Mothers Day 2024: உயிர் தரும் இறைவியே..! அன்னையர் தினத்தின் வரலாறும் அதன் முக்கியத்துவமும்...
Mothers Day History in Tamil: மனித சமூகத்திற்கு ஜனனம் தந்து வாழ்வின் தவிர்க்க முடியா துணையாக பெரும்பங்காற்றும் தாய்மார்களை போற்றும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது.
Mothers Day History in Tamil: அன்னையர் தினம் கொண்டாட்டத்தின் வரலாறு மற்றும் அதன் முக்கியத்துவம் கீழே விவரிக்கப்பட்டுள்ளது.
அன்னையர் தினம்:
அன்னையர் தினம், நம் வாழ்வில் ஈடுசெய்ய முடியாத பங்கைக் கொண்டுள்ள தாய்மார்களை கௌரவிப்பதற்கும் கொண்டாடுவதற்கும் அர்ப்பணிக்கப்பட்ட ஒரு நாள் ஆகும். ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி, நடப்பாண்டில் மே 12 அன்று அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. நம்மை பெற்றெடுத்த தாய் மட்டுமின்றி நம்மை பிள்ளைகளாக கருதும் மற்ற பெண்களுக்கும், அவர்களின் கடின உழைப்பு மற்றும் தங்கள் குடும்பத்திற்காகவும் சமூகத்திற்காகவும் அவர்கள் செய்த தியாகங்கள் ஆகியவற்றை கொண்டாடுவதன் மூலம் நமது அன்பையும் நன்றியையும் வெளிப்படுத்தும் நாள் இது.
அன்னையர் தின வரலாறு:
அன்னையர் தினத்தின் வரலாறு அமெரிக்காவில் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் தொடங்கியது. இந்த பூவுலகில் அடுத்த தலைமுறையை கொண்டு வரும் தாய்மார்கள் கொண்டாடப்பட வேண்டும் என, வழக்கறிஞர் ஆன்னா ஜார்விஸ் என்பவர் எடுத்த முயற்சிகள் மூலம் இந்த நாளிற்கான தொடக்கம் அமைந்துள்ளது. 1908 ஆம் ஆண்டு தனது தாய் ஆன் ரீவ்ஸ் ஜார்விஸ் காலமான போது, ஆன்னா ஏற்பாடு செய்த ஒரு நினைவுச் சேவையுடன் அன்னையர் தினத்திற்கான வரலாறு தொடங்கியது. ஆன் ஜார்விஸ், அமெரிக்க உள்நாட்டுப் போரின்போது அர்ப்பணிப்புள்ள அமைதி ஆர்வலராகவும் மற்றும் காயமடைந்த நபர்களுக்கு உதவி செய்பவராகவும், பொது சுகாதார பிரச்சினைகளைத் தீர்க்கவும், அமைதியை மேம்படுத்தவும் அன்னையர் தின வேலைக் கழகங்களைத் தொடங்கி பிரபலமானவர் ஆவார்.
தனது தாயின் சேவைகளால் ஈர்க்கப்பட்டு, அனைத்து தாய்மார்களையும் கௌரவிக்க வேண்டும் என்ற விருப்பத்தால் உத்வேகமடைந்து, அன்னையர் தினத்தை அமெரிக்காவில் அங்கீகரிக்கப்பட்ட விடுமுறையாக நிறுவுவதற்கான பரப்புரையை ஆன்னா ஜார்விஸ் மேற்கொண்டார். அவரது பார்வை வெறும் வணிகக் கொண்டாட்டமாக இல்லாமல், சமுதாயத்தில் தாய்மார்களின் ஆழ்ந்த செல்வாக்கிற்கு இதயப்பூர்வமான நன்றிகளாக இருந்தது. இதனால் ஆன்னாவின் முயற்சிகள் வேகம் பெற்றன. அதன் விளைவாக 1914 ஆம் ஆண்டில் அப்போதைய அமெரிக்க அதிபர் உட்ரோ வில்சன், ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுகிழமை அன்னையர் தினமாக கொண்டாடப்படும் என பிரகடனப்படுத்தினார். தாய்மார்களை கௌரவிக்கும் அந்த நாள் தேசிய விடுமுறையாகவும் அறிமுகப்படுதினார்.
அன்னையர் தினத்தின் முக்கியத்துவம்:
ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் தாய்மார்கள் தவிர்க்க முடியா மிக முக்கிய பங்கு வகிக்கின்றனர். தாய்மார்கள், பாட்டிமார்கள் மற்றும் பிற தாய்வழி நபர்கள் வழங்கிய நிபந்தனையற்ற அன்பு, வளர்ப்பு, கவனிப்பு மற்றும் தன்னலமற்ற தியாகங்களை ஆழமாக அங்கீகரிப்பதே அன்னையர் தினத்தின் முக்கியத்துவம் ஆகும். குடும்பத்தை வடிவமைக்கும் மற்றும் குழந்தைகளை அன்புடனும், இரக்கத்துடனும் வளர்க்கும் இந்த முக்கிய நபர்களுக்கு ஆழ்ந்த நன்றியையும், பாராட்டுகளையும், பாசத்தையும் வெளிப்படுத்தும் நாள். அன்னையர் தினத்தின் சாராம்சம் எல்லைகள், கலாச்சாரங்கள் மற்றும் மரபுகளை கடந்து, தாய்வழி பிணைப்புகளை மதிக்கும் நாளாக உலகளவில் எதிரொலிக்கிறது. இது தாய்மார்களுக்கு மகிழ்ச்சி மற்றும் பாராட்டுக்குரிய ஒரு நாளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. மேலும் தாய்மார்கள் தகுதியான அன்பையும், அங்கீகாரத்தையும் பெற அன்னையர் தினம் வழிவகை செய்கிறது.