தாய்மை என்பதோர் - 10 | வெளியே செல்கிறீர்களா? குழந்தை பராமரிப்பில் நீங்கள் கவனம் காட்டவேண்டிய முக்கிய விஷயங்கள்..
அரைமணி நேரமோ ஒரு மணிநேரமோ, எப்போதும் பையில் இருக்கட்டும், கூடுதல் டயாப்பர் மற்றும் துடைக்க டிஷ்யூக்கள் ( wipes).
சட்டென வெளியே கிளம்பும்போது குழந்தைக்கான பொருள்களை எடுத்துச்செல்ல மறப்பது இயல்புதான். ஆனால் ஒரு சிறிய மறதி அந்த நேரத்தில் நம்மைத் தவிக்க வைத்துவிடும். ஒரு அவசரத்துக்காக டேக்ஸி புக் செய்து வெளியே செல்கிறோம். அரைமணி நேரத்தில் திரும்ப வந்துவிடுவோம் என்பது திட்டம். அதனால் வாய் துடைக்கிற துணி, பால், தண்ணீர் இவை போதுமென கிளம்பிவிடத் தோன்றும். அரைமணி நேரமோ ஒருமணி நேரமோ, எப்போதும் பையிலிருக்கட்டும் கூடுதல் டயாபர் மற்றும் துடைக்க டிஷ்யூக்கள் ( wipes). போகிற வழியில் குழந்தை டாய்லெட் போனாலும் உடனே துடைத்து மாற்ற மாற்று டயாப்பர் உடனிருக்கட்டும்.
- வெளியே செல்லும் பை
டயாபர், துடைக்க டிஷ்யூக்கள், யூரின் ஷீட்டு, துண்டு, வாய் துடைக்கத் துணி, கையுறை, காலுறை, வாயில் வைத்துக் கடிக்கிற விளையாட்டுப் பொருள், காலி கவர்கள்( மாற்றிய டயாபரை அப்புறப்படுத்த), குழந்தையின் போர்வை, மாற்று உடைகள், இவையோடு கூடவே கிளம்புகிற நேரத்தில் பாலாக எடுத்துச் செல்வதெனில் ஃபிளாஸ்க், டம்ளர், பால் பவுடர்/ பால், வெந்நீர் ஆகியவை அடங்கிய பை கையோடு இருக்கட்டும். பால், வெந்நீர் தவிர இதர பொருள்கள் அடங்கிய பையை எப்போதும் தயாராக வைத்திருந்தால் சட்டென்று வெளியே செல்ல வசதியாக இருக்கும்.
- காலமிது கண்ணுறங்கு மகவே..
பகலில் ஆழ்ந்து நீண்டநேரம் உறங்கினால் இரவில் விழித்துக்கொள்வார்கள். நெடுநேரம் விளையாடுவார்கள். அதனால் பகலில் அதிகம் தூங்க விடக்கூடாது என்று நாமே ஒரு கதையை உருவாக்கி வைத்துள்ளோம். குழந்தையின் உடலுக்கும் மூளைக்கும் எப்போதெல்லாம் ஓய்வு தேவையோ அப்போதெல்லாம் குழந்தை உறங்குவதுதானே சரியாக இருக்க முடியும். இதில் பகல் இரவு என்ற பாகுபாடு எதற்கு? ஓரிரு ஆண்டுகளுக்குப் பிறகு நாமே பகலில் உறங்க வைக்க நினைத்தாலும் குழந்தைகள் உறங்குவதில்லை. அதனால் குழந்தையை அதன் தேவைக்கேற்ப உறங்குவதற்கு நேரம் கொடுங்கள். நம் வசதியைக் கணக்கிட்டு, பகலில் அயர்ந்து உறங்குகிற குழந்தையை எழுப்பினால், அது பகலிலும் உறக்கம் தொலைத்து அதன் நீட்சியாக இரவிலும் அழுதுகொண்டே இருக்கும். முடிந்தவரை குழந்தையின் தேவையைப் பொருத்து உறங்க வையுங்கள்.
நாசியைத் துளைக்கும் நறுமணங்கள் வேண்டாமே!
