Election Movie Review: தேர்தல் களத்தில் வென்றாரா விஜயகுமார்? - எலக்சன் படத்தின் விமர்சனம் இதோ!
Election Movie Review: இயக்குநர் தமிழ் இயக்கத்தில் உறியடி புகழ் விஜயகுமார் கதாநாயகனாக நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் எலக்சன். இப்படத்தின் திரைவிமர்சனம் குறித்து காணலாம்.
Thamizh
Vijay Kumar, Preethi Asrani, George Maryan, Pavel Navageethan, Dileepan, Richa Joshi
Election Movie Review in Tamil: ரீல் குட் ஃபிலிம் தயாரிப்பில் இயக்குநர் தமிழ் இயக்கத்தில் உறியடி விஜயகுமார், பாவல், ஜார்ஜ் மரியான், திலீபன், ப்ரீத்தி அஷ்ராணி உள்ளிட்டோர் நடிப்பில், வெளியாகியுள்ள படம் எலக்சன். படத்தின் ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் படம் குறித்தான எதிர்பார்ப்பை ஓரளவுக்கு ஏற்படுத்தியிருந்ததால், மே 17ஆம் தேதி வெளியான படங்களில் கவனம் ஈர்த்த படமாக எலக்சன் அமைந்தது. அதன் விமர்சனத்தை காணலாம்.
படத்தின் கதை
உள்ளாட்சித் தேர்தலால் ஒரு ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களுக்குள் என்ன மாதிரியான விஷயங்கள் நடைபெறுகின்றது, ஒரு ஊருக்குள் எவ்வளவு சிக்கல்கள் ஏற்படுகின்றது என்பதை மையமாக வைத்து படத்தின் கதை நகர்கின்றது. மொத்தம் நான்கு தேர்தல்கள் படத்திற்குள் வருகின்றது. இந்த தேர்தலில் அரசியல் என்றாலே என்னவென்று தெரியாத கதாநாயகன் எப்படி உள்ளே வருகின்றான், அதனால் அவன் எதிர்கொள்ளும் விளைவுகள் என்னென்ன, கதாநாயகனின் அப்பாவே கதாநாயகனுக்காக பிரச்சாரம் செய்யாமல் போனதற்கான காரணம் என்ன? என்பதை இயக்குநர் காட்சிப்படுத்தியுள்ளார். எலக்சன் படத்துக்கு வேலூர் மாவட்டம் கதைக்களமாக உள்ளது.
படம் எப்படி இருக்கு?
உள்ளாட்சி தேர்தலைக் கொண்டே படம் நகர்வதால், இது சாதாரண மக்களுக்கும் மிகவும் நெருக்கமான கதையாக அமைகிறது. படத்தின் திரைக்கதையில், காட்சி அமைப்பில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால் படத்தினைப் பார்க்கும் அனைவரது மனதிலும் நீங்காத இடம் பிடித்த படமாக இருந்திருக்கும். ஒரு உள்ளாட்சித் தேர்தல் நண்பர்கள் பகையாளிகளாக மாறியதும், பகையாளிகள் கூட்டாளிகளாக மாறிய பல கதைகள் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து கிராமங்களிலும் உள்ளது.
உள்ளாட்சி தேர்தல் அரசியல்வாதிகள் மத்தியில் இருக்கும் பகையுணர்வு, தான் சார்ந்த கட்சியை தூக்கி எறிந்துவிட்டு தனித்து நின்று தனது செல்வாக்கினை நிரூபிக்கும் அரசியல்வாதிகள், சாகும்வரை கட்சிக்கு விஸ்வாசமாக இருப்பேன் என்ற உணர்வோடு இருக்கும் உண்மையான தொண்டன், மக்கள் கொடுத்த பதவி அதிகாரத்தினால் தொடர்ந்து தலைவராகி, அந்த மதமதப்பில் இருக்கும் மோசமான அரசியல்வாதி, கொள்கை அடிப்படையில் தேர்தலை எதிர்கொள்ளும் சீர்திருத்த அரசியல்வாதி, அரசியல் என்றாலே எதுவென்று தெரியாத நபர்கள், ஓட்டுகளைப் பிரிக்க அரசியல்வாதிகளால் களமிறக்கப்படும் சாமானியர்கள் உள்ளிட்ட பல கதாப்பாத்திரங்களின் வழியே இயக்குநர் உள்ளாட்சித் தேர்தலை காட்சிப்படுத்தியுள்ளார். உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து வகை கதாப்பாத்திரங்களையும் களமிறக்கிய இயக்குநர், அவர்களை இன்னும் சரியாக கையாண்டு இருக்கலாம். படத்தின் க்ளைமேக்ஸ் காட்சிக்காகவே இயக்குநருக்கு தனிப் பாராட்டுகள்.
ப்ளஸ்
வேலூர் மாவட்டத்திற்குரிய பேச்சு மொழியில் கதாப்பாத்திரங்கள் அனைவரும் உரையாடுவது கதைக் களத்திற்கு கச்சிதமாக பொருந்தியதுடன், படம் பார்ப்பவர்கள் மனதிலும் பதிகின்றது. இதற்கு முக்கிய காரணம் இயக்குநர் தமிழ், எழுத்தாளர் அழகிய பெரியவன், படத்தின் நாயகன் விஜயகுமார் என மூன்று பேரும் இணைந்து எழுதிய வசனங்கள்தான். படத்தில் பல கதாபாத்திரங்கள் இருந்தாலும் பாவல் நடிப்பில் ஸ்கோர் செய்துள்ளார்.
அதேபோல் குரூரமான வில்லன் கதாபாத்திரத்தை முடிந்தளவு தனது நடிப்பின் மூலம் நிலைநாட்டியுள்ளார் திலீபன். கதாநாயகன் விஜய குமார், நாயகி ப்ரீத்தி அர்ஷனி நடிப்பு ஓ.கே. ரகம்தான். ஜார்ஜ் மரியான் கதாபாத்திரம் ஒவ்வொரு ஊரிலும் இருக்கும் உண்மைத் தொண்டனை நினைவுக்கு கொண்டு வரும். கோவிந்த் வசந்தாவின் இசை கொஞ்சம் ஓ.கே ரகம்தான். மகேந்திரன் ஜெயராஜுவின் ஒளிப்பதிவில் உள்ளாட்சித் தேர்தலுக்கான மோடில் படம் பார்க்கும் நம்மையும் அழைத்துச் செல்கின்றார். பொதுத்தேர்தலைவிடவும் உள்ளாட்சித் தேர்தலில்தான் மக்கள் மத்தியில் இயல்பாகவே அரசியல் காழ்ப்புணர்ச்சி, குரூரம் உள்ளிட்டவை அதிகமாக இருக்கும். அதனை ஓரளவுக்கு நெருங்கியுள்ளது எலக்சன். மொத்தத்தில் நடந்து வரும் மக்களவை தேர்தல் திருவிழாவில் இப்படம் ஓ.கே. ரகம். தியேட்டருக்கு ஒருமுறை விசிட் அடிக்கலாம்!