Maamanithan Review: தர்மதுரை பக்கத்துல வருமா.. எப்படி இருக்கு மாமனிதன்.? வொர்த்தா இல்லையா..? - விமர்சனம்..!
Maamanithan Movie Review: எல்லாவற்றிற்கும் மேலாக, யுவன் இளையராஜா இணைந்து இசையமைத்திருக்கும் முதல் படம். ஆனால் அதற்கான சுவடே இல்லை
Seenu Ramasamy
Vijay Sethupathy, Gayathrie, Guru somasundaram, Shaji Chen, KPC
Maamanithan Movie Review: ஒரு சாமானிய குடும்பத்தலைவன் அவனது குழந்தைகளின் கல்விக்காக ரியல் எஸ்டேட் புரோக்கராக மாறுகிறார். அதில் அவன் நமக்கெல்லாம் காலம்காலமாக தெரிந்த ஒரு பிரச்னையில் மாட்டிக்கொள்ள, அதிலிருந்து அவன் எப்படி மீண்டான், அவனது குடும்பம் என்ன ஆனது என்பதுதான் மாமனிதனின் கதை.
இந்தப்படத்தில் விஜய்சேதுபதிக்கு பொறுப்பான குடும்பத்தலைவன் வேடம். நேர்மையான ஆட்டோ ட்ரைவராக, அன்பை பொழியும் அப்பாவாக, பொறுப்பான குடும்பத்தலைவனாக என எல்லா இடங்களிலும் ஸ்கோர் செய்திருக்கிறார். நடிப்பிலும் நல்ல முதிர்ச்சி தெரிகிறது. அவருக்கு ஜோடியாக நடித்திருக்கும் காயத்ரிக்கு இன்னும் கொஞ்சம் நடிப்பு பயிற்சி வேண்டும். இயல்பாகவே அவரிடம் இருக்கும் காம்னஸ் இந்தக் கதாபாத்திரத்திற்கு பொருந்தவில்லையோ என்று தோன்றுகிறது. நண்பனாக வரும் சோமசுந்தரம் வழக்கம் போல தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்திருக்கிறார்.
இங்கு பலரும் எளிய மக்களின் வாழ்கையை படமாக எடுக்கலாம். ஆனால் அதில் சீனுராமசாமியின் படங்கள் தனி ரகம். ஒரு ரசிகனுக்கும் திரைக்கும் இடையே திரைமொழி வாயிலாக அவர் நடத்தும் எளிய மக்களின் உரையாடல்கள் நெஞ்சுக்கு மிக நெருக்கமானவை.
ஆனால் அந்த எளிமைக்கும் ஒரு அளவு இருக்கிறது. அந்த எளிமை இக்காலத்திற்கு ஏற்றவையாக இருப்பது மிக அவசியம். அதை மாமனிதனில் தவறவிட்டு இருக்கிறார் சீனு. குடும்பத்தலைவனின் தியாகம் மதிப்புமிக்கது என்றாலும் ஏற்கனவே பார்த்து பழகிபோன காட்சிகள், சுவாரசியம் இல்லாத திரைக்கதை, விஜய்சேதுபதி தவிர வேறு எந்தக் கதாபாத்திரமும் பெரிதாக மனதில், நிற்காதது ஆகியவை மாமனிதனில் இருக்கும் ஓட்டைகள்.
எல்லாவற்றிற்கும் மேலாக, யுவன் இளையராஜா இணைந்து இசையமைத்திருக்கும் முதல் படம். அதற்கான சுவடே இல்லை.. அதை மட்டுமே நம்பி அதிக எதிர்பார்ப்போடு வரும் ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றமே மட்டுமே கிடைக்கும். பின்னணி இசை கதைக்கு வழக்கம் போல பொருந்தி செல்கிறது. யுவனின் குரலில் ஏய் ராசா பாடல் மட்டும் நெஞ்சுக்கு இதம். சுகுமாரின் ஒளிப்பதிவில் தேனி கிராமத்தின் பேரழகும், கேரளாவின் கொள்ளை அழகும் கண்களுக்கு குளிர்ச்சி. சீனுராமசாமி விஜய்சேதுபதியை மட்டுமே நம்பாமல் படம் எடுத்திருந்தால் மாமனிதன் நிச்சயம் கொண்டாடப்பட்டிருப்பான்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்