குழந்தையின் சுவாசப்பாதை மிகவும் மென்மையானது. அதனால் குழந்தை இருக்கிற இடத்தில் நின்று வாசனைத் திரவியங்கள் பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம். அதேபோல் கொசு விரட்டும் சுருள்கள், திரவங்கள், பூச்சி மருந்துகள் போன்றவற்றையும் குழந்தை இருக்கிற அறையில் பயன்படுத்த வேண்டாம். தேவையின் அடிப்படையில் பயன்படுத்த நேர்ந்தால், அச்சமயம் குழந்தை அந்த அறையில் இல்லாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள்.
பாலூட்டலும்2, கூந்தல் உதிர்வும்
பேறுகாலத்துக்குப் பின்பு ஏற்படுகிற ஹார்மன் மாற்றங்கள் சரியாகும்வரை கூந்தல் உதிர்வது மிக இயல்பானது. மருத்துவர் பரிந்துரைத்த கால்சியம் மாத்திரைகளை உட்கொள்வதும் நல்ல உணவுப் பழக்கமும் போதிய உறக்கமுமே இப்பிரச்சனையை பாதி குறைக்கும். தவிர, நீங்கள் வழக்கமாகப் பயன்படுத்துகிற பற்கள் நெருக்கமான சீப்பை விடுத்து சற்றே அகலமான பற்கள் கொண்ட சீப்புக்கு மாறிப் பாருங்கள். இதுவும் ஓரளவு பயனளிக்கும்.
தாய்மையோடு கரம் கோர்க்கட்டும் தந்தைமை!
துணி மாற்றுதல், குளிக்க வைத்தல், துடைத்தல், சுத்தம் செய்தல், பாலூட்டுதல், உணவூட்டுதல், விளையாட்டு காட்டுதல், அழுகையை ஓய்ச்சுதல், உறங்க வைத்தல், குழந்தைத் துணிகளைத் துவைத்தல், இதனோடு கூடவே வீட்டுத்துணிகளைத் துவைத்தல், உலர்த்துதல், மடித்துவைத்தல், இஸ்திரிக்குக் கொடுத்து வாங்குதல், சமைத்தல், மளிகைப் பொருள் இருப்பை உறுதிசெய்தல், குழந்தைப் பொருள்களைப் பராமரித்தல் என எல்லாவற்றையும் தனி ஒருவராய் நிச்சயமாகச் செய்யமுடியாது என்பதை உங்கள் இணையரிடம் பேசுங்கள். குழந்தையைக் குளிக்க வைத்தல், உடை மாற்றுதல், உணவூட்டுதல், உறங்கவைத்தல் போன்றவற்றில் அவர்களது பங்களிப்பும் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
குழந்தைக்குக் கொடுக்கிற பால் சூட்டின் அளவும் உணவின் பதமும் அதற்கான மெனக்கெடல்களும் தந்தையும் தெரிந்துவைத்திருக்கவேண்டும். பேறுகாலத்துக்குப் பின்பான காதலை ஆண்கள் வேலைப் பகிர்வின்மூலம் வெளிப்படுத்தலாம். சேயோடு கூடவே தாயும் மகிழட்டும்!
முந்தைய தொடர்கள்:
”தாய்மை என்பதோர்” - 1 | பூ முகம் பார்க்கும் முதல் தருணம்.. இதையெல்லாம் கவனத்தில் கொள்ளுங்கள்..
தாய்மை என்பதோர் - 2 | குட்டி நிலா முகம் பார்த்துவிட்டீர்களா? தாயின் நலனில் இவையெல்லாம் முக்கியம்..
தாய்மை என்பதோர்” - 3: தொடர் மழை.... கைக்குழந்தை வைத்திருப்பவர்கள் கவனிக்க வேண்டியது என்ன?
தாய்மை என்பதோர் - 4 | தொப்புள் காயம்...குழந்தையின் ஈரம்... கவனம்!
தாய்மை என்பதோர் 5 : குழந்தைகளின் சருமமும், அழுகையும், டயாப்பரும்...!
தாய்மை என்பதோர் 6 : பால் கட்டுதல் வலி நிவாரணமும், குழந்தையின் வளர்ச்சிப் படிநிலைகளும்..
தாய்மை என்பதோர் 7 : குழந்தையின் முகத்தை கவனியுங்கள், மென்மையாக நடந்துகொள்ளுங்கள்...!
தாய்மை என்பதோர் 8 : குழந்தையை குளிப்பாட்டுவது எப்படி...? நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன?
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )