Kola pasi Series-7 | ஈரோடு மட்டன் கொத்துக்கறி முதல் பள்ளிப்பாளையம் சிக்கன் வரை - கொங்குநாட்டு பயணம்..!
’’ஈரோட்டில் எம்.எல்.ஏ சீட்டு கூட வாங்கி விடலாம் ஆனால் ஸ்ரீ ஐயப்ப சாமி விலாஸ் மெஸில் மட்டன் சாப்ஸ் கிடைப்பது கடினம்'’
பண்டைய கொங்கு கால வரலாற்றின் படி சங்க கால கொங்கு பகுதியின் ஒரு பாகமாகவே ஈரோடு திகழ்ந்தது. சேரர், சோழர்கள், ராஷ்ட்ராகுட்டாக்கள், மோடின் சுல்தான்கள் மற்றும் மதுரை நாயக்கர்களின் ஆட்சியின் கீழ் ஈரோடு இருந்தது. ஈரோடு ஒரு வர்த்தக நகரமாகவும் திகழ்வதால் எப்பொழுதும் பரபரப்பாகவே என் கண்களுக்கு காட்சியளித்துள்ளது. இந்தியாவின் மஞ்சள் சந்தையாக ஈரோடு திகழ்கிறது. சமையலுக்கும் சாயம் காய்ச்சுவதற்கும் இந்த மஞ்சள் இங்கிருந்து உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. நான் என் கல்லூரி காலம் முடித்து பல நிறுவனங்களில் வேலை செய்த போது அடிக்கடி ஈரோடு நகரத்திற்கு செல்லும் வாய்ப்பைப் பெற்றேன். 1993ல் நான் முதல் முதலாக ஈரோடு சென்றது முதல் இன்று வரை ஈரோடு என் மனதிற்கு நெருக்காமன நகரமாகவே திகழ்கிறது. 1993ல் ஈரோட்டுக்கு சென்றதும் நான் பார்த்த முதல்காட்சி அப்படியே நினைவில் உள்ளது. பேருந்து நிலையத்திலும் அதன் அருகில் உள்ள சாலைகளிலும் ஏராளமான தள்ளுவண்டிகளில் கூட்டம் கூட்டமாக மக்கள் நின்று ஏதோ வாங்கி சாப்பிடுகிறார்கள் இல்லை குடித்துக் கொண்டிருக்கிறார்கள். கூர்ந்து கவனித்த போது அவை எல்லாமே கூழ் விற்கும் தள்ளுவண்டிகள் என்பதை அறிந்தேன்.
தமிழர்களின் உணவுப் பாரம்பரியத்தில் சிறுதானியங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன, அதிலும் கம்பும் கேழ்வரகும் முக்கியமானவை. எங்கள் கிராமங்களில் வயல் வேலைக்குப் செல்பவர்கள் கூழ் குடித்து விட்டு தூக்கு சட்டியில் கெட்டியாக கூழ் எடுத்துச் செல்வதை என் பள்ளிப் பருவத்தில் பார்த்திருக்கிறேன். வயல் வெளிகளில் விளைந்து கிடக்கும் கத்திரிக்காய், சின்னவெங்காயம், பச்சை மிளகாய் என கைக்கு கிடைப்பதை பறித்து வாய்க்காலில் ஓடும் நீரில் அல்லது பம்பு செட்டு தொட்டிகளில் அலசி தொடுகறியாக குடித்துக் கொண்டே கூழை குடித்து விடுவார்கள். ஈரோட்டில் நான் பார்த்த காட்சி எனக்கு என் கிராமத்தை நினைவுபடுத்தியது. கிராம மக்கள் இன்று கட்டிட கூலிகளாக, தொழிற்சாலைகளின் கூலிகளாக வேலைக்கு செல்கிறார்கள். தங்களின் கிராமங்களில் இருந்து பேருந்தில் வந்து ஈரோடு பஸ் ஸ்டாண்டில் இறங்கியதும் ஆளுக்கு இரண்டு லோட்டா கூழ் குடிக்கிறார்கள். இங்கே தட்டில் வைத்திருக்கும் சீனி அவரைக்காய் வத்தல், வெங்காயம் மற்றும் ஊறுகாயை தொடுகறியாக எடுத்துக் கொண்டு கூழ் குடித்த மாத்திரத்தில் சிட்டாய் தங்கள் வேலையிடம் நோக்கி விரைகிறார்கள். இதுவும் ஒரு வகை துரித உணவகம் தான் என்று அன்று மனதில் பட்டது.
