Maha Movie Review: மீடியம் வெயிட் சிம்பு.. வொர்க் அவுட் ஆகாத கெமிஸ்ட்ரி.. ஹன்சிகாவின் 50-வது படம் - எப்படியிருக்கு மஹா..?
Maha Movie Review in Tamil: ஹன்சிகா மோத்வானி, சிலம்பரசன் ஆகியோரது நடிப்பில் நீண்ட நாள் போராட்டத்திற்கு பிறகு வெளியாகி இருக்கும் திரைப்படம் ‘மஹா’ படத்தின் விமர்சனத்தை இங்கு பார்க்கலாம்.
U.R.Jameel
Silambarasan, Hansika,Srikanth,
Maha Movie Review in Tamil: ஹன்சிகா மோத்வானி, சிலம்பரசன், ஸ்ரீகாந்த், தம்பி ராமையா உள்ளிட்ட பலரது நடிப்பில் இயக்குநர் ஜமீல் இயக்கத்தில் நீண்ட நாள் போராட்டத்திற்கு பிறகு வெளியாகி இருக்கும் திரைப்படம் ‘மஹா’(Maha). ஹன்சிகாவின் 50 ஆவது படமாக வெளியாகி இருக்கும் இந்தப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
கதையின் கரு
போதைக்கு அடிமையாகி இருக்கும் ஒருவர் தொடர்ந்து குழந்தைகளை கடத்தி, பாலியல் வன்கொடுமை செய்து வீதியில் வீசிக்கொண்டு வருகிறார். அவரைப்பிடிக்க போலீஸ் அதிகாரியாக களமிறக்கப்படுகிறார் ஸ்ரீகாந்த். இதனிடையே சிலம்பரசனுக்கும், ஹன்சிகாவுக்கும் பிறந்த குழந்தையும் அந்தக் கொலைகாரனால் கடத்தப்படுகிறது. இறுதியில் அந்தக்குழந்தை மீட்கப்பட்டதா இல்லையா..? அவன் எப்படி கண்டுபிடிக்கப்படுகிறான் உள்ளிட்ட கேள்விகளுக்கான பதில் தான் மீதிக்கதை.
பப்ளி கேர்ளாக மட்டுமே பல படங்களில் நடித்து வந்த ஹன்சிகா, இந்தப்படத்தில் கொஞ்சம் இறங்கி வந்து ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடித்திருக்கிறார். நடிப்பதற்கு நல்ல ஸ்பேஸ். அந்த வாய்ப்பை நன்றாகவே பயன்படுத்தி இருக்கிறார். குறிப்பாக, குழந்தையை தொலைத்துவிட்டு தவிக்கும் காட்சிகளில் நன்றாகவே ஸ்கோர் செய்திருக்கிறார். சிலம்பரசன் கதாபாத்திரம் படத்திற்கு ஸ்டார் வேல்யூ வேண்டுமே என்று வலிந்து திணிக்கப்பட்டது போன்று தெரிந்தது.
அவருக்கும் ஹன்சிகாவிற்கும் இடையேயான காதலில் ஆழம் இல்லை. மீடியம் வெயிட்டில் வரும் சிம்புவையும், அவர் பேசும் பஞ்ச் வசங்களையும் பெரிதாக ரசிக்க முடியவில்லை. ஸ்ரீகாந்த் கொடுக்கப்பட்ட போலீஸ் கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்திருக்கிறார். தம்பி ராமையா கதாபாத்திரத்தில் இன்னும் கொஞ்சம் அழுத்தம் இருந்திருக்கலாம். இவர்கள் எல்லோரையும் விடவும் சுஜித் ஷங்கர் நடிப்பில் பின்னியிருக்கிறார்.
படத்தின் இயக்குநர் ஜமீல் எடுத்துக்கொண்ட ப்ளாட் பழையது என்றாலும், தனது திரைக்கதை வாயிலாக சில இடங்களில் சுவாரசியமாகவும், பல இடங்களில் சுவாரசியமில்லாமலும் கதையை சொல்லியிருக்கிறார். குறிப்பாக சிலம்பரசன் போர்ஷன் சிம்பு ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றம். பாடல்கள் பெரிதாக கவனிக்க வைக்க வில்லை என்றாலும், பின்னணி இசை படத்திற்கு பெரும் பலமாக அமைந்து இருக்கிறது..
திரைக்கதையில் சுவாரசியமின்மை, சிலம்பரசனின் கதாபாத்திரத்தை ஒழுங்காக கையாளாத தன்மை, சுற்றியுள்ள கதாபாத்திரங்களில் அழுத்தம் இல்லாமை ஆகியவற்றை தவிர்த்திருந்தால் மஹாவை ரசித்து இருக்கலாம்.