கப்சாவிட்ட அமைச்சர் ஆதவ் அர்ஜூனா...மாரத்தானில் விஜயை விட அதிக தூரம் ஓடிய ஜம்மு முதல்வர்!
இந்தியாவில் 3 கிலோமீட்டர் மாரத்தான் ஓடிய ஒரே முதல்வர் விஜய் என அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவின் கருத்து தவறானது என நிரூபனமாகியுள்ளது

தமிழக முதலமைச்சர் விஜய், சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சென்னை இன்ரியா வளாகத்தில் நடைபெற்ற 'ஸ்டார்ட் ரன், ஸ்டாப் டிரக்ஸ்' (Start Run, Stop Drugs) விழிப்புணர்வு மாரத்தானில் இன்று பங்கேற்றார். ஆயிரக்கணக்கான இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து அவர் ஓடியது சமூக வலைதளங்களில் பெரும் கவனத்தை ஈர்த்தது. போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிராக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, "இந்தியாவிலேயே 3 கிலோமீட்டர் மாரத்தான் ஓடிய ஒரே முதலமைச்சர் விஜய்தான். தமிழ்நாட்டில் இதற்கு முன் இருந்த எந்த முதல்வரும் மாரத்தால் ஓட்டத்தில் கலந்துகொண்டு மூன்று கிலோமீட்டர் ஓடியது கிடையாது என்று தெரிவித்திருந்தார். இந்த கருத்து சமூக வலைதளங்களில் வேகமாக பரவிய நிலையில், அதன் உண்மைத் தன்மை குறித்து பலரும் கேள்வி எழுப்பினர்.
21 கிலோமீட்டர் மாரத்தான் ஓடிய ஜம்மு முதல்வர்
அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவின் கருத்து சரியானது அல்ல என்பதற்கு ஏற்கனவே பல உதாரணங்கள் உள்ளன. குறிப்பாக ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் ஒமர் அப்துல்லா, கடந்த ஆண்டு ஸ்ரீநகரில் நடைபெற்ற ஹாஃப் மாரத்தானில் 21 கிலோமீட்டர் தூரத்தை முழுமையாக ஓடி முடித்தார். அந்தப் போட்டி போதைப்பொருள் பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடனும் நடத்தப்பட்டது.
அதுமட்டுமல்லாமல், இந்த ஆண்டு மார்ச் மாதம் ஜம்முவில் நடைபெற்ற முதல் சர்வதேச மாரத்தானிலும் ஒமர் அப்துல்லா 21 கிலோமீட்டர் ஹாஃப் மாரத்தானில் பங்கேற்று முழு தூரத்தையும் ஓடி முடித்தார். மழை பெய்த சூழலிலும் ஆயிரக்கணக்கானோருடன் இணைந்து அவர் ஓடியது தேசிய அளவில் செய்தியாக வெளியானது. இந்நிகழ்ச்சியும் இளைஞர்களிடையே உடற்பயிற்சி மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்திலேயே நடத்தப்பட்டது.
இதனால், "இந்தியாவிலேயே மாரத்தான் ஓடிய ஒரே முதலமைச்சர்" அல்லது "3 கிலோமீட்டர் ஓடிய ஒரே முதலமைச்சர்" என்ற வகையில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா கூறிய தகவல் உண்மைக்கு புறம்பானது என சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஒமர் அப்துல்லா மட்டுமல்லாமல், பல மாநில முதலமைச்சர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் கடந்த காலங்களில் உடல்நலம் மற்றும் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக மாரத்தான் போட்டிகளில் பங்கேற்றுள்ளனர். எனவே, முதலமைச்சர் விஜய் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தானில் பங்கேற்றது பாராட்டத்தக்க நடவடிக்கையாக இருந்தாலும், அதனை இந்தியாவில் முதன்முறையாக நிகழ்ந்த சம்பவம் என அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவின் கூறியிருப்பது மிகைப்படுத்தப்பட்ட கருத்தாகும்
ட்ரெண்டிங் செய்திகள்






















