ஐயா குளத்தை காணோம்.. கலெக்டரை சூழ்ந்த கிராம மக்கள்.. செங்கல்பட்டு நடந்தேறிய சம்பவம்
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே குளத்தை காணவில்லை என கிராம மக்கள் புகார் அளித்துள்ளனர்.

திரைப்படத்தில் வரும் வடிவேலு காமெடி போல் குளத்தை காணவில்லை, என செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் புகார் அளித்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
குளத்தை காணவில்லை என புகார்
சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் அமைந்துள்ள படூர் ஊராட்சி என்பது மிகவும் வேகமாக வளர்ந்து வரும் ஊராட்சியாக உள்ளது. இப்பகுதியில் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இதில் அடுக்குமாடி குடியிருப்புகள், கல்லூரி வளாகங்கள், பள்ளி கட்டடங்கள் தனிநபர் குடியிருப்பு கட்டிடங்கள் உள்ளூர் வாசிகள் என நாளுக்கு நாள் வளர்ந்த வண்ணமாக இருந்து வருகிறது.
படூர் பாரதியார் தெரு சாலை முடிவில் அமைந்துள்ள தனியார் மனைப்பிரிவு நிறுவனத்திற்கு உள்ளே அமைந்துள்ள சர்வே என் 227 இல் உள்ள 48 சென்ட் பரப்பளவில் அரசு சொந்தமான சிறிய குளம் அமைந்திருந்ததாக கூறப்படுகிறது. அதனை தனியார் மனை பிரிவு நிர்வாகம் ஆக்கிரமிப்பு செய்து அவ்விடத்தில் இரும்பு தகரத்தால், செட் அமைத்து விட்டதாகவும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
மீண்டும் கிராம மக்கள் புகார்
சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்கனவே இந்த பகுதியில் தனியார் நிறுவனம், தங்களிடம் என கூறிய போது, கிராம மக்கள் புகாரின் அடிப்படையில் வருவாய்த்துறையினர் மூலம் தகரசெட்டுகளை அப்புறப்படுத்தினர். தற்பொழுது மீண்டும் தனியார் மனைப்பிரிவு நிர்வாகத்தினர் அந்த இடத்தை தனியார் நிறுவனம் எடுத்துக் கொள்ள முயற்சி செய்வதாக கிராம மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து வட்டாட்சியர் அலுவலகத்தில் பலமுறை புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறியும் தனியார் மனை பிரிவு நிறுவனத்தால், எடுத்துக்கொள்ளப்பட்ட குளத்தை மீட்டு தர வலியுறுத்தி அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குளத்தை காணவில்லை என புகார் அளித்தனர். மறுபுறம் அந்த இடம் தங்களுக்கு தான் சொந்தம் என, தனியார் நிறுவனம் ஆவணங்கள் வைத்திருப்பதாகவும் தெரிவித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.





















