திருச்சியில் பாம்பே பாதம் பால்... விடிய விடிய... சுடச்சுட... மடக் மடக்!
திருச்சி பாம்பே பாதம் மில்க் ஸ்டாலில் கிடைக்கும் பாதம் பால் போல் வேறு எங்கேயும் கிடைக்காது என வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தமிழ்நாட்டின் மையப்பகுதியான திருச்சியில் உள்ள மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்த பேருந்து நிலையத்திற்கு அருகே உள்ள பாம்பே பாதாம் பால் கடை காலை முதல் நள்ளிரவு வரை இயங்குகிறது. மேலும் காலை நேரத்தில் சுவையான லெஸ்ஸி, பாதாம்கீர், ரோஸ் மில்க் ஆகியவை கிடைக்கும். மாலையில் இருந்து நள்ளிரவு வரை சூடான பாதாம் பால் இங்கு கிடைக்கிறது. தற்போது ஊரடங்கு கட்டுப்பாட்டால் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே இந்த கடை இயங்கி வருகிறது. இந்த பாதா பாலின் சுவை மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இதற்கான காரணத்தை பற்றி கடையின் மேற்பார்வையாளரிடம் கேட்டபோது, கடை உரிமையாளர் ராஜஸ்தானைச் சேர்ந்தவர் என்றும், 30 வருடங்களுக்கு முன்னால் பல சிரமங்களுக்கு இடையில் இந்த கடையை தொடங்கியதாகவும் கூறினார்.மேலும் ஆரம்பத்தில் சாலையோர கடையாக தான் இருந்தது. பின்னர் பாலின் சுவையாலும் தரத்தாலும் வாடிக்கையாளர்கள் அதிகமான காரணத்தால் கடையை விரிவுபடுத்தினோம் என்றும் தெரிவித்தார்.
அதுமட்டுமல்லாமல் தினசரி 150 லிட்டர் வரை பால் உபயோகிப்பதாகவும் பண்டிகை காலங்களில் 200 லிட்டருக்கு மேல் பால் பயன்படுத்துவோம் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் சுத்தமான கறவை பால் தான் வாங்குகிறோம் என்றும் பாலில் ஒரு துளி கூட நீர் சேர்க்காமல் கறந்த ஒரு மணி நேரத்தில் பண்ணையிலிருந்து உடனடியாக கடைக்குக் கொண்டு வரப்பட்டு அதில் பாதாம் பால் தயாரிப்பதாகவும் அவர் கூறினார்.ராஜஸ்தானிலிருந்து பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட குங்குமப்பூ தூள் இதில் பயன்படுத்தப்படுவதாகவும் கொதிக்கும் நிலையில் உடைத்த பாதாம், முந்திரி, பிஸ்தாவை தூவி கிளறி விடும் போது அந்தப் பால் சுண்டி சுவையான பாதாம்பால் தயாராகிவிடும் என்றும் கடையின் மேற்பார்வையாளர் பிரகாஷ் தெரிவித்தார். தினமும் மாலை 4 மணி முதல் அதிகாலை 2 மணி வரையும் பால் விற்பனையாகும் என்றும் குழந்தைகள், பெண்கள், கல்லூரி மாணவர்கள் என்று எல்லாத் தரப்பு மக்களும் தங்களுக்கு வாடிக்கையாளர்களாக உள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.
ஆரம்பத்திலிருந்தே தரத்திலும் சுவையிலும் எந்த ஒரு மாற்றத்தையும் கொண்டு வரவில்லை. எந்தவித கலப்படமும் சேர்க்கப்படவில்லை. அதனால்தான் வாடிக்கையாளர்கள் ஆதரவு தொடர்ந்து கிடைக்கிறது என்று பிரகாஷ் தெரிவித்தார். மேலும், இங்கு வரும் வாடிக்கையாளர்களும் பாதாம் பாலின் ருசியை பற்றி கூறினர். அப்போது அவர்கள், இங்கு கிடைப்பது போல் எந்த கடையிலும் இவ்வளவு ருசியாக பாதாம்பால் அருந்தியது இல்லை என்று தெரிவித்தனர். கலப்படமில்லாமல் கறவை பாலில் தயாரிப்பதாலும், பேருந்து நிலையத்திற்கு அருகிலேயே இருப்பதால் நண்பர்களுடன் வந்து பாதாம் பால் குடித்துவிட்டு போவது உற்சாகமாக இருப்பதாக வாடிக்கையாளர்கள் தெரிவித்தனர். மேலும் தற்போதைய காலகட்டத்தில் ஊரடங்கு காரணமாக கூட்டம் சேர கூடாது என்பதற்காக நண்பர்களுடன் கூட்டமாக வர முடியவில்லை என்பது வருத்தமாக இருப்பதாகவும் வாடிக்கையாளர்கள் தெரிவித்தனர்.