John Wick 4 Review: இது ஹாலிவுட் லைஃப்டைம் செட்டில்மெண்ட்: ஹீரோவுக்கு ‘செக்’ வைக்கும் வில்லன்.. தப்பினாரா ஜான் விக்? முழு விமர்சனம் இதோ!
John Wick 4 Review Tamil: ஹாலிவுட்டின் சிறந்த ஆக்ஷன் த்ரில்லர் என போற்றப்படும் ‘ஜான் விக் சாப்டர் 4’ படத்தின் திரை விமர்சனம்.
Chad Stahelski
Keanu Reeves, Ian McShane, Lance Reddick, Laurence Fishburne, Bill Skarsgard
2014ஆம் ஆண்டு முதல் இந்த ஆண்டு வரை, ஜான் விக் படத்தின் நான்கு பாகங்கள் வெளியாகியுள்ளன. இப்படத்தின் காட்சிகளும், படக்குழுவினரின் பங்களிப்பும் படத்திற்கு படம் மெருகேறிக்கொண்டு வருகிறதே அன்றி, குறைவதில்லை. ஜான் விக் படத்தின் 3 ஆம் பாகம் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியானது. கிட்டதட்ட 3 ஆண்டுகள் கழித்து வெளியாகியுள்ள ஜான்விக் சாப்டர் 4 படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம் வாங்க.
கதையின் கரு:
ஜான் விக்கின் தலைக்கு 40 மில்லியன் டாலர் சன்மானம்… ஜானை அழித்தே ஆக வேண்டும் என்று கங்கனம் கட்டிக்கொண்டு இறங்கியுள்ள புது வில்லன். இந்த கொலைகார கூட்டத்திடமிருந்து தனது சுதந்திரத்திற்காக நெடுநாட்களாக போராடும் ஹீராே.. ஜானிற்கு வேண்டிய சுதந்திரம் அவருக்கு கிடைத்ததா? ஜானை உயிரோடு அந்த வில்லன் விட்டு வைத்தானா? போன்ற கேள்விகளுக்கு ஆக்ஷன் விருந்துடன் பதிலாக வருகிறது திரைக்கதை.
நிழலுகின் மிகச்சிறந்த ‘ஹிட் மேன்’ ஜான் விக்கின் (கியானு ரீவ்ஸ்) தலைக்கு முந்தைய பாகத்தில் 20 மில்லியன் டாலர்களை சன்மானமாக நிர்ணயித்திருந்தது அவரை கொல்லத்துடிக்கும் ‘ஹை டேபிள்’. இந்த பாகத்தில் அதை அப்படியே டபுள் செய்து, ஜானை கொலை செய்பவர்களுக்கு 40 மில்லியன் டாலர்களை வழங்குவோம் என அறிவிக்கின்றனர். பாரிஸ் நகரில் இருந்து புதிதாக வரும் வில்லன் (பில் ஸ்கார்ஸ்காரட்), ஜானை கொன்றே தீர வேண்டும் என்று பல வேலைகளை செய்கிறான். ஜானை கொல்ல வெளிநாட்டு ‘ஹிட் மேன்கள்’ முதல் உள்ளூர் கொலைகாரர்கள் வரை அனைவரும் துடிக்கின்றனர். அவர்களிடமிருந்து தப்பித்து, தனது சுதந்திரத்தை மீண்டும் பெருவதற்கு நாடு நாடாக ஓடும் ஹீரோ, கடைசியில் ஒரு வழியை கண்டுபிடிக்கிறார். அது என்ன வழி? இந்த நிழலுக போரில் வெற்றி பெற்றது ஹை டேபுள் வில்லனா? ஜான் விக்கா? ஜானிற்கு அவர் விரும்பிய சுதந்திரம் மீண்டும் கிடைத்ததா? போன்ற பல கேள்விகளுடன் நகர்கிறது திரைக்கதை.
மிரட்டலான சண்டை காட்சிகள்!
ஜான் விக் படத்தில் நமது ஹீரோ கியானு ரீவ்ஸிற்கு எந்த அளவு முக்கியத்துவம் இருக்கிறதோ, அதே அளவு முக்கியத்துவம் அப்படத்தில் இடம் பெற்றுள்ள சண்டை காட்சிகளுக்கும் இருக்கிறது. அவ்வபோது மட்டும் டைலாக் பேசி, ஆக்ஷனிலேயே தனது மொத்த பலத்தையும் காட்டும் ஹீரோவின் கதாப்பாத்திரம், இந்த பாகத்திலும் அருமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு சில சண்டைக்காட்சிகள் மிக நீளமாகத் தோன்றினாலும், அதை போர் அடிக்காத வகையில் கொண்டு சென்ற இயக்குனர் சாட் ஸ்டெஹெல்சிக்கு பாராட்டுகள். க்ளைமேக்ஸ் காட்சிக்கு முன்னதாக படிக்கட்டுகளில் உருண்டோடி அடியாட்களுடன் கியானு ரீவ்ஸ் சண்டையிடும் காட்சி அனைவரையும் ‘அடடா’ சொல்ல வைத்திருக்கிறது. ஒரு பாழடைந்த கட்டிடத்திற்குள் நடக்கும் சண்டை காட்சியை மேலிருந்து காட்டிய விதத்தில் கை தேர்ந்த ஒளிப்பதிவாளரின் கை இருக்கிறது என்பது தெரிந்தது.
கொஞ்சம் ஓட்டை உடைசல்கள்:
சில ஆக்ஷன் படங்களை போல இந்த படத்திலும் சில லாஜிக் ஓட்டைகள் இருக்கத்தான் செய்கின்றன. ஜான் விக், எவ்வளவு அடிச்சாலும் மீண்டு வருவார் என்பது அனைவரும் அறிந்த கதை. அதற்கென்று மீண்டும் மீண்டுமா வருவது? கிட்டத்தட்ட 200 படிகளில் உருண்டு விழுந்தும் எழுந்து நின்று சண்டை போடுவது, காரே வந்து மோதினாலும் தூசி தட்டிவிடுவது போல் அதையும் தட்டிவிட்டு எழுந்து நின்று வில்லன்களை சுடுவது, ஒரே நேரத்தில் 100 பேர் வந்தாலும் சமாளிப்பது என படத்தில் அத்தனையும் ஹீரோவிற்கு ‘பில்ட்-அப்’ கொடுக்கும் காட்சிகளாக அமைந்துள்ளன. ஒரு கட்டத்தில், இத்தனையும் தாண்டி இவர் எப்படி இன்னும் உயிருடன் இருக்கிறார் என்ற கேள்வி நம்மை அறியாமலேயே நமக்குள் எழுகிறது.
படத்திற்கு படம் மெருகேற்றம்!
பொதுவாகவே, எந்த ஒரு படத்தின் இரண்டாம் பாகம் அல்லது மூன்றாம் பாகம் வெளியாகிறதோ, அந்த படத்திற்கு “ஃபர்ஸ்ட் பார்ட் போல இல்லை” என்ற பெயர்தான் கிடைக்கும். சில மாதங்களுக்கு முன்பு வெளியான அவதார்-2 படமும் இதற்கு விதிவிலக்கல்ல. ஆனால், ஜான் விக் பட ரசிகர்கள் மட்டும் என்றும் கூறுவது ஒரே கருத்துதான். அது என்னவென்றால், “ஜான் விக் படம், பாகத்திற்கு பாகம் மெருகேறிக்கொண்டே வருகிறது” என்பதும், “இதில் உள்ள நடிகர்களின் பங்களிப்பு அபரிமிதமானது” என்பதும்தான்.
எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ததா?
கொரானா பரவலிற்கு முன்னாலேயே வெளிவந்த ஜான் விக்-3 திரைப்படத்தின் க்ளைமேக்ஸ், ரசிகர்களை இருக்கை நுணியில் உட்கார வைத்தவாறு முடிந்தது. அந்த கதையின் தொடர்ச்சியாக வந்த படம்தான் இந்த பாகமும் என்பதால் இதன் மீத ஜான் விக் ரசிகர்களுக்கு பல தரப்பட்ட எதிர்பார்ப்புகள் இருந்தன. ரசிகர்களின் எதிர்பார்ப்பை, பூர்த்தி செய்யும் வகையில் அவர்களுக்கு ஏற்ற ஆக்ஷன் விருந்தாக இப்படம் அமைந்துள்ளது.
அடுத்து இன்னொரு பாகம் இருக்கிறதா?
படம் பார்த்து விட்டு வந்த பலரது மனங்களில், இந்த ஒரு கேள்விதான் வட்டமடித்துக் கொண்டிருக்கிறது. ஏனென்றால், இதற்கு முன்னதாக வெளியான அனைத்து பாகங்களின் கதையும் ஒன்றன்பின் ஒன்றாக-தொடர்ச்சியாக இருந்தது. ஆனால், இந்த பாகமோ இந்த கதையின் முடிவு போல அமைக்கப்பட்டுள்ளது. இதனால், ஜான் விக் படத்தின் அடுத்த பாகம் வெளியாவது இரண்டாம் பட்சம்தான் என்ற கருத்தும் ரசிகர்களுக்குள் பகிரப்பட்டு வருகின்றன.
மொத்தத்தில், நீ்ங்கள் இதுவரை ஜான்விக் ரசிகராக மாறவில்லை என்றாலும் இந்த படத்தினை அடுத்து ஜான்விக்கின் ஒரு பகுதியாகவே மாறிவிடுவீர்கள் என்பதில் மிகையில்லை.