Chameleon : கடவுளை விட சிறந்த ஓவியர் யார்? ஐ.எஃப்.எஸ் அதிகாரி நமக்கு கொடுத்த சர்ப்ரைஸ் இதுதான்..
பச்சோந்தி நிறம் மாறும் வீடியோவை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இந்திய வனத்துறை அதிகாரியான சுசந்தா நந்தா கடவுளை விட சிறந்த ஓவியர் யார் என கேள்வி எழுப்பி இருக்கிறார்.
பொதுவாக மனிதர்களை நிறம் மாறும் பச்சோந்திக்கு ஒப்பிட்டு அழைப்பதுண்டு. அந்த அளவுக்கு பச்சோந்தி ஆனது நிமிஷத்துக்கு நிமிஷம் தனது நிறத்தை மாற்றிக் கொள்ளும் என கூறுவர். ஒரு வண்ணமயம் மிக்க பச்சோந்தி ஒன்று தனது நிறங்களை மாற்றிக் கொள்ளும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.
இந்த பச்சோந்தி நிறம் மாறும் வீடியோவை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இந்திய வனத்துறை அதிகாரியான சுசந்தா நந்தா கடவுளை விட சிறந்த ஓவியர் யார் என கேள்வி எழுப்பி இருக்கிறார்.
பச்சோந்தி ஒரு நிமிடத்திற்குள் பலமுறை தனது உடலில் உள்ள நிறங்களை மாற்றிக் கொள்கிறது இதனை முதன்முறை பார்ப்பவர்களுக்கு ஆச்சரியமாக தான் இருக்கும். மிகவும் கலர்ஃபுல்லாக இருக்கும் அந்த பச்சோந்தி அமைதியாக இருந்தாலும் தனது உடல் மூலமாக வேலைகளை செய்து கொண்டே இருக்கிறது. சிவப்பு, மஞ்சள், பச்சை, ஆரஞ்சு, நீலம், வெள்ளை என மிகவும் தெளிவான பிரகாசமான நிறங்களை கொண்டுள்ளது இந்த பச்சோந்தி. பச்சோந்தியின் உடலில் வரி வடிவில் நிறங்கள் அமைந்திருப்பதும், அது கண்ணுக்கு மிகவும் பளிச்சென்று இருப்பதும் இயற்கையின் படைப்பில் கடவுள் செய்த அற்புதம் என்று தான் சொல்ல வேண்டும்.
இந்த குறித்த வீடியோ காட்சி எங்கு எடுக்கப்பட்டது, இந்த பச்சோந்தி எந்த பகுதியைச் சேர்ந்தது போன்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை, இருந்தபோதிலும் இயற்கையானது எவ்வளவு அழகாக இருக்கிறது ,அது தன்னைத்தானே பாதுகாக்க எவ்வாறு மாற்றிக் கொள்கிறது என்பது பிரம்மிப்பாகவே இருக்கிறது. ஒரு ஓவியர் தனது தூரிகையைக் கொண்டு பல நிறங்களை கலந்து ஒரு உயிரினத்தை வரைந்து உயிர் கொடுத்திருப்பது போல் இருக்கிறது.
இந்த வகை வண்ணமயமான பச்சோந்திகளின் தோலில் குரோமடோபோர்கள் எனப்படும் சிறப்பு செல்கள் இருப்பதால், நிறங்களை எளிதில் மாற்றக்கூடிய தன்மையைக் கொண்டுள்ளன. குறிப்பாக பெண் பச்சோந்திகள் அவை கர்ப்பமாக இருக்கும் போது மட்டுமே தமது
நிறத்தை மாற்றிக் கொள்வதாக கூறப்படுகிறது. அதாவது இந்த நிறம் மாறுதலுக்கான அர்த்தம் ,அவை இனச்சேர்க்கை செய்யாது என்பதைக் குறிப்பதாக கூறப்படுகிறது. அதே சமயம் ஆண் பச்சோந்திகள் தமது மனநிலையைப் பொறுத்து சிவப்பு, பச்சை அல்லது நீல கலவையில் நிறங்களை அடிக்கடி மாற்றிக் கொள்ளும் எனக் சொல்லப்படுகிறது.
இவ்வகையான உடலில் வர்ணங்களைக் கொண்ட பச்சோந்திகள் முதலில் மடகாஸ்கரை மட்டுமே பூர்வீகமாகக் கொண்டிருந்தன. நதிக்கரையோரங்கள், மற்றும் காடுகள் அவற்றின் வாழ்விடங்களாக இருந்தன. பச்சோந்திகளில் ஏராளமான வகைகள் இருந்தாலும் இந்த அபூர்வ மிக்க வர்ணங்களை கொண்ட பச்சோந்தியை காண்பது மிகவும் அரிது என கூறப்படுகிறது. இந்த அபூர்வ மிக்க பெரிய வகை பச்சோந்தியின் வீடியோவானது சமூக வலைத்தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.
தாம் இருக்கும் இடத்துக்கேற்ப நிறத்தை மாற்றிக்கொள்ளும் பச்சோந்திகள் அடிப்படையில் மிகுந்த அச்ச சுபாவத்தை கொண்டிருப்பவை என இனம் காணப்பட்டுள்ளது. பச்சோந்திகள் நிறத்தை மாற்றிக்கொள்வதற்கு முக்கிய காரணம் ஏதேனும் ஆபத்து நேர்ந்துவிடுமோ என்பதுதான். அதனால்தான் அவை ஒரு நிமிடத்திற்கு நிமிடம் நிறத்தை மாற்றிக் கொள்வதாக கூறப்படுகிறது. பச்சோந்திகளின் தோலில் இரண்டு அடுக்குகள் கொண்ட போட்டோனிக் கிரிஸ்டல்கள் (ஒளிரும் படிகங்கள்) இருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகத்தான் பச்சோந்திகள் அடிக்கடி நிறம் மாறுவதாக சமீபத்திய ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.