கொரோனா காலகட்டத்தில் அவசிய தேவையாகும் மனநல ஆலோசனைகள்!
கொரோனா காலகட்டத்தில் உடல்நலம் போலவே மிக மிக முக்கியமானது மனநலம் சார்ந்த ஆலோசனைகளும் சிகிச்சைகளும் என்பதை கேரள அரசு நன்கு உணர்ந்துள்ளது. ஆனால் தமிழகத்தில் மனநலம் சார்ந்த ஆலோசனைகளும், சிகிச்சைகளும் எந்த அளவுக்கு கடைபிடிக்கப்படுகிறது என்பது கேள்விக்குறியாக உள்ளது.
இந்த கொரோனாகாலகட்டத்தில் அரசு தீவிரமாக இயங்கி வருகிறது. தமிழகத்தில் தினம்தோறும் சராசரியாக 25ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிக்கிறது. ஊரடங்கு, கட்டுப்பாடுகள் என அரசின் அடுத்தடுத்த நடவடிக்கையால் நாளுக்கு நாள் கொரோனா எண்ணிக்கை குறைந்து வருகிறது. தினமும் மாலை கொரோனா தொடர்பான விவரங்களை அரசு வெளியிடுகிறது. அன்றைய தினத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தமிழ்நாடு அளவில் எத்தனை? மாவட்ட வாரியாக பாதிப்பு விவரம் என்ன? இறப்பு எண்ணிக்கை எவ்வளவு? குணமடைந்து சென்றவர்கள் எத்தனை பேர்? போன்ற விவரங்கள் வழங்கப்படுகின்றன. நோய்க்குறித்தும் சிகிச்சை குறித்தும் தமிழ்நாடு அரசு இந்த தகவலை வழங்கினாலும் மிக முக்கியமான ஒரு கூடுதலாக வழங்கி வருகிறது கேரள அரசு. அது மனநலம் சார்ந்த புள்ளி விவரங்கள்.
கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பவர்கள் எத்தனை பேருக்கு மனநலம் சார்ந்த ஆலோசனை வழங்கப்பட்டது என்றும், அதேபோல, கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மனநிலை, பள்ளி குழந்தைகளின் மனநிலை, முன்களப் பணியாளர்களின் மனநிலை, அரசின் இலவச தொலைபேசிக்கு மனநலம் சார்ந்து ஆலோசனைக்கு அழைப்பவர்கள் என மனநிலை சார்ந்த ஆலோசனை வழங்கப்படுவது குறித்த புள்ளிவிவரம் தினம் தோறும் தகவல்களாக வழங்கப்படுகின்றன.
கொரோனா காலகட்டத்தில் உடல்நலம் போலவே மிக மிக முக்கியமானது மனநலம் சார்ந்த ஆலோசனைகளும் சிகிச்சைகளும் என்பதை கேரள அரசு நன்கு உணர்ந்துள்ளது. ஆனால் தமிழகத்தில் மனநலம் சார்ந்த ஆலோசனைகளும், சிகிச்சைகளும் எந்த அளவுக்கு கடைபிடிக்கப்படுகிறது என்பது கேள்விக்குறியாக உள்ளது. முற்றிலும் இல்லாமல் இல்லை. புதுக்கோட்டையில் சில தினங்களுக்கு முன்பு 54ஆயிரம் பேருக்கு மனநலம் சார்ந்த ஆலோசனைகள் வழங்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இது குறித்து தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்த புதுக்கோட்டை மாவட்ட மனநல திட்ட அலுவலர் கார்த்திக் தெய்வநாயகம், விடுமுறை இன்றி 54000 பேருக்கு மனநல ஆலோசனை வழங்கப்பட்டது எங்கள் குழுவின் சிறந்த பணி என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தின் சில இடங்களிலும், சென்னை போன்ற பெருநகரங்களில் ஆங்காங்கே மனநல ஆலோசனைகளை தேடிப்பிடிக்கலாம் என்றாலும் தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் ஆலோசனைகள் கிடைக்கிறதா என்பதை அரசு தெளிவு படுத்திக்கொள்ள வேண்டும். கொரோனா குறித்தான அச்சம், கொரோனா அறிகுறி இருந்தாலும் அச்சத்தால் சோதனை செய்துகொள்ளாமல் இருப்பது, வீடுகளுக்குள் முடங்குவது, வீட்டை விட்டு பிரிந்து இருப்பதால் ஏற்படும் மன உளைச்சல், பொருளாதார சிக்கல்கள், ஊரடங்கால் ஏற்படும் வருமானம் இழப்பு, உறவினர்கள், நண்பர்களின் உயிரிழப்பு என மனநலம் சார்ந்த பல பிரச்னைகளால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலக உணவு பாதுகாப்பு நாள்: உங்கள் உணவை பாதுகாக்க சில ‛டிப்ஸ்’
கொரோனாவால் பாதிக்கப்பட்ட போது தனிமையில் இருந்த ஒருவர் தன்னுடைய மனநிலை குறித்து பேசினார். அதில், நான் இப்போது கொரோனாவில் இருந்து மீண்டு விட்டேன். ஆனால் கொரோனா காலக்கட்டம் என்னை மனதளவில் பயமுறுத்தியது. வழக்கமான நோய் என்றாலும் குடும்பத்தினர் உறவினர்கள், நண்பர்கள் என ஒரு கூட்டம் நம்மை சுற்றி இருக்கும். ஆனால் கொரோனா என்னை தனிமையில் தள்ளியதாக உணர வைத்தது. செல்போன், சோஷியல் மீடியா என என்னை தனிமையில் இருந்து நானே விலகி வைத்தாலும் ஒரு வித எதிர்மறையான எண்ணம் என்னை சுற்றி இருப்பதை உணர முடிந்தது. அதை அனைவராலும் எளிதாக கடந்துவரமுடியுமா என்பது கேள்விகுறிதான். உடல்நல சிகிச்சை போலவே மனநல ஆலோசனைகளும் கொரோனா காலக்கட்டத்தில் மிக முக்கியம் என்றார்.
மருத்துவ மனைகளில் மனநல ஆலோசனை மையங்கள், இலவச தொலைபேசி மூலம் மனநல ஆலோசனைகள் எனமனநல ஆலோசனை விவரங்களையும் தமிழக அரசு தனியாக கையாண்டு புள்ளிவிவரமாக வெளியிட வேண்டும். கொரோனாவுக்கு மக்களின் உடல்நலம் சார்ந்த சிகிச்சையில் கவனம் செலுத்தும் அரசு, அதே முக்கியத்துவைத்தை மனநலம்சார்ந்த பிரச்னைகளுக்கும் கொடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.
இமாச்சலில் பலி எடுக்கும் கொரோனா சர்க்கரை.. .. கவனம் மக்கா!