தூத்துக்குடியில் இரவு விமான சேவை எப்போது - விமான நிலைய இயக்குநர் விளக்கம்
சூரியஒளி மின்சாரம் வழங்கவும், வல்லநாடு மலை விளக்குகளுக்கு டெண்டர் கோரப்பட்டு அதற்காக பணிகள் வரும் மார்ச் 31ம் தேதிக்குள் பணிகள் முடிக்கப்படும். இதன்மூலமாக இரவு தரையிறங்கும் நடவடிக்கைகள் எளிதாகும்
தூத்துக்குடி விமான நிலையத்தில் விமான நிலைய சுற்றுச்சூழல் மேலாண்மைக் குழு மற்றும் ஏரோட்ரோம் குழுவின் ஆலோசனைக் கூட்டம் ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமையில் நடைபெற்றது.
தூத்துக்குடி விமான நிலையத்தில் தற்போது ஒரே நேரத்தில் 80 பயணிகள் வந்து செல்லும் வகையிலான பயணிகள் முனையம்தான் உள்ளது. ஒரே நேரத்தில் 600 பயணிகள் வந்து செல்லும் வகையில் புதிய பயணிகள் முனையம் அமைக்கப்படுகிறது. இந்த பயணிகள் முனையத்தில் பயணிகளுக்கான அனைத்து வசதிகள், முக்கிய பிரமுகர்கள் ஓய்வறை, பண பரிமாற்ற மையம், ஏடிஎம் மையம், கேன்டீன் வசதி, பயணிகள் மற்றும் உடமைகளை பரிசோதிக்கும் வசதி, மருந்து கடை, விமான டிக்கெட் மையங்கள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இடம் பெறும். இதே போன்று விமான நிலையத்தில் புதிதாக விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு கோபுரம் மற்றும் தீயணைப்பு நிலையமும் அமைக்கப்படுகிறது. இந்த பணிகள் ரூ.195 கோடியே 32 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்படுகிறது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் விமான நிலைய ஓடுதளத்தை சுற்றியுள்ள பகுதிகளில் பறவைகள் மற்றும் வனவிலங்குகள் வராமல் தடுப்பது மற்றும் இதற்காக நடத்தப்பட்ட கூட்டுப் பறவைப் பகுதி கணக்கெடுப்பு குறித்தும், விமான நிலையத்தில் இருந்து கழிவு, குப்பைகளை அகற்றுவதற்கான செயல் திட்டம் குறித்தும், வல்லநாடு மலையில் விளக்குகள் அமைப்பது குறித்தும், விமான நிலையத்தை சுற்றியுள்ள தடைகளை நீக்குவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
மேலும், விமான நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் மழைக்காலங்களில் வெள்ளம் ஏற்படுவதை தவிர்க்க இயற்கை ஆதாரங்கள் மற்றும் செயல்திட்டத்தை அறியவும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
இதற்கிடையே, சிவத்தையாபுரத்தில் விமான நிலைய ஓடுபாதை 28ல் திறந்த நிலத்தில் கோழிக்கழிவுகளை கொட்டுவது கண்டறியப்பட்டுள்ளது. அங்கு இன்னும் விற்பனையாளர்கள் கோழிகளின் கழிவுகளை கொட்டுவதால் அப்பகுதிக்கு பறவைகள் அதிகம் வருகின்றன.
எனவே, இதனை தடுத்திட கூட்டாம்புளி கிராமத்தில் கால்நடைக் கழிவுகள் மேலாண்மை ஆலை அமைத்து, இதனை முறைப்படுத்த வேண்டும். இது குறித்து அனைத்து ஊராட்சிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்புமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்தார்.
மேலும், விமான நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் பறவைகளின் நடமாட்டத்தை ஆய்வு செய்வதற்கு ஒருவர் நியமிக்கப்படுவார் என்றும் மாவட்ட வன அலுவலர் அபிஷேக் தோமர் தெரிவித்தார்.
இந்நிலையில், சூரியஒளி மின்சாரம் வழங்கவும், வல்லநாடு மலை விளக்குகளுக்கு டெண்டர் கோரப்பட்டு அதற்காக பணிகள் வரும் மார்ச் 31ம் தேதிக்குள் பணிகள் முடிக்கப்படும். இதன்மூலமாக இரவு தரையிறங்கும் நடவடிக்கைகள் எளிதாகும் என்று விமான நிலைய இயக்குநர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்