Peanut Dosa :தோசை மாவு இல்லையா? ஆரோக்கியமான வேர்க்கடலை தோசை.. காரச்சட்னி : இப்படி செய்து அசத்துங்க!
சுவையான மற்றும் ஆரோக்கியமான வேர்க்கடலை தோசை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
வேர்க்கடலை - 1 கப்
கோதுமை மாவு - அரை கப்
அரிசி மாவு அல்லது ரவை - அரை கப்
தக்காளி - 2
வரமிளகாய் - 5
இஞ்சி - மிக சிறிய துண்டு
பூண்டு - 2 பற்கள்
கேரட் - 1
பெரிய வெங்காயம் - 1
பச்சை மிளக்காய் -2
கொத்தமல்லித்தழை - 1 கைப்பிடி
உப்பு - தேவையான அளவு
செய்முறை
ஒரு கப் பச்சை வேர்க்கடலை ( காய்ந்ததாக இருந்தால் ஊற வைத்து வேக வைக்கலாம்) காம்புடன் இருக்கும் 5 வரமிளகாய், இரண்டு நாட்டு தக்காளி, அரைபதம் உப்பு ஆகியவற்றை சேர்த்து 5 நிமிடம் அதாவது வேர்க்கடலை வேகும் வரை வேக வைத்து இறக்கிக்கொள்ள வேண்டும்.
இப்போது வேர்க்கடலையில் இருக்கும் தண்ணீரை வடிகட்டிக் கொள்ள வேண்டும். வேகவைத்த வரமிளகாயை எடுத்து காம்பு நீக்கி விட்டு மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளவும், தக்காளியையும் மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளவும். இதனுடன் இரண்டு ஸ்பூன் தேங்காய் துருவலையும் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். கடுகு கறிவேப்பிலை சேர்த்து தாளித்து இந்த சட்னியுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
வேகவைத்த வேர்க்கடலையை மிக்ஸி ஜாரில் சேர்த்து, அரை ஸ்பூன் அளவு சீரகம், அரை இன்ச் நறுக்கிய இஞ்சி, பூண்டு, தேவையான அளவு தண்ணீர் ஆகியவற்ற சேர்த்து மைய அரைத்துக்கொள்ள வேண்டும். அரை கப் கோதுமை மாவு, அரை கப் அரிசி மாவு சேர்த்து 30 நொடிகள் அரைத்து எடுத்துக் கொள்ளவும். ( அரிசி மாவு இல்லையென்றால் அதற்கு பதில் ரவை சேர்த்துக் கொள்ளலாம்)
இதை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி இதனுடன் பொடியாக நறுக்கிய இரண்டு பச்சை மிளகாய், நறுக்கிய ஒரு வெங்காயம், கால் டீஸ்பூன் மஞ்சள் தூள், துருவிய ஒரு கேரட், நறுக்கிய ஒரு கைப்பிடி கொத்தமல்லித்தழை ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்துகொள்ள வேண்டும். மாவு சற்று திக்கான தோசை மாவு பதத்தில் இருக்க வேண்டும்.
இப்போது இந்த மாவில் வழக்கம்போல் தோசை ஊற்றி எடுத்துக்கொள்ளவும். மாவு கெட்டிப் பதத்தில் இருப்பதால் நைஸ் தோசை வராது. எனவே கல் தோசை போன்று சுட்டு எடுத்துக்கொள்ளலாம்.
இந்த தோசையை நாம் ஏற்கனவே தயாரித்து வைத்துள்ள சட்னியுடன் வைத்து சாப்பிடலாம்.இதன் சுவை மிகவும் நன்றாக இருக்கும்.
மேலும் படிக்க
Ragi Idiyappam:கால்சியம் சத்து நிறைந்த கேழ்வரகு இடியாப்பம்... இப்படி செய்தால் பெர்ஃபெக்ட்டா வரும்!
Andhra Paruppu Podi: காரசாரமான ஆந்திரா பருப்பு பொடி! சூடான சாதத்துக்கு சூப்பர் காம்பினேஷன்!