நானும் இரண்டு லோட்டா கூழ் குடித்தேன் மதியம் வரை பசியில்லை, இத்தனை ஆரோக்கியமான உணவுகள் நம்மிடம் இருப்பினும் அதில் இருந்து வெகுவாக விலகி சென்று விட்டோம் என்பது மட்டும் புரிந்தது. இப்பொழுது கூழ் பெரிய கடைகளிலும் கிடைக்கிறது, ஈரோடு சென்றால் கடுக்கன் விலாஸ் கம்மங்கூழ் இரண்டு கிளாஸ் அடித்து விட்டு உங்கள் நாளை தொடங்குங்கள். அது எல்லாம் கையில் காசு பெரிதாக இல்லாத காலம் ஒரு நாள் என் முதலாளி நான் செய்த வேலையை பாராட்டி சன்மானமாக ஒரு நூறு ரூபாய் கொடுத்தார். அந்த பணம் கிடைத்ததும் நான் நேரடியாக ஈரோட்டில் கொங்கு பரோட்டா கடைக்கு சென்று, நான் நீண்ட நாட்களாக சாப்பிட வேண்டும் என்று நினைத்த பரோட்டா கொத்துக்கறியை ஒரு கை பார்த்தேன், அன்று என் நாவில் ஒட்டிய கொத்துக்கறியின் ருசி இன்னும் நினைவில் இருக்கிறது.
காலத்தின் போக்கில் மெல்ல மெல்ல எனக்கு ஈரோட்டில் ஏராளமான நண்பர்கள், வாசகர்கள் கிடைத்தார்கள். எங்களின் நண்பர்கள் கூடுகைகள் யாராவது ஒருவர் வீட்டில் நடைபெறும். அப்படியான நாட்களில் மதிய உணவாக ஈரோடு பகுதியின் பல உணவுகள் எனக்கு அறிமுகமானது. அதில் அவர்களின் பொறிச்ச கூட்டும், கட்டிப் பருப்பும் என் மனதை கவர்ந்தது. அதே போல் தினமும் வேறு வேறு தானியம் போட்டு சாம்பார் வைக்கிறார்கள். கொங்கு வட்டாரத்தில் மட்டுமே இந்த தானிய சாம்பாரை நீங்கள் சுவைத்திட முடியும். நான் ஈரோட்டின் வீடுகளில் கொள்ளு ரசம், பச்சபுளி ரசம் சாப்பிட்டிருகிறேன், இவை இரண்டும் அலாதியான ருசி கொண்டவை. இங்கே நடைபெறும் திருமண வீடுகளில் உணவில் சிறுதானியங்கள் அவசியமாக இடம் பெறுவதை கவனித்திருக்கிறேன். ஈரோடு அருகில் இருக்கும் கருங்கல்பாளையத்தில் வரிசையாய் 10 கடைகள் உள்ளது. பத்து கடைகளிலும் ஆவி பறந்து கொண்டிருக்கிறது, ஒவ்வொரு கடையிலும் ஆண்களும் பெண்களும் பரபரப்பாக வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் அனைவருமே ஒரே பொருளை தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரே இடத்தில் பத்து கடைகளும் ஒரே பொருளை விற்பனை செய்தால் வியாபாரம் எப்படி நடக்கும் என்கிற கேள்வி எழலாம், ஆனால் காலை 5 மணி முதல் 11 மணி வரையிலும், மாலையில் 6 மணி முதல் இரவு 11 மணி வரையிலும் இந்த பத்து கடைகளிலும் இட்லி அவித்துக் கொண்டேயிருக்கிறார்கள்.
