The Vaccine War Review: தேசப்பற்று.. கொஞ்சம் வதந்தி.. கொஞ்சம் பிரச்சாரம்.. கொஞ்சம் உணர்ச்சிகள்.. வாக்ஸின் வார் திரைப்பட விமர்சனம்..
அவ்வப்போது பிரதமரைப் பற்றியும் நாட்டுப்பற்றைப் பற்றியும் சில காட்சிகள். அங்கங்கே மதச்சார்பற்ற பாலின சமத்துவம் கடைப்பிடிக்கும் நாடு என்பதைக் காட்ட த்ரி ரோஸஸ் விளம்பர காட்சிகள் நிறைந்திருக்கின்றன!
VIVEK AGNIHOTRI
Nana Patekar , Pallavi Joshi , Raima Sen , Sapthami Gowda , Anupam Kher, Girija Oak ,Nivedita Bhattacharya
‘காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தை இயக்கிய விவேக் அக்னிகோத்ரி இயக்கத்தில் கடந்த செப்டம்பர் 28-ஆம் தேதி வெளியாகி உள்ளத் திரைப்படம் ’தி வாக்சின் வார்’. நானா படேகர், பல்லவி ஜோஷி, ரைமா சென், சப்தமா கெளடா உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படத்தை, ஐ ஆம் புத்தா நிறுவனம் தயாரித்துள்ளது. தி வாக்ஸின் வார் திரைப்படத்தின் விமர்சனத்தைப் பார்க்கலாம்.
தி வாக்ஸின் வார்
கொரோனா பெருந்தோற்று காலத்தில் வெறும் ஏழே மாதங்களில் இந்திய விஞ்ஞானிகள் சொந்தமாக ஒரு தடுப்பு மருந்தை கண்டுபிடித்தது இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் மிகப்பெரிய சாதனை என்பதில் எந்த வித மாற்றுக் கருத்தும் இல்லை.
அதே நேரத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வர உலகம் முழுவதும் உள்ள மருத்துவர்கள் பெண்கள், தங்களது குடும்பங்களை தியாகம் செய்து தங்களது உழைப்பை செலுத்தியிருக்கிறார்கள் என்பதை எந்த வகையிலும் கேள்விக்குட்படுத்துவது இந்த விமர்சனத்தின் நோக்கமில்லை. மக்களை உணர்ச்சிவசப்பட வைக்கும் இப்படியான கதைக்களங்களை மையமாக வைத்து வாட்ஸ் ஆப்பில் பரவும் போலி மெசேஜ்களுக்கும் செய்திகளை மக்கள் மனதில் பதிய வைக்க முயற்சித்திருக்கிறார் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி. இங்கு விமர்சிக்கப்படவேண்டியது அதுவே!
வதந்திகள்
கொரோனா பெருந்தொற்று காலத்தில் பல விதமான வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவின. இதில் எது உண்மை, எது இல்லை என்பதுகூட தெரியாத அளவிற்கு அப்படி கோடிக்கணக்கான கட்டுக்கதைகள் இருக்கின்றன. கொரோனா வைரஸ் இயற்கையாக உருவானது இல்லை அது உருவாக்கப்பட்டது என்றும், சீனர்கள் எல்லாவித மிருக இறைச்சியையும் சாப்பிடுவதுதான் இதற்கு காரணம், தங்களது லாபத்திற்காக இந்தியாவில் கோவாக்ஸின் தடுப்பூச்சிக்கு எதிராக மிகப்பெரிய சதி நடந்தது என்றும் பல விதமான வதந்திகள் பரவின.
சரியான வகையில் திட்டமிடாதது, போதிய அளவு மருத்துவ வசதிகள் இல்லாததே இந்தியாவில் மிகப்பெரிய இழப்பு நடந்ததற்கு காரணம் என்று சமூக ஆர்வலர்கள் ஒன்றிய அரசை விமர்சித்தார்கள்.
