கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம் - பிரதமர் மோடி அறிவிப்பு
கொரோனாவால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு நிவாரண உதவிகளை மாநில முதல்வர்கள் அறிவித்து வரும் நிலையில் 10 லட்சம் நிவாரண உதவியை அறிவித்துள்ளார் பிரதமர் மோடி
இந்தியாவில் கொரோனா தொற்று மிகக்கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் நாடு முழுவதும் ஏராளமான குழந்தைகள் தங்கள் பெற்றோரை இழந்துள்ளனர். கடந்த சில வாரங்களாக நாடு முழுவதும் நிலவி வரும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டை குறைக்கும் நடவடிக்கைகளிலும் தடுப்பூசி போடுவதை ஊக்கபடுத்துவதை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளிலும் மாநில அரசுகள் ஈடுபட்டு வந்த நிலையில் தற்போது பெற்றோரை இழந்த குழந்தைகள் மீது கவனம் செலுத்த தொடங்கியுள்ளன. கொரோனா தொற்று காரணமாக தங்களின் இரண்டு பெற்றோரையும், காப்பாளர்களையும் இழந்துள்ள குழந்தைகளுக்கு 18 வயது நிரம்பும் வரை மாதந்தோறும் உதவித் தொகையும் 23 வயது நிரம்பும்போது 10 லட்சம் ரூபாய் ரொக்கமும் பி.எம்.கேர்ஸ் நிதியில் இருந்து வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களுக்கு புதிதாக இருந்தாலும் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாத உதவித் தொகையும் நிவாரணத் தொகையையும் அளிக்கும் திட்டத்தை ஏற்கெனவே ஆந்திரா, கேரளா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் அறிவித்துவிட்டன.
நேற்றைய தினம் கேரள முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்ட அறிவிப்பில் கேரள மாநிலத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தொடக்கத்தில் 3 லட்சம் வைப்புத் தொகையும் 18 வயது நிரம்பும் வரை மாத உதவித்தொகையாக ரூபாய் 2ஆயிரம் வழங்கப்படும் என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கொரோனா தொற்றால் பெற்றோர்களை இழந்து ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகளுக்கு அவர்களது பெயரில் தலா 5 லட்சம் வைப்புத் தொகையாக வைத்து 18 வயது நிறைவடையும் போது அவர்களுக்கு வட்டித் தொகையுடன் அதனை வழங்கவும் 18வயது நிறைவடையும் வரை உதவித் தொகையாக மாதம் தலா 3 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார். மேலும் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு அரசு இல்லங்கள் மற்றும் விடுதிகளில் தங்கிட முன்னுரிமை அளிக்கவும் குழந்தைகளின் பட்டப்படிப்பு வரையிலான கல்வி மற்றும் விடுதிக்கட்டணங்களை அரசே ஏற்கும் எனவும் கொரோனா தொற்றால் தாய் அல்லது தந்தையை இழந்து வாடும் குழந்தைகளுக்கும் அவர்களின் ஒற்றை பெற்றோருக்கும் உடனடி நிவாரணமாக 3 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
ஒடிஷா மாநிலத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு இலவச கல்வியும் கணவரை இழந்த பெண்களுக்கு உதவித் தொகையும் வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் நவீன்பட்நாயக்கும் ஆந்திராவில் பெற்றோரை இழந்த குழந்தைகள் பெயரில் 10 லட்சம் வைப்புத் தொகை செலுத்தப்படும் என அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியும் மத்திய பிரதேசத்தில் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு 5000 நிதி உதவியும் வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சௌகானும் ஏற்கெனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.