Cold case Movie Review: நல்லாயிருக்கா? நல்லாயில்லையா? இரண்டுக்கும் நடுவில் தடுமாறும் கோல்ட்கேஸ்!
ஏசிபி சத்தியஜித் கதாப்பாத்திரத்தில் ப்ரித்விராஜ் ஃபிட்டிங்காக இருக்கின்றார். கொலை சம்பந்தமாக துப்பறியும் காட்சிகள் சுவாரஸ்யமாக படமாக்கப்பட்டுள்ளது.
தனு பலக்
ப்ரித்விராஜ், அதிதி பாலன், லக்ஷ்மி ப்ரியா சந்திரமெளலி, அனில் நெடுமாங்கட், சுசித்ரா பிள்ளை
கோல்ட் கேஸ் – படல் வெளியாவதற்கு முன்பே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது படத்தின் டிரெய்லர். ப்ரித்விராஜ், ’அருவி’ அதிதி பாலன், அனில் நெடுமாங்காட், லக்ஷ்மி ப்ரியா சந்திரமெளலி என அசத்தலான நடிகர்கள் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். அமேசான் ப்ரைமில் வெளியான இத்திரைப்படத்தை தனு பலக் இயக்கியுள்ளார்.
டிவி சேனலில் அமானுஷ்யம் சார்ந்த சிறப்பு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் அதிதி பாலன். அதே ஊரில், காவல்துறை துணை ஆய்வாளராக ஒரு வழக்கு விசாரணையை தொடங்குகிறார் ப்ரித்விராஜ். இரண்டு பேரும் அவரவர் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தை தொடர்ந்து அதை பற்றிய ஆய்வில் இறங்குகின்றனர். ஒரு கட்டத்தில், இருவரும் சந்திக்கின்றனர். இருவரும் தேடி சென்ற அந்த விஷயம் ஒரே விஷயம்தான். அது ஒரு மண்டையோடால் நடந்த சம்பவம்!
அடையாளம் தெரியாத ஒருவரின் மண்டையோடு ஏரியில் கிடைக்க, அந்த மண்டையோடு யாருடையது என ப்ரித்விராஜ் தலைமையிலான காவல்துறை குழு விசாரணையில் இறங்குகிறது. இது ஒரு புறம் இருக்க, அதிதி பாலன் தங்கி இருக்கும் வீட்டில் சில அமானுஷ்ய செயல்கள் நடக்கின்றது. ஃப்ரிட்ஜூக்குள் பேய், அனாபெல் போல ஒரு பொம்மை என அந்த வீட்டிற்குள் நடக்கும் விஷயங்களில், சில காட்சிகள் ‘திகில்’ காட்டுகின்றது.
“she will come to you again, medha” #ColdCaseOnPrime pic.twitter.com/OqmTasJD5N
— amazon prime video IN (@PrimeVideoIN) June 28, 2021
ஆனால், ஒரு கட்டத்தில், இது போலீஸ் காப் ரகத்தில் உள்ள த்ரில்லர் கதையா, பேயுடன் மல்லுக்கட்டும் ஹாரர் கதையா என நமக்கு புரியவில்லை, டைரக்டருக்கும் புரியவில்லை போல! நிறைய கதாப்பாத்திரங்களை அடுத்தடுத்து அறிமுகப்படுத்துகின்றனர். ஆனால், அனைவரும் பார்ப்பவர்களை குழப்புவதற்காக மட்டுமே வைக்கப்பட்டுள்ள சில நிமிட கதாப்பாத்திரங்களாகவே வந்து போகின்றனர்.
கொலைக்கு காரணமானவர் ஒரு ஆணாக இருக்கலாம் என்ற வழக்கமான தொனியில் இல்லாம, பெண்ணாக கூட இருக்கலாம் என ஒரு ட்ரை. ஆனால், கொலை செய்யப்படுவதற்கான காரணம் என்னவோ ‘வழக்கமாக சொல்லப்படும்’ அதே காரணம்தான்.
ஏசிபி சத்தியஜித் கதாப்பாத்திரத்தில் ப்ரித்விராஜ் ஃபிட்டிங்காக இருக்கின்றார். கொலை சம்பந்தமாக துப்பறியும் காட்சிகளும், கிடைத்த தடயங்களை வைத்து அடுத்தக்கட்ட விசாரணையை கொண்டு செல்லும் காட்சிகளும் சுவாரஸ்யமாக படமாக்கப்பட்டுள்ளது. ஒரு குழந்தையின் தாயாக அதிதி பாலன். எதிர்பாராது நடக்கும் திகில் சம்பவங்களை எதிர்கொள்ளும் கதாப்பாத்திரம் என ப்ரித்விராஜுக்கு நிகராக இப்படத்தின் அடுத்த முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். திரைக்கதையில் அடுத்தடுத்து நடக்கும் திகில் சம்பவங்கள் இவரைச் சுற்றி நடப்பதாக இருந்தாலும், இன்னும் சிறப்பாக நடித்திருக்கலாம் என தோன்றியது. இவரைச் சுற்றி நடக்கும் சம்வங்களில் சில லாஜிக் ஓட்டைகளும் இருப்பதால், பேய் வரும் காட்சிகள் ஒரு கட்டத்திற்கு மேல், போர்’ அடிக்கிறது.
ஒளிப்பதிவு, பின்னணி இசை படத்தின் ப்ளஸ். எனினும், 2 மணி நேரம் 20 நிமிடங்கள் ஓடும் படம், ஒரு கட்டத்தில் “எப்ப முடியும்” என கடிகாரத்தை பார்க்க வைக்கிறது. இரண்டு ஜானர்களில் தடுமாறும் கதைக்களம் கொண்ட கோல்ட் கேஸ், ‘செம்ம்ம’ என பாராட்டவும் முடியாமல், ‘சுமார்’ என வகைப்படுத்தவும் முடியாமல் இரண்டு பிரிவுகளுக்கு நடுவில் தடுமாறுகின்றது.
கோல்ட் கேஸ் – ஒரு முறை பார்க்கலாம். மற்றொரு நாள்… மற்றொரு மலையாள படம்… மற்றொரு ஓடிடி ரிலீஸ்! இப்படி பத்தில் பதின்னொன்பதாக கடந்துவிடுகிறது இந்த திரைப்படம்.