Viduthalai Movie Review: அதிகாரத்தைக் கேள்வி கேட்கும் ‘விடுதலை’ குரல்...வெற்றிமாறன் படம் எப்படி... முழு விமர்சனம் இதோ!
Viduthalai Movie Review in Tamil: வெற்றிமாறனின் விடுதலை படத்தின் முதல் பாகம் இன்று தியேட்டரில் வெளியாகியிருக்கிறது. அந்த படம் தொடர்பான விமர்சனத்தைக் காணலாம்.
வெற்றிமாறன்
சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, கௌதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், தமிழ், இளவரசு
பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியாகியிருக்கும் வெற்றிமாறனின் விடுதலை படத்தின் முதல் பாகம் இன்று தியேட்டரில் வெளியாகியிருக்கிறது. அந்த படம் தொடர்பான விமர்சனத்தைக் காணலாம்.
கதைக்கரு
1987ஆம் ஆண்டில் நடக்கும் கதையாக படம் தொடங்குகிறது. வெளிநாட்டைச் சேர்ந்த சுரங்க நிறுவனம் ஒன்று அருமபுரி மலையின் கனிம வளத்தை அழித்து தொழிற்சாலை அமைக்க அரசு ஒப்புதல் அளிக்கிறது. இதற்கு ஊர் மக்கள் சார்பில் எதிர்ப்பு எழும் நிலையில் அவர்களுக்கு ஆதரவாக மக்கள் படை எனும் புரட்சியாளர்களும் செயல்படுகின்றனர் . இதனிடையே அங்கு நடக்கும் ரயில் குண்டு வெடிப்பு சம்பவத்தின் பழி மக்கள் படை மேல் சுமத்தப்படுகிறது. இந்நிலையில், சம்பந்தப்பட்டவர்களை பிடிக்க ’ஆபரேஷன் கோஸ்ட்’ என்ற திட்டம் கையில் எடுக்கப்படுகிறது. அதில் உள்ளவர்களை பிடிக்க போலீசார் கிராமத்துக்குள் களமிறங்க ஒரு தரப்பினர் அங்கிருக்கும் பொதுமக்களை சித்திரவதை செய்கின்றனர்.
இதற்கிடையில் அந்த ஊருக்கு கடைநிலை காவலராக சூரி பணியில் சேர்கிறார் . அவர் ஊர் மக்களுக்கு உதவி செய்யப்போய் உயரதிகாரியாக இருக்கும் சேத்தனுடன் மோதல் ஏற்படுகிறது. அதேசமயம் சூரி மக்கள் படையில் இருப்பவர்களுக்கு யாரென்று தெரியாமல் மற்றொரு தருணத்திலும் உதவி செய்கிறார்.
தொடர்ந்து, தலைமைச்செயலாளராக வரும் ராஜீவ் மேனன் உத்தரவின் பேரில் விசாரணை நடத்த டிஎஸ்பி கௌதம் மேனன் இந்த கிராமத்திற்கு வருகிறார். அவரின் விசாரணையில் நீண்ட நாள்களாக தேடப்பட்டு வரும் மக்கள் படையின் தலைவர் விஜய் சேதுபதி முகம் வெளிவருகிறது. அவரை ஏற்கெனவே சூரி பார்த்திருப்பதாக தெரிவிக்கிறார்.
அதேசமயம் காவல் துறையினர் மக்கள் படை இடையேயான போராட்டத்தில் காவலர்கள் உயிரிழக்க, சேத்தன் தலைமையில் காவல் துறை அத்துமீறல் ஊர் மக்கள் அனைவர் மீதும் திரும்புகிறது. ஊர் பெண்கள் மீது கட்டவிழ்க்கப்படும் வன்முறையைத் தடுக்க சூரி என்ன செய்கிறார், மக்கள் போராளியாகப் பாதுகாக்கப்படும் விஜய் சேதுபடி பிடிபட்டாரா... அதன் பின்னர் நடப்பது என்ன என்பது தான் மீதிக்கதை.
சூரியின் எழுச்சி!
படத்தின் தொடக்கம் முதல் சூரி கான்ஸ்டபிள் குமரேசன் கதாபாத்திரத்தில் கனக்கச்சிதமாகப் பொருந்தி கதையைத் தாங்கி நம்மை அழைத்துச் செல்கிறார்.
கடமை தாண்டி நாயகி பவானிஸ்ரீயின் பாட்டிக்கு உதவுவது, மக்களுக்கு உதவுவது தான் போலீஸின் கடமை என அழுத்தமாக சொல்வது,செய்யாத தவறுக்கு மன்னிப்பு கேட்க மறுப்பது,நிர்வாணப்படுத்தப்படும் ஊர் பெண்களுக்காக உயர் அதிகாரிகளிடம் போராடி கையறு நிலையில் தவிப்பது, ஆக்ஷன் காட்சிகள் என தன் நடிப்பாலும் உழைப்பாலும் சூரி அதகளப்படுத்தியுள்ளார். கதை நாயகனாகக் கலக்கியிருக்கும் சூரிக்கு வெல்கம் பொக்கே!
மக்கள் போராளியாக மாறிய மக்கள் நாயகன்!
பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே இரண்டாம் பாதியில் அதகளமாக தன் முகத்தை முழுதாகக் காண்பித்து எண்ட்ரி கொடுக்கிறார் விஜய் சேதுபதி. அது அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தினாலும், பெரிய வசனங்கள் இல்லாமல் தன் செயல்பாடுகளின் மூலமே விஜய் சேதுபதி மக்கள் படையின் தலைவராக அழுத்தமாக படத்தில் முத்திரை பதித்திருக்கிறார்.
இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதியின் ஆக்ஷன் அவதாரத்துக்கு ரசிகர்கள் தயாராகும் வகையில் லீட் கொடுத்து படத்தை முடித்திருப்பது எதிர்பார்ப்புகளை எக்கச்சக்கமாக எகிறவைத்துள்ளது.
கதாபாத்திரங்களில் பொருந்திய நடிகர்கள்
சூரிக்கு அடுத்ததாக தன் கதாபாத்திரத்தில் பக்கவாகப் பொருந்தி சேத்தன் மிரட்டியிருக்கிறார். வன்மம் வைத்து தன் கட்டளையை முதல் நாளே மீறிய சூரியை வரிசையாக தண்டனை கொடுத்து பழிவாங்குவது, தன் கதாபாத்திரத்தில் ஒன்றி இறுதிவரை வில்லத்தனம் காட்டுவது என சர்ப்ரைஸ் பேக்கேஜாக சேத்தன் கலக்கியிருக்கிறார்.
நாயகி பவானிஸ்ரீ மலை வாழ் பெண்ணாகவும் காவல் துறை வன்முறையால் ஒடுக்கப்பட்டு, போலீஸ் சூரியுடனே தயங்கித் தயங்கி காதலில் விழுவது என அழகாக தன் நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
மேலும் டிஎஸ்பியாக வரும் கௌதம் மேனன், தலைமைச் செயலாளராக வரும் ராஜீவ் மேனன், டாணாக்காரன் பட இயக்குநர் தமிழ், இளவரசு உள்ளிட்டோரும் தங்கள் கதாபாத்திரங்களுக்கு நியாயம் செய்துள்ளனர்.
இளையராஜா - வெற்றிமாறன் கூட்டணி
முதன்முறையாக வெற்றிமாறன் - இளையராஜா இந்தப் படத்துக்காக கூட்டணி சேர்ந்துள்ள நிலையில் ஏற்கெனவே பாடல்கள் ரசிகர்களைக் கவர்ந்து ஹிட் அடித்துள்ளன. அதேபோல் பாடல்கள் படத்திலும் சரியான இடத்தில் பொருந்திப் போய் படத்துக்கு அழகு சேர்க்கின்றன. காட்டு மல்லி பாடல் திரையரங்கை விட்டு நாம் வெளியேறிய பின்னும் இதமான அனுபவம் கொடுத்து நம்மை முணுமுணுக்க வைத்து ஆக்கிரமிக்கிறது.
பின்னணி இசையில் இளையராஜா தன் முத்திரையைப் பதித்து படத்துக்கும் கதைக்கும் வலு சேர்த்து தான் ஏன் மேஸ்ட்ரோ என்பதை மீண்டும் உணர்த்தியுள்ளார்.
தொழில்நுட்பக் கலைஞர்கள்
வேல்ராஜின் கேமரா நம்மை மலைகிராமத்துக்கு அழைத்துச் செல்வதுடன் லைவ்வாக திறம்பட படத்தைக் காட்சிப்படுத்தியுள்ளது. வெற்றிமாறன் - ஜெயமோகன் கூட்டணியில் படத்தின் வசனங்கள் கதைக்கும் அதன் அரசியலுக்கும், அதிகாரம், அடக்குமுறைக்கு எதிரான குரலாய் வலுசேர்க்கும் வகையில் அமைந்துள்ளன.
”என்னை நிர்வாணப்படுத்தி உக்கார வச்ச பிறகு தான் உனக்கு நான் சரிசமமானவனா தெரியறேன் இல்ல”, ”மொழி, மரபுகளை அதிகாரம் சிதைக்கும்போது மக்கள் கிளர்ந்தெழுவார்கள்” என்பன போன்ற வசனங்கள் திரையரங்கில் அப்ளாஸ் அள்ளுகின்றன.
படத்தின் குறை
அனைத்து வெற்றிமாறன் படங்களிலும் இருக்கும் அதே பிரச்னை தான், பட வசனங்கள் கதாபாத்திரங்களின் உதட்டசைவில் ஒட்டாததால் டப்பிங் படம் பார்த்த சலிப்பை சில இடங்களில் ஏற்படுத்துகிறது. விறுவிறுவென ஜெட் வேகத்தில் முதல் பாதி நகர்ந்தாலும், இரண்டாம் பாதி சட்டென்று முடிந்தது போன்ற அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனினும் இரண்டாம் பாகத்துக்கும் விஜய் சேதுபதிக்கும் கொடுத்த லீட் ரசிகர்களை கொஞ்சம் ஆசுவாசப்படுத்தியுள்ளது.
மொத்தத்தில் விடுதலை படத்தின் முதல் பாகம் மீதான எதிர்பார்ப்பை வெற்றிமாறன் மற்றும் குழுவினர் கச்சிதமாகப் பூர்த்தி செய்து, அடுத்த பாகத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளனர். வெற்றிமாறன் தான் ஏன் தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர் என்பதை மீண்டும் இந்தப் படத்தின் மூலம் அழுத்தமாக நிரூபித்திருக்கிறார்.