Sweet Pongal: தித்திக்கும் சர்க்கரைப் பொங்கல்..கமகமக்கும் வெண்பொங்கல்.. செம்ம ரெசிப்பி
Sweet Pongal Recipe in Tamil: பொங்கலுக்கு பொங்கல் சாப்பிடாவிட்டால் எப்படி? ஆனால் பொங்கல் செய்வது எளிதுதான் என்றாலும் கூட அதில் ருசியைக் கொண்டு வருவது ஒரு சாமர்த்தியம்.
Sweet Pongal Recipe: பொங்கலுக்கு பொங்கல் சாப்பிடாவிட்டால் எப்படி? ஆனால் பொங்கல் செய்வது எளிதுதான் என்றாலும் கூட அதில் ருசியைக் கொண்டு வருவது ஒரு சாமர்த்தியம்.
இந்தப் பொங்கலில் நீங்கள் குடும்பத்தாருடன் உண்டு மகிழ இரண்டு வகையான சர்க்கரைப் பொங்கல் ரெஸிபி (sakkarai pongal recipe) சொல்றோம். ஒன்று பருப்பு போட்டு செய்வது, இன்னொன்று பருப்பு இல்லாமல் செய்வது.
நீங்கள் பருப்பு போட்டுக் கொள்வதும் கொள்ளாததும் உங்கள் விருப்பம் ஆனால் அரிசியும், வெல்லமும் தேர்வு செய்வதில்
கவனம் தேவை. பொங்கலுக்கு எப்பவுமே புது பச்சரிசி தான் வாங்க வேண்டும். அப்போது தான் சீக்கிரம் அரிசி குழைந்து வரும். அதேபோல் வெல்லமும் மண்டை வெல்லம் எனப்படும் கட்டிவெல்லம் வாங்கிக் கொள்ளவும். பழைய வெல்லம் நிறம் நன்றாகக் கொடுக்கும்.
ரெஸிபி 1:
தேவையானப் பொருட்கள்.
1 கப் பச்சரிசி
1/4 கப் பாசி பருப்பு
1 1/2 கப் வெல்லம்
2 கப் பால்
10 to 15 முந்திரி
2 மேஜைக்கரண்டி உலர் திராட்சை
1/2 மேஜைக்கரண்டி ஏலக்காய் தூள்
நெய் தேவையான அளவு
முதலில் வெல்லத்தை தூள் செய்து, முந்திரியை சிறு சிறு துண்டுகளாக்கி, மற்றும் ஏலக்காயை தூள் செய்து வைத்து கொள்ளவும்.
அடுத்து ஒருபாத்திரத்தில் மிதமான தீயில் அடுப்பில் வைத்து அதில் கால் கப் அளவு பாசிப் பருப்பை போட்டு வறுக்கவும். பாசிப்பருப்பு பொன் நிறமாகும் போதே கமகமக்கும். அதை தனியாக எடுத்துவைத்துக் கொள்ளவும்.
பச்சரிசியுடன் நன்கு கழுவிக் கொள்ளவும். இப்பொழுது ஒரு குக்கரை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு கப் அரிசிக்கு மூன்று கப் அளவு தண்ணீர், 1 கப் அளவு பால் மற்றும் கழுவி வைத்திருக்கும் பச்சரிசியையும் வறுத்த பருப்பையும் அதில் போட்டு குக்கரை மூடி 5 விசில் வரும் வரை வேக விடவும். (பால் சேர்க்க விரும்பாதவர்கள் தண்ணீர் மட்டும் சேர்த்துக் கொள்ளலாம்.). விசில் வந்ததும் அடுப்பை அனைத்து விட்டு குக்கர் மூடியை உடனே திறக்கக் கூடாது. ஆவி அடங்கும் வரை குக்கரைத் திறக்காமல் இருந்தால் அந்த சூட்டில் பொங்கல் இன்னும் கொஞ்சம் இதமாக பதமாக வேகும்.
பின்பு ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் நெய்யை ஊற்றி (நெய்க்கு அளவு கிடையாது.. விருப்பத்துக்கு ஏற்ப ஊற்றிக் கொள்ளவும்) நெய் தாராளம் என்றால் சுவையும் அலாதி தான். நெய் உருகியவுடன்.
நெய் உருகியதும் அதில் முழு முந்திரியை போட்டு பொன்னிறமாகும் வரை வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். அதில் உலர் திராட்சையைப் போடவும். திராட்சை உப்பி வரும்போது அடுப்பை நிறுத்திவிட்டு வெளியே எடுத்துவிடவும். அதிலேயே வைத்தால் கருகிவிடும்.
பின்பு அதே பாத்திரத்தில் ஒன்றரைக் கப் அளவு வெல்லத்தைப் போட்டு வெல்லம் கரைவதற்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வெல்லத்தை கரைத்து கொள்ளவும். பின்பு கரைந்த வெல்லத்தை சிறிது நேரம் ஆற விடவும். பின்னர் வெல்லத்தை வடிகட்டிக் கொள்ளவும். சில கசடுகள் இருந்தாலும் வடிகட்டப்படுவிடும். பின் அதை ஒரு கம்பி பாகு பதம் வரும் வரை சுட வைக்கவும். கம்பிப் பதம் என்றால் இரண்டு விரல்களுக்கு இடையே வைத்து விரல்களைப் பிரித்தால் ஒற்றைக் கம்பியாக சர்க்கரை நீண்டு வரும்.
இப்பொழுது ஆவி அடங்கியிருக்கும். அந்த குக்கர் மூடியைத் திறந்து ஒரு குழம்புக் கரண்டியை வைத்து பச்சரிசியை மசித்துக் கொள்ளவும். ரொம்பவும் மசித்துவிடக் கூடாது. வெல்லப்பாகை அரசியில் ஊற்றிக் கிளரவும். பொங்கல் சிறிது இறுக ஆரம்பிக்கும் போது அதில் அரை மேஜைக்கரண்டி அளவு ஏலக்காய் தூள், வறுத்து எடுத்து வைத்திருக்கும் முந்திரி மற்றும் உலர் திராட்சையை சேர்த்து நன்கு கலந்து வேக விடவும். இப்போதும் கொஞ்சம் நெய் ஊற்றிக் கொள்ளலாம்.
பொங்கல் அடுப்பிலேயே கெட்டியாகமால் இறக்கிவிட வேண்டும். இல்லாவிட்டால், ஆறியவுடன் இன்னும் கட்டியாகும்.
அவ்வளவு தாங்க பொங்கல். சாப்பிட்டுவிட்டுச் சொல்லுங்க. ரெசிபி 2 இதே தாங்க.. பருப்பு மட்டும் சேர்க்கப் போவதில்லை.
வெண்பொங்கல் | Ven Pongal Recipe
வெண்பொங்கல்னு சொல்லும் போதே அப்படியே ருசி இழுக்கும். அதே பச்சரிசி, பாசிப்பருப்பு தாங்க மெயின் பொருட்கள். அரசியைக் கழுவி, பருப்பையும் சேர்த்து 1க்கு 4 தண்ணீர் வைத்து உப்பு போட்டு குக்கரில் வேகவிட்டு 5 விசில் வந்தவுடன் இறக்குங்கள். ஆவி அடங்கியவுடன் குக்கரைத் திறக்கவும்.
இன்னொரு அடிகனமான கடாயில் நெய்யை தாராளமாக ஊற்றி அதில் மிளகு ஒரு தேக்கரண்டி, சீரகம் ஒரு தேக்கரண்டி, பொடிதாக நறுக்கிய இஞ்சி 20 கிராம், கருவேப்பிலை தாராளமாக, பெருங்காயம் விரும்பினால் ஒரு சிட்டிகை போட்டு வதக்கவும். குக்கரைத் திறந்து அரிசியை லேசாக மசித்து இந்த தாளிப்பைத் தூக்கிக் கொட்டிக் கிளறவும். மீண்டும் கடாயை வைத்து நெய் ஊற்றி முந்திரியை வறுத்து பொங்கலில் கொட்டவும். ஒரு வாய் பொங்கலில் ஒரு முந்திரி வரணும். அவ்வளவு முந்திரி சேர்த்துக் கொண்டால் ருசி சிறப்பு.