடிய இடமாகவும் இருந்து வருகிறது.
செங்கல்பட்டு ரயில் நிலையம் சென்னை புறநகர் பகுதியில் இருக்கக்கூடிய மிகப்பெரிய ரயில் நிலையங்களில் ஒன்றாகவும் இருந்து வருகிறது. ஆனால் செங்கல்பட்டின் வளர்ச்சியோ, எதிர்பார்த்ததை விட குறைவாகவே இருந்து வருகிறது.
குறிப்பாக செங்கல்பட்டில் முறையான சாலை வசதிகள் இல்லாதது மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது. அதேபோன்று போதுமான திடக்கழிவு மேலாண்மை, மழைநீர் வடிகால் வசதி போன்ற அடிப்படை வசதிகளும் இல்லாததால் பொதுமக்கள் தொடர்ந்து அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் செங்கல்பட்டில் இருக்கும் அடிப்படை பிரச்சனைகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட காலமாகவே கோரிக்கை வைத்து வருகின்றனர்.
ஸ்மார்ட் நகர திட்டம்
இந்தநிலையில் செங்கல்பட்டில் இருக்கும் பிரச்சனைகளை தீர்க்க சென்னை பெருநகர மேம்பாட்டு ஆணையம் பல்வேறு திட்டங்களை கையில் எடுத்துள்ளது. செங்கல்பட்டில் அனைத்து வித அடிப்படை வசதிகளையும் நிவர்த்தி செய்யும் வகையில் இந்த திட்டங்கள் இருக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதன்மூலம் செங்கல்பட்டு அகலமான தெருக்கள், வளர்ந்த நகரங்களில் இருப்பதைப் போன்று நடைபாதையுடன் கூடிய அமைப்பு ஆகியவை உருவாக்கப்பட உள்ளது. அதேபோன்று குடியிருப்பு மண்டலங்களும் திட்டமிட்டு கட்டமைக்கும் வகையில் இந்த திட்டம் இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. தலைநகரை விரைவில் சென்று அடையும் வகையிலும் இந்த மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.
சிஎம்டிஏ வெளியிட்ட டெண்டர்
செங்கல்பட்டில் புதிய நகரத்திற்கான விரிவான மேம்பாட்டு திட்டத்தை தயாரிப்பதற்காக டெண்டர்கள் விடப்பட்டுள்ளன. இதன் மூலம் 2025 ஆண்டு முதல் 2045 வரை எப்படி எல்லாம் நகரத்தை கட்டமைக்க வேண்டும் என்பது குறித்த தகவல்கள் பெற உள்ளன.
இந்த திட்டத்தின் முக்கிய சிறப்பம்சமாக சென்னை நகரை சார்ந்திருக்காத வகையில், இந்த நகரை கட்டமைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் உள்ளூர் மக்களுக்கு பெரும் அளவில் வேலை வாய்ப்பு உருவாகும் என கணிக்கப்பட்டுள்ளது.
எந்தப் பகுதியில் இந்த நகரம் அமைய உள்ளது ?
செங்கல்பட்டு மாவட்டத்தை பொருத்தவரை செங்கல்பட்டு, திருப்போரூர் மற்றும் திருக்கழுக்குன்றம் ஆகிய பகுதிகளை சேர்ந்த 60 கிராமங்களில் உள்ளடக்கிய வகையில் இந்த புதிய நகர திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மேலும், சென்னைக்கு அருகே ஆறாவது செயற்கைக்கோள் நகரமாக மகாபலிபுரம் உருவாக்கப்படும் என ஏற்கனவே, அறிவிப்பு வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் இப்பகுதியில் இருக்கும் கிராமங்கள் சர்வதேச தரத்திற்கு மாற்றப்பட உள்ளது. மேலும் மகாபலிபுரத்தில் உள்ள புராதான சின்னங்களை பாதிக்காத வகையில், சர்வதேச தரத்திற்கு உயர்த்தும் திட்டமும் கையில் எடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இப்பகுதியில் அதிக அளவு முதலீடுகள் ஈர்க்க முடியும் எனவும் தமிழக அரசு திட்டம் தீட்டியுள்ளது
செங்கல்பட்டு மாவட்டத்தில் மெட்ரோ
துணை நகரம் திட்டத்தின் ஒரு பகுதியாக மகாபலிபுரம் வரை மின்சார ரயில் இணைப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேபோன்று, இப்பகுதியில் எதிர்காலத்தில் மெட்ரோ திட்டமும் செயல்படுத்தப்பட உள்ளன. அடுத்த 20 ஆண்டுகளுக்குள் இந்த திட்டங்களை செயல்படுத்துவதற்கான இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.





















