மேலும் அறிய
Advertisement
திருவாரூர் : இதுவரை 913 கோடி ரூபாய் விவசாயக் கடன் வழங்கப்பட்டுள்ளது - ஆட்சியர் தகவல்..!
ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் தற்போது வரை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வணிக வங்கிகள் மூலமாக 913.89 கோடி ரூபாய் விவசாயிகளுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், உள்ளிட்ட மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி, என 3 போகம் விவசாயம் செய்து வந்தனர். இந்நிலையில் கடந்த 9 ஆண்டுகளுக்கும் மேலாக மேட்டூர் அணை திறக்கப்படாத காரணத்தினாலும், போதிய பருவமழை இல்லாத காரணத்தினாலும், சம்பா சாகுபடியை மட்டும் விவசாயிகள் செய்து வந்தனர். இந்நிலையில் விவசாயிகள் பல்வேறு பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகி கடன் பெற்று விவசாயம் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில் கடந்த ஆண்டு மேட்டூர் அணை உரிய நேரத்தில் திறக்கப்பட்டதால் குறுவை சம்பா தாளடி என மூன்று போகம் சாகுபடி விவசாயிகள் செய்தனர்.
இந்நிலையில் இந்த ஆண்டு ஜூன் 12ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மேட்டூர் அணையை திறந்து வைத்ததன் மூலம் இந்த ஆண்டு குறுவை சாகுபடி பணிகளை விவசாயிகள் தற்போது தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்தில் மட்டும் தற்போது வரை 93 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இதில் 70 சதவிகிதம் மேட்டூர் அணையில் இருந்து வரும் நீரை மட்டுமே நம்பி சாகுபடி பணியில் விவசாயிகள் மேற்கொள்கின்றனர். மீதமுள்ள 30% விவசாயிகள் ஆழ்துளை கிணறுகள் மூலமாக உள்ள தண்ணீரை நம்பி விவசாய பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கொரோனா தாக்கத்தின் காரணமாக கடந்த ஓராண்டுக்கு மேலாக வேலை இல்லாமல் தவித்து வந்ததன் காரணமாக விவசாயிகள் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர்.
மேலும் இடுபொருட்களின் விலை உயர்ந்துள்ளதால் விவசாயத்திற்குத் தேவையான இடுபொருள்கள் வாங்குவதற்கு கைகளில் பணம் இல்லாத காரணத்தினால் தனி நபர்களிடம் அதிக வட்டிக்கு கடன் பெற்று விவசாயம் செய்து வருவதாக திருவாரூர் மாவட்டத்திலுள்ள ஏழ்மையான விவசாயிகள் தெரிவிக்கின்றனர். ஆகவே விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கிகள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாக நிபந்தனையின்றி கடன்கள் வழங்க வேண்டும் என தொடர்ந்து திருவாரூர் மாவட்ட விவசாயிகள் தமிழ்நாடு அரசிற்கு கோரிக்கை வைத்து வந்தனர். அதனடிப்படையில் தமிழ்நாடு அரசு திருவாரூர் மாவட்டத்திற்கு கூட்டுறவு சங்கங்கள் மூலமாக குறுவை சம்பா தாளடி என 3 போகத்திற்கு விவசாய கடன் 300 கோடி ரூபாய் விவசாய கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாக 2,900 கோடி விவசாய கடன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
திருவாரூர் மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் தற்போது வரை கூட்டுறவு சங்கங்கள் மூலமாக 2657 விவசாயிகளுக்கு, 9.42 கோடி விவசாய கடன் மற்றும் 6.5 கோடி விவசாய நகை கடன் ஆகமொத்தம் 15.47 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளதாகவும், மற்றும் வணிக வங்கிகள் மூலமாக 55 ஆயிரத்து 938 விவசாயிகளுக்கு, 15.89 கோடி விவசாய கடன் மற்றும் 898 கோடி விவசாய நகை கடன் ஆகமொத்தம் 913.89 கோடி ரூபாய் விவசாயிகளுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
விவசாயிகளுக்கு நகைக்கடன் மற்றும் விவசாயக்கடன் வழங்கப்பட்ட நாளிலிருந்து இந்த ஆண்டுதான் இதுவரை அதிகபட்சமான தொகை வழங்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த ஆண்டு குறுவை சாகுபடிக்கு மட்டும் 34 கோடி கடன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு கடன் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு இதுவரை மட்டும் 913.89 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதுவே விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ள உச்சபட்ச கடன் தொகையாகவும் கருதப்படுகிறது. மேலும் பழைய கடன் வாங்கிய விவசாயிகளுக்கு புதிய கடன் வழங்கப்படமாட்டாது என கூட்டுறவு வங்கிகள் தெரிவித்து வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். ஆகையால் எந்த நிபந்தனையுமின்றி விவசாயிகளுக்கு புதிய விவசாயக் கடன் வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையையும் தமிழ்நாடு அரசுக்கு டெல்டா மாவட்ட விவசாயிகள் வைத்துள்ளனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
தஞ்சாவூர்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion