இவ்வளவு பயன்கள், நன்மைகள்.. கறிவேப்பிலை குழம்பு.. 10 நிமிடங்களில் செய்வது எப்படி?
கறிவேப்பிலை பொடி, தொக்கு, சாதம் எல்லாம் எல்லாரும் கேள்விப்பட்டிருப்போம். அதென்ன குழம்பு? அதை செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்.
கருவேப்பிலை இட்லி பொடி மட்டுமல்ல. இப்போது கருவேப்பிலை குழம்பும் மிகவும் பிரசித்தம்
கருவேப்பிலை... இந்தப் பெயரைக் கேட்டாலே எல்லாருக்கும் நினைவில் வருவது, உணவுத் தட்டுகளில் தனியே ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கறிவேப்பிலை இலைகள்தான். என்னதான் மருத்துவர்களும், நிபுணர்களும் கருவேப்பிலையின் நன்மைகளை எடுத்துச் சொன்னாலும் பலரும் அதனை சாப்பிடுவதில்லை. பெரியவர்களே இந்த நிலையில் இருக்கும்போது குழந்தைகளின் நிலையை சொல்லவே வேண்டாம்.
அதனால் தான் பாகற்காயைத் தயிர், சர்க்கரை எல்லாம் போட்டு என்னவெல்லாமோ செய்து கொஞ்சம் கூட கசப்பு தெரியாமல் குழந்தைகளைச் சாப்பிட வைத்துவிடுகிறார்கள் சில பெற்றோர்கள். அப்படி பெரிய கஷ்டங்களைப் படாமல் எளிதாக செய்யும் ஒரு வகை குழம்புதான் கறிவேப்பிலை குழம்பு. இதன் சுவை நிச்சயம் பலருக்கும் பிடிக்கும். கறிவேப்பிலை தொக்கு, சாதம் எல்லாம் எல்லாரும் கேள்விப்பட்டிருப்போம். அதென்ன குழம்பு? அதை செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்.
அடுப்பில் கடாயை வைத்துவிட்டு எண்ணெயைச் சேர்க்க வேண்டும். நல்லெண்ணெய் அல்லது கடலை எண்ணெயைச் சேர்க்கலாம். சுவையைக் கூட்டுவது மட்டுமல்லாமல் உடலுக்கும் நல்லது.
எண்ணெய் சூடானதும் அதில் மிளகு, சீரகத்தைச் சேர்க்க வேண்டும். பின்பு 4 முதல் 6 பல் பெரிய சைஸ் பூண்டு மற்றும் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்க்க வேண்டும். இதனுடன் லைட்டாக உப்பு சேர்த்தால் கொஞ்சம் சீக்கிரம் வதங்கும். நேரமும் மிச்சமாகும். இதன்பின்னர் நன்கு கழுவப்பட்ட ஒரு கைப்பிடி அளவிலான கருவேப்பிலையை சேர்க்க வேண்டும். அதனையும் நன்காக வதக்க வேண்டும். வதங்கியதும் அடுப்பை ஆஃப் செய்து விடலாம்.
கடைசியாக ஒரு ஸ்பூன் அளவு எண்ணெய் சேர்த்து ஆற வைக்க வேண்டும். சூடு குறைந்த பின்பு அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மிக்சியில் போட்டு அரைக்க வேண்டும். அடுத்தாக தாளிப்பை தயார்செய்ய வேண்டும். கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு சேர்க்க வேண்டும். பின்னர் சீரகம் மற்றும் தேவையான அளவு பெருங்காயத்தை சேர்க்க வேண்டும். அவற்றுடன் 10-12 உரித்த சின்ன வெங்காயத்தை சேர்க்க வேண்டும்.
இவை வதங்கிய பின்பு மிக்ஸியில் அரைத்து தயாராக வைத்திருக்கும் அந்த கருவேப்பிலை மிக்ஸை சேர்க்க வேண்டும். இது 2 நிமிடம் வதங்கிய பின்பு அதனுடன் தனி மிளகாய் தூள், குழம்பு மிளகாய் தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள், ஆகியவற்றை தேவையான அளவு சேர்க்க வேண்டும். இவற்றுடம் சிறிதளவு புளி கரைசலையும் சேர்க்க வேண்டும்.
பின்னர் தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிதளவு நீர் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். அவ்வளவுதான் சூடான சுவையான இரும்பு சத்து நிறைந்த கருவேப்பிலை குழம்பு தயார். சூடான சாதத்துடன் சுவையாக உண்டு மகிழலாம்.