வெண்டைக்காய் டிமாண்ட்...கிலோ ரூ.800 க்கு விற்கும் விவசாயி!
இந்த விதை 40 நாள்களிலேயே வளர ஆரம்பித்து அதிக மகசூலை விவசாயிக்கு வழங்கியது.
மத்தியப்பிரதேசத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் தன்னுடையத் தோட்டத்தில் சிவப்பு வெண்டைக்காயைப் பயிரிட்டு அதிக விளைச்சல் பார்த்துவருகிறார். தற்போது கிலோ ரூ. 800 வரை விற்பனையாவதாகவும் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார்.
உடலுக்கு ஆரோக்கியத்திற்கும், குடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றவும், புற்றுநோயைக் குணப்படுத்த என பல பிரச்சனைக்குச் சிறந்த காய்கறியாக உள்ளது வெண்டைக்காய். இத்தனைச் சத்துக்கள் அனைத்தும் பச்சை நிற வெண்டைக்காயில் தான் அதிகளவில் காணப்படுவதால் விவசாயிகள் இதனைப்பயிரிட்டுவருகின்றனர். ஆனால் இந்த பச்சைக்காய்கறிக்கு மாற்றாக சிவப்பு நிற வெண்டைக்காய்க்கும் அதிக மவுசு உள்ளதை வெளிப்படுத்தியுள்ளார் மத்தியப்பிரதேசத்தை சேர்ந்த விவசாயி மிஸ்ரிலால் ராஜ்புத்.
மத்தியப்பிரதேச மாநிலம் போபால் மாவட்டம் கஜுரி கலன் பகுதியைச் சேர்ந்தவர் தான் விவசாயி மிஸ்ரிலால் ராஜ்புத். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள வேளாண் ஆராய்ச்சி இன்ஸ்டிடியுட்டில் இருந்து வெண்டைக்காய் விதைகளை வாங்கி வந்துள்ளார். பின்னர் தனது தோட்டின் சிறிய அளவில் பயிரிட்டுள்ளார். இந்த விதை 40 நாள்களிலேயே வளர ஆரம்பித்து அதிக மகசூலை விவசாயிக்கு வழங்கியது. இதனையடுத்து அதிகளவில் சிவப்பு வெண்டைகாயை பயிரிட்டு அதிக மகசூலை பெற்றுள்ளார். குறிப்பாக ஒரு ஏக்கர் நிலத்தில் குறைந்தபட்சம் 40-50 குவிண்டால் மற்றும் அதிகபட்சம் 70-80 குவிண்டால் வரை வளர்க்க முடியும் எனவும் இந்த விவசாயி மிஸ்ரிலால் தெரிவித்துள்ளார்.
மேலும் வழக்கமான பச்சை நிற வெண்டைக்காய்களில் அதிக அளவில் வைட்டமின் ஏ மற்றும் சி சத்துக்கள் நிறைந்துள்ளன. ஆனால் இந்த சிவப்பு நிற வெண்டைக்காயில் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் திறன் உள்ளதால் மக்கள் இதனை விரும்பிக்கேட்கின்றனர். இதன் காரணமாகவே நான் இதனை என் தோட்டத்தில் பயிரிடத்ததாக கூறிய விவசாயி மிஸ்ரிலால், சிவப்பு நிற வெண்டைக்காய் கால் கிலோ ரூ.75 முதல் ரூ.300 வரை விற்பனையாகிறது என மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். மேலும் மற்ற காய்கறிகளைப்பாதுகாக்க பூச்சி மருந்துகள் தெளிக்கும் அவசியம் இதில் தேவையில்லை எனவும் விவசாயி கூறியுள்ளார். இதோடு மக்களும் விருப்பத்துடன் சிவப்பு வெண்டைக்காயைக் கேட்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் இதனைப்பயிரிடுவதாகவும் தெரிவிக்கிறார்.
குறிப்பாக பச்சை நிற வெண்டைக்காயை விட சிவப்பு வெண்டைக்காய் அதிக நன்மை பயக்கும் மற்றும் சத்தானதாக உள்ளது. மேலும் இதில் இதயம் மற்றும் இரத்த அழுத்தம், நீரிழிவு, அதிக கொலஸ்ட்ரால் போன்ற பிரச்சினைகளுக்கு எல்லாம் தீர்வாக அமைகிறது. இதன் காரணமாகவே டெல்லியில் உள்ள பெரிய வணிக வளாகங்களில் இந்த வெண்டைக்காய் கிலோ ரூ. 800 வரை விற்பனையாகி வருவது குறிப்பிடத்தக்கது.