இப்படி பல்வேறு விதங்களில் தகவல்கள் நிறைந்து கிடக்கும் ஒரு சமூக சூழலில் சினிமா மாதிரியான ஊடகம் கையில் இருந்தால் அதை எப்படி தன்னுடைய சார்புக்கு ஏற்ற மாதிரி மக்களின் மனதில் முட்டாள்தனமான கருத்தை விதைக்கலாம் என்பதற்கு விவேக் அக்னிகோத்ரி மாதிரியான இயக்குநர்கள் மிகப்பெரிய உதாரணம்.
எந்த எந்த இடங்களில் எல்லாம் அரசு விமர்சிக்கப்பட்டதோ அது எல்லாம் இந்தியாவை சுய சார்புடைய நாடாக இருக்க விடாமல் செய்வதற்கு நடந்த சதி என்றுதான் படித்து, சேகரித்து வைத்து போலியான தகவல்களை படம் முழுவதும் சான்றாக காட்டுகிறார். மேலும் மேல் சொன்ன எல்லா வாட்ஸப் வதந்திகளையும் தனித்தனி கதாபாத்திரங்களில் வழி பேச வைக்கிறார். மேலும் அரசை விமர்சிக்கும் பத்திரிகை நிறுவனங்கள் எல்லாம் வெளி நாடுகளில் இருந்து பணம் பெற்று அரசை விமர்சிக்கின்றன என்கிற வன்மத்தை பொதுப்படையாக விதைக்கிறார்.
இது படமா? விளம்பரமா?
சரி படமாக ஏதாவது தேறுமா என்று பார்த்தால் ஒவ்வொரு காட்சிக்கும் ஒரு முறை நாட்டுப்பற்றை த்ரீ ரோஸஸ் விளம்பரம் மாதிரி அடுக்கி வைத்திருக்கிறார். இஸ்லாமிய வெறுப்பை பின்னணி காட்சியில் வைத்து முன்னால் போலி மதச்சார்பின்மையை விளம்பரம் செய்கின்றன வசனங்களும் காட்சிகளும்...
பாரத், விஸ்வ குரு என என ஏதோ பிரதமரின் உரையை கேட்கும் எண்ணம் ஏற்படுகிறது. படத்தில் வில்லனாக சித்தரிக்கப்படும் பெண் பத்திரிகையாளர் கதாபாத்திரம் அரசுக்கு எதிராக தவறான செய்திகளை பரப்புவதாக காட்டப்படும் அதே நேரத்தில் காட்சியில், ரானா அயூப் எழுதிய ‘குஜராத் ஃபைல்ஸ்’ என்கிற புத்தகத்தில் பெயரும் இடம்பெற்றிருக்கிறது.குஜராத் கலவரத்தில் நிகழ்ந்த வன்முறைகளை அரசியல் சூழ்ச்சிகளை வெளிக்கொண்டு வந்த ஒரு புத்தகத்தையும் பொய் என்று சொல்கிறார். இது எல்லாவற்றுக்கும் மேலாக கடையில் பாரத், பாரத் என்று தன் மனம் புளங்காகிதம் அடையும் வரை வசனங்களை எழுதி நானா படேகரிடம் பேச சொல்லிவிட்டார்.
கைதட்டிய ரசிகர்கள்
சினிமா எல்லா தரப்பு நபர்களும் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்து சுதந்திரத்தை கொடுக்கிறது. ஆனால் விவேக் அக்னிகோத்ரி போன்ற இயக்குநர்கள் தங்களது அரசியல் சார்புகளை நிரூபிக்க மட்டுமே சினிமாவை பயன்படுத்துகிறார்கள். அதை எப்படி செய்யவேண்டும் என்றும் அவர்களுக்கு தெரிந்திருக்கிறது.
கொரோனா காலக்கட்டத்தில் தங்களது குடும்பத்தை பிரிந்து இரவு பகலாக வேலை செய்த அனைத்துப் பெண்களுக்கும் சமர்ப்பணம் என்று தொடங்கும் படம், கடைசியில் அதே பெண்களை வாழ்த்துவதுடன் முடிகிறது. நிச்சயம் இந்தப் பாராட்டிற்குரியவர்கள் தான் அந்த பெண்கள். ஆனால் கொரோனா சூழலை விட மற்ற பிற விஷயங்களை தொடர்பில்லாமல் சேர்த்திருந்தது சலிப்படைய வைத்தது