இது ஒரு இட்லி சந்தை, இங்கே ஆயிரக்கணக்கான இட்லிகள் தினமும் விற்கப்படுகிறது. இட்லிகளை வாங்க மக்கள் திரளுகிறார்கள், இட்லியை பெரிய பெரிய பாத்திரங்களில் வாகனங்களில் ஏற்றிக் கொண்டிருக்கிறார்கள். பண்டிகை, விசேஷ் நாட்கள் எனில் இந்த சந்தை 24 மணி நேரமும் இயங்குமாம். இட்லிக்கு சட்னி, காரச் சட்னி, குருமா வழங்கப்படுகிறது. ஈரோடு கருங்கல் பாளையத்தில் இயங்கும் மாட்டுச்சந்தை தமிழகத்தில் பிரபலமானது. அந்த சந்தைக்கு வரும் வியாபாரிகள், விவசாயிகளுக்காக 60 வருடத்துக்கு முன்பு இட்லிக்கடை தொடங்கினார்களாம். சாப்பிட்டவர்கள் வீடுகளுக்கு பார்சல் வாங்கத் தொடங்க சந்தை மெல்ல மெல்ல விரிவானது. நாளடைவில் கால்நடைச்சந்தை அங்கு இல்லாமல் வேறு இடத்திற்கு சென்றது, ஆனால் இட்லிக்கடைகள் தொடர்ந்து அங்கே இயங்கியது, நாளுக்கு நாள் வளரந்தது. இந்தியாவின் இட்லி சாம்ராஜ்ஜியமாக மாறியது.
ஈரோடு நகரத்திற்கு நான் தொடர்ந்து இலக்கிய நிகழ்வுகள், புத்தக கண்காட்சி மற்றும் கூட்டங்களில் உரையாற்ற செல்வேன். அப்படி செல்லும் காலங்களில் மெல்ல மெல்ல ஈரோடு நகரில் பல்வேறு உணவுகளை சுவைக்கும் வாய்ப்பு கிடைதது. ஆசாரி வறுவல், சிந்தாமணி வறுவல், பிச்சி போட்ட சிக்கன். கிள்ளு கறி, ஆந்திரா முட்டை என தொடங்கிய என் பயணம் பள்ளிப்பாளையம் சிக்கனில் வந்து தஞ்சமடைந்தது. பள்ளிப்பாளையம் சிக்கனின் மிக எளிமையான செய்முறை தான் அதன் பலமும் அடையாளமும். பள்ளிப்பாளையம் சிக்கனில் உள்ள கோழியுடன் தேங்காய் சீவல்கள் போடும் போட்டியில் யார் வென்றார்கள் என்று தெரியவில்லை, துள்ளியமான முடிவுகள் வேண்டும் எனில் இன்னும் ஒரு ப்ளேட் தான் ஆர்டர் செய்ய வேண்டும்.
மரப்பாலம் முதலியார் மெஸ்-ல் பரிமாறப்படும் தோசை, கொத்துக்கறி குருமா அவசியம் ருசித்து பார்க்க வேண்டியவை. மங்களம் ஹோட்டல், தோட்டத்து விருந்து, திண்டல் பஞ்சாபி ரெஸ்டாரண்ட் ஈரோட்டின் உணவு வரைப்படத்தில் முக்கியமானவை. ஈரோட்டின் அடையாளமாகவே இன்று ஜூனியர் குப்பண்ணா தமிழகம் முழுவது அறியப்படுகிறது. இவை எல்லாம் ஒருபுறம் இருக்க ஈரோட்டில் எம்.எல்.ஏ சீட்டு கூட வாங்கி விடலாம் ஆனால் ஸ்ரீ ஐயப்ப சாமி விலாஸ் மெஸில் மட்டன் சாப்ஸ் கிடைப்பது கடினம் என்பதை அறிந்து ஒரு நாள் அதிகாலையே உள்ளூர் வாசிகளால் ஐயப்ப விலாஸ் என்று அழைக்கப்படுகிற உணவகத்திற்கு விஜயம் செய்தேன். காலையில் இட்லி, நைஸ் தோசை, தலைக்கறி, குடல், சிக்கன் சாப்ஸ் என ஆவி பறக்க அவர்கள் ஒரு பெரும் விருந்தையே படைத்தார்கள். மட்டன் சாப்ஸ் என் இலைக்கு வந்தது அதை சாப்பிட்டு பார்த்தேன், உடன் ஒரு முடிவுக்கு வந்தேன், சொர்க்கம் என்று ஒன்று இல்லை, அது சுத்த பொய். சொர்க்கம் இருக்கிறது என்றால் நிச்சயம் அது இந்த பூமி தான், இந்த பூமியில் வாழ்வை ஒருவருக்கு அனுபவிக்க தெரியவில்லை எனில் ஏதோ மனநிலை குறைபாடு இருக்கிறது என்று அர்த்தம்.