Minnal Murali | `மின்னல் முரளி’: கேரள மண்ணில் இருந்து ஒரு சூப்பர்ஹீரோ.. எப்படி இருக்கிறான் மின்னல் முரளி?
நம்மைச் சுற்றியிருக்கும் மக்களில் இருந்தே ஒருவன், பெரும்பாலானோரால் நன்கு பரிச்சயப்பட்ட பக்கத்து வீட்டு இளைஞன், சூப்பர்ஹீரோவாக மாறிய உணர்வைத் தருகிறது `மின்னல் முரளி’.
பாசில் ஜோசப்
டொவினோ தாமஸ், ஃபெமினா ஜார்ஜ், குரு சோமசுந்தரம், அஜூ வர்கீஸ், பைஜூ
ஹாலிவுட் பாணியிலான சூப்பர்ஹீரோ வடிவத்தை இந்தியாவின் நிலப்பரப்பிற்கு ஏற்ப மாற்றிக் கொண்டு வரும் பல முயற்சிகள் கடந்த காலத்தில் நிகழ்ந்திருக்கின்றன. எனினும், இதுவரை வெளிவந்த `க்ரிஷ்’, `முகமூடி’ முதலான சூப்பர்ஹீரோ முயற்சிகள் பெரியளவில் மக்களைக் கவர்ந்த ஹாலிவுட் சூப்பர்ஹீரோக்களைப் போல இந்திய மக்களை ஈர்க்கவில்லை. அப்படியான முயற்சியாக, மக்களில் இருந்தே ஒருவன், பெரும்பாலானோரால் நன்கு பரிச்சயப்பட்ட பக்கத்து வீட்டு இளைஞன் சூப்பர்ஹீரோவாக மாறிய உணர்வைத் தருகிறது `மின்னல் முரளி’.
ஒரு சூப்பர்ஹீரோவின் தொடக்கத்தைப் பேசுகிறது `மின்னல் முரளி’. செல்ஃபோன் இல்லாத எண்பதுகளின் இறுதியில், கேரள கிராமம் ஒன்றில் வாழும் தையல் கடைக்கார இளைஞன் ஜெய்சன் (டொவினோ தாமஸ்) அதே ஊரின் காவல்துறை ஆய்வாளரின் மகளைக் காதலிக்கிறான். அவளோ ஜெய்சனை விட்டுவிட்டு மற்றொருவனைத் திருமணம் செய்ய சம்மதிக்கிறாள். ஜெய்சனுக்கு அமெரிக்காவுக்குச் செல்ல வேண்டும் என்ற அதீத ஆசையும் உண்டு. அதே ஊரில் வாழும் ஷிபு (குரு சோமசுந்தரம்) சிறுவயது முதல் ஒரு பெண்ணைக் காதலித்து வருகிறார். நீண்ட நாள்களுக்குப் பிறகு, அந்தப் பெண் அந்த ஊருக்குத் திரும்ப, அவரை மீண்டும் சந்தித்து, தன் காதலை வெளிப்படுத்த நினைக்கிறார். இந்நிலையில் மின்னல் ஒன்று இந்த இரு நபர்களையும் தாக்குகிறது. இருவருக்கும் அதன்மூலம் சூப்பர்ஹீரோ ஆற்றல் கிடைக்கிறது. தங்கள் வாழ்க்கையின் இலக்குகளை நோக்கி இருவரும் பயணிக்கையில், இருவரும் மோதிக் கொள்ளும் பாதை உருவாகிறது. யார் வென்றார்கள், எப்படி என்பதை விரிவாகப் பேசுகிறது `மின்னல் முரளி’.
திரைக்கதை எழுத்தாளர்கள் அருண் அனிருத்தன், ஜஸ்டின் மேத்யூ ஆகியோர் சிறப்பான திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார்கள். இரு முக்கிய கதாபாத்திரங்களின் தொடக்கம், மனநிலை, ஆற்றல்கள் முதலானவை மிகவும் சமமாக நடத்தப்பட்டு, இறுதியில் `நல்லதே வெல்லும்’ என்று எதிர்பார்த்தபடியே `சுபம்’ போட்டு முடித்திருந்தாலும், கேரள கிராமத்தின் சூப்பர்ஹீரோ என்பதை ஒவ்வொரு காட்சியிலும் உணர்த்திக் கொண்டே இருக்கிறார்கள். அது படத்தின் பலம்.
லோக்கல் சூப்பர்ஹீரோவை ஊரின் தன்மையை மாற்றாமல் உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் பாசில் ஜோசப். சூப்பர்ஹீரோ என்பதற்காக பிரம்மாண்ட நகரங்கள், நெரிசலான சாலைகள் என்று இல்லாமல், கிராமத்தின் நிலப்பரப்பிற்கேற்ப கதை அமைக்கப்பட்டிருந்தது. மேலும், சூப்பர்ஹீரோ திரைப்படம் என்பதற்காக முழுவதுமாக கிராபிக்ஸ் காட்சிகளின் மீது நம்பிக்கை வைக்காமல், சூப்பர்ஹீரோ தன் ஆற்றலை வெளிப்படுத்தும் போதெல்லாம் சுற்றியுள்ள மனிதர்களின் ரியாக்ஷன்களைப் பயன்படுத்தியிருப்பது சிறப்பான ஐடியா. அது பல இடங்களில் சரியாக வேலை செய்திருக்கிறது.
வழக்கமான ஹாலிவுட் சூப்பர்ஹீரோ கதைகளில் தொடக்க கதைகள், சூப்பர்ஹீரோ தன் ஆற்றலையும், தன் ஆற்றலைப் பயன்படுத்த வேண்டிய பொறுப்பையும் உணரும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும். `மின்னல் முரளி’ அப்படியொரு தொடக்கம். `சூப்பர்மேன்’ கதையைப் போல, சிறுவயதிலேயே தத்தெடுக்கப்பட்டு, தனக்குத் தொடர்பில்லாத ஊரைக் காப்பாற்றுவது, `ஜோக்கர்’ கதாபாத்திரத்தைப் போன்ற வில்லன், `ஸ்பைடர்மேன் 2’ படத்தின் புகழ்பெற்ற ரயில் காட்சியை நினைவுபடுத்தும் பேருந்து சண்டைக் காட்சி, `ஷஸாம்’ படத்தைப் போல உடனிருந்து ஐடியா தரும் சிறுவன் கதாபாத்திரம் எனப் பல்வேறு வெற்றிப் படைப்புகளை கேரளாவுக்குத் தகுந்தாற்போல் மாற்றம் செய்து ரசிக்கவும் வைத்திருக்கிறார்கள்.
சூப்பர்ஹீரோக்களின் வில்லன்கள் எப்போதும் முக்கியமானவர்கள். `கேப்டன் அமெரிக்கா’வின் முதல் வில்லன் ஹிட்லரைப் போன்ற நாஜித் தலைவராக வரும் கதாபாத்திரம். `ப்ளாக் பேந்தர்’ படத்தின் வில்லனுக்கு அமெரிக்கா மீதான வரலாற்றுக் கோபம் இருக்கும். சூப்பர்ஹீரோ படங்களில் வரும் வில்லன்களின் பின்னணி மிகவும் முக்கியம். `மின்னல் முரளி’ பட வில்லன் ஷிபு ஒரு தமிழன் என்று நமக்குச் சொல்லப்படுகிறது. தமிழ் டப்பிங்கில் இந்த வசனம் `கிறுக்கன்’ என மாற்றப்பட்டிருக்கிறது. ஹீரோவான ஜெய்சனும், வில்லனான ஷிபுவும் வெவ்வேறு ஊர்களில் இருந்து வந்தவர்கள் என்பதைக் காட்டுவதற்காக இந்த வித்தியாசங்கள் இருந்தாலும், ஹீரோ மலையாளியாகவும், வில்லன் தமிழனாகவும் இருப்பது ஏன் என்ற கேள்விக்கு எந்த மலையாள இயக்குநரும் பதிலளிக்கப் போவதில்லை.
ஜெய்சனாகக் கலக்கியிருக்கிறார் டொவினோ தாமஸ். சூப்பர்ஹீரோவாக மாறுவதற்கு முன்னால் அவர் செய்யும் சேட்டைகள், சூப்பர்ஹீரோவாக மாறியதற்குப் பின் தன் ஆற்றலை உணர்வதற்காக அவர் மேற்கொள்ளும் முயற்சிகள், மின்னல் முரளியாக அடித்து ஆடுவது எனச் சிறப்பாக நடித்திருக்கிறார் டொவினோ. அவருக்கு இணையாக மிரட்டியிருக்கிறார் குரு சோமசுந்தரம். பால்யகால காதலியைக் கண்டு உருகுவது, சூப்பர்வில்லனாக முதல் கொலை செய்யும் போது அவர் வெளிப்படுத்தும் கோபம், ஜெய்சனுடன் பேசும் அந்தக் காட்சி, இறுதிக் காட்சி என ஒரு சூப்பர்ஹீரோவுக்குச் சமமான வில்லனாக நடித்திருக்கிறார் குரு சோமசுந்தரம். `ப்ரூஸ் லீ’ பிஜியாக வரும் ஃபெமினா ஜார்ஜுக்கு இந்தப் படத்தில் குறைவான காட்சிகளே என்ற போதும், அவருடைய கதாபாத்திரம் அடுத்தடுத்த பாகங்களில் மின்னல் முரளியுடன் பயணிக்கப் போவதைக் குறிக்கும் பல்வேறு காட்சிகள் இருக்கின்றன.
படத்தின் மிகப்பெரிய மைனஸ் அதன் நீளம். சுமார் இரண்டரை மணி நேரங்களைக் கடந்தும் பயணிப்பதால் அசதி ஏற்படுவது தவிர்க்க இயலாததாகி விடுகிறது. எனினும், சூப்பர்ஹீரோக்களின் தொடக்கம் குறித்த கதை என்பதாலும், அடுத்த பாகங்களுக்கான முன்னோட்டங்கள் இதில் கிடைப்பதாலும் இதனைப் பொறுத்துக் கொள்ளலாம்.
`மார்வெல்’ யுனிவெர்ஸுக்குப் போட்டியாக `மின்னல்’ யுனிவெர்ஸ் உருவாகியிருக்கிறதா என்று இனி போகப் போகத் தெரியும். அரையாண்டு விடுமுறைகளில் குழந்தைகளோடு மகிழ்ந்து பார்க்கும் ஆரோக்கியமான பொழுதுபோக்குப் படமாக வெளிவந்திருக்கிறது `மின்னல் முரளி’.
`மின்னல் முரளி’ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ளது. இது மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது.