நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் அளப்பதில் முறைகேடு - திருவரூரில் விவசாயிகள் போராட்டம்
நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய முடியாமல் விவசாயிகள் நெல் மூட்டைகளை அறுவடை செய்து வயல் மற்றும் வீடுகளில் வைக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டுகின்றனர்
திருவாரூர் மாவட்டம் முழுவதும் சம்பா மற்றும் தாளடி சாகுபடிக்கான அறுவடை பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நெல் கொள்முதல் நிலையங்களில் ஆன்லைன் மூலமாக பதிவு செய்து விவசாயிகள் நெல் மூட்டைகளை விற்பனை செய்வது தொடர்பாக பல்வேறு பிரச்சினைகளில் இருந்து வருவதாக விவசாயிகள் ஆன்லைன் பதிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்
திருவாரூர் மாவட்டத்தில் 3 லட்சத்து 75 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா தாளடி நெற்பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன. தற்போது அறுவடை பணிகள் நடைபெற்று வரும் நிலையில் நெல்மணிகளை நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஆன்லைன் மூலம் பதிவு செய்த விவசாயியிடம் இருந்து முன்னுரிமை அடிப்படையில் நெல் கொள்முதல் செய்து வருகின்றனர். திருவாரூர் மாவட்டம் முழுவதும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் 450 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் திருவாரூர் அருகே உள்ள அடியக்கமங்கலம் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையமானது கடந்த ஜனவரி 24-ஆம் தேதியன்று திறக்கப்பட்டது. இந்த நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் அடியக்கமங்கலம் சேமங்கலம் கானூர் கிடாரம்கொண்டான் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் நெல் மூட்டைகளை விற்பனை செய்து வருகின்றனர். இதுவரை 3000 நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில் அடியக்கமங்கலம் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆன்லைன் பதிவு செய்வதில் கால தாமதம் ஆவதாகவும், இதனால் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய முடியாமல் விவசாயிகள் நெல் மூட்டைகளை அறுவடை செய்து வயல் மற்றும் வீடுகளில் வைக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டுகின்றனர் மேலும் ஒரு மூட்டை நெல் 40 கிலோ 580 கிராம் பிடிக்க வேண்டிய நிலையில் கொள்முதல் நிலைய ஊழியர்கள் நெல்லின் எடையை 42 கிலோ எடை வைத்து அதிக அளவில் ஊழியர்கள் பிடிப்பதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் மற்றும் கொள்முதல் நிலைய அதிகாரிகள் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி இனிமேல் இதுபோன்ற தவறுகள் நடக்காமல் விரைவாக கொள்முதல் செய்யப்படும் என உறுதி அளித்ததன் அடிப்படை விவசாயிகள் கலைந்து சென்றனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிஜ்க்கை க்ளிக் செய்யவும்:- மூடப்படுகிறதா அம்மா மினி கிளினிக்குகள் - இனி பணிக்கு வரவேண்டாம் என மெசேஜ் வந்ததால் மருத்துவர்கள் போராட்டம்