(Source: ECI/ABP News/ABP Majha)
Adiyae Movie Review: ‘என்னங்க படம் இது’ .. டைம் டிராவலில் சிக்கிய ஜி.வி.பிரகாஷ்.. ‘அடியே’ பட விமர்சனம் இதோ..!
Adiyae Movie Review in Tamil: விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் நடித்துள்ள படம் ‘அடியே’. இந்த படத்தின் விமர்சனத்தை இங்கு காணலாம்.
Vignesh Karthick
G. V. Prakash Kumar, Venkat Prabhu, Gouri G. Kishan
Adiyae Movie Review in Tamil: விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் நடித்துள்ள படம் ‘அடியே’. இந்த படத்தில் கௌரி கிஷன் நாயகியாக நடித்துள்ள நிலையில், வெங்கட் பிரபு முக்கிய கேரக்டரில் இடம் பெற்றுள்ளார். மாலி அண்ட் மான்வி மூவி மேக்கர்ஸ் தயாரித்திருக்கும் அடியே படத்திற்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் விமர்சனத்தை இங்கு காணலாம்.
படத்தின் கதை
தமிழ் சினிமாவில் சமீப காலமாக டைம் டிராவல் படங்கள் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டின் டைம் டிராவல் பண்ணும் படமாக வந்துள்ளது ’அடியே’.
பொதுவாக நாம் வாழும் இந்த உலகத்துக்கு இணையான ஒரு கற்பனை உலகம் (parallel universe) ஒன்று உள்ளது. அங்கு நிஜ உலகத்தில் நடக்கும் காட்சிகள், அந்த இணை உலகத்தில் alternative reality என்ற நாம் விரும்பும் காட்சிகளாக மாறும். இதை அடிப்படையாக வைத்தே இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. நிஜ உலகத்தில் கௌரி கிஷனிடம் காதலை தெரிவிக்க முடியாமல் தவித்து, கற்பனை உலகத்தில் அவரை மனைவியாக்கி குடும்பம் நடத்துகிறார் ஜி.வி.பிரகாஷ்குமார். இங்கே வேலை இல்லாமல் இருப்பவர் அங்கே ஆஸ்கர் வென்ற மிகப்பெரிய மியூசிக் டைரக்டர்.
இப்படி நிஜ உலகம், கற்பனை உலகம் என மாறி மாறி டிராவல் செய்யும் ஜி.வி.பிரகாஷ்குமாருக்கு ஒரு கட்டத்தில் என்ன நடக்கிறது என்ற உண்மை புரிகிறது. ஆனால் அதற்குள் நிஜ உலகில் ஜி.வி.பிரகாஷின் நண்பர் கௌரி கிஷனை திருமணம் செய்ய முயல்கிறார். இதனை தடுத்து கௌரி கிஷனிடம் எந்த உலகத்தில் வைத்து, எப்படி ஜி.வி.பிரகாஷ் தன் காதலை சொன்னார்? என்பதே அடியே படத்தின் கதையாகும்.
நடிப்பு எப்படி?
கிட்டத்தட்ட ஓராண்டு இடைவெளிக்கு பிறகு ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் இப்படம் வெளியாகி உள்ளது. முந்தைய படங்களை காட்டிலும் இந்தப் படத்தில் நடிப்பில் அவர் தன்னை மெருகேற்றி உள்ளார் என்றே சொல்லலாம். காதலை சொல்ல முடியாத விரக்தியின் உச்சம், தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என குழம்பும் மனநிலை, காதலிக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சி என அனைத்து உணர்வுகளையும் அழகாக வெளிப்படுத்துகிறார். இதேபோல் ஹீரோயினாக வரும் கௌரி கிஷன் காதல் காட்சிகளில் ரசிக்க வைக்கிறார். இனி இவரை ‘96 படத்தின் குட்டி த்ரிஷா’ என சொல்ல மாட்டார்கள். அந்த அளவுக்கு படம் முழுக்க வந்து நடிப்பில் மிளிர்கிறார். இதனைத் தவிர வெங்கட் பிரபு மட்டும் சொல்லிக் கொள்ளும் படியான கேரக்டரில் நடித்துள்ளார்.
படம் எப்படி?
குட்டையை குழப்பி மீன் பிடிப்பதை போல நம்மை கதையில் குழப்பத்தில் ஆழ்த்தி இரண்டாம் பாதியில் விளக்கம் கொடுக்கும் போது தான் என்ன நடக்கிறது என்பதே புரிகிறது. இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் ஆங்காங்கே தனது ட்ரேட் மார்க் கற்பனையால் படம் பார்ப்பவர்களை ரசிக்க வைக்கிறார். 'ஹூண்டாய் பிரஷ், பகார்டி பேஸ்ட், கோல்டு ஃபிளேக் டெட்டால், கக்காபிக் பாத்ரூம் கிளீனர் என பொருட்களுக்கு வித்தியாசமாக பெயர் வைத்துள்ளார்.
மேலும் ஃபார்முலா 1 ரேஸர் அஜித்குமார், கால்பந்து வீரர் சச்சின் டெண்டுல்கர், நடிகர் ரொனால்டோ, கிறிஸ்டஃபர் நோலன் மற்றும் ஷங்கர் இணைந்து படம் இயக்குவது தொடர்பான அறிவிப்பு, தமிழ் திணிப்புக்கு மத்திய அரசு எதிர்ப்பு, விஜய்யின் யோஹன் பட காட்சிகள், விஷால் மற்றும் ராதாரவி ஒன்றாக இருப்பது, தனுஷ் ரசிகனாக கூல் சுரேஷ் வருவது, பிரதமராக கேப்டன், மன்சூர் அலிகானின் 3.0, ட்ரோன் டெலிவரி, மியூசிக் டைரக்டராக பயில்வான் ரங்கநாதன் வருவது என படம் முழுக்க கற்பனை உலகத்தை கலந்து கட்டி அடித்துள்ளார்.
நிஜ மற்றும் கற்பனை உலகத்தில் பாடல் வரிகள் மாற்றம், ஏ.ஆர்.ரஹ்மான் பாட்டை போட்டு ஆஸ்கர் வெல்வது, ஆஸ்கர் மேடையில் ஏ.ஆர்.ரஹ்மான் பேச்சை கிண்டல் செய்வது என ரசிகர்களை என்ஜாய் பண்ண வைக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் களமிறங்கி விக்னேஷ் கார்த்திக் வெற்றியும் பெற்றுள்ளார். அதேபோல் ஜி.வி.பிரகாஷ் - கௌரி கிஷன் இடையேயான காதல் காட்சிகளும் சிறப்பாக வந்துள்ளது.
கொஞ்சம் புரியாமல் போனாலும் மொத்த படமும் குழம்பி விடும். அதேபோல் மாறி மாறி வரும் காட்சிகளும் சற்று ‘நாம இப்ப எந்த உலகத்துல இருக்கோம்’ என ஆடியன்ஸ் தங்களை கேள்வி கேட்கும் வண்ணம் அமைந்துள்ளது. பாடல்களும் ரசிக்கும் வண்ணம் படமாக்கப்பட்டுள்ளது. இசை மற்றும் ஒளிப்பதிவு படத்துக்கும் பிளஸ் ஆக அமைந்துள்ளது. ஆக மொத்தத்தில் லாஜிக் எல்லாம் பார்க்காமல், படம் பார்த்தால் ‘அடியே’ படம் ரசிக்கலாம்.