90’S கிட்ஸ்களின் ஃபேவரெட்.. இட்லி மாவில் சுவையான தேன்மிட்டாய் எப்படி செய்வதென்று பார்க்கலாம்..
இட்லி மாவை வைத்து சுவையான தேன் மிட்டாய் எப்படி செய்வதென்று பார்க்கலாம் வாங்க.
தேவையான பொருட்கள்
இட்லி மாவு – 1 கப், சமையல் சோடா – 1/4 டீஸ்பூன், சர்க்கரை – 1 கப், சமையல் எண்ணெய் – தேவையான அளவு, ஆரஞ்சு ஃபுட் கலர் – 1/4 டீஸ்பூன்.
செய்முறை
முதலில் அடுப்பை பற்றவைத்து அடி கனமான பாத்திரத்தை வைத்து பாகு காய்ச்சிக்கொள்ள வேண்டும். ஒரு கப் அளவுக்கு சர்க்கரை எடுத்துக்கொண்டால் அதே கப்பில் முக்கால் கப் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்கவிட வேண்டும்.
சர்க்கரைப்பாகு அதிகம் கொதித்துவிடவும் கூடாது. மிகவும் குறைவாகவும் கொதித்து விடக்கூடாது. ஒரு கம்பி பதம் வரும் அளவிற்கு சரியான பதத்தில் கொதிக்க விட வேண்டும். அப்போது தான் தேன் மிட்டாய் மீது சர்க்கரை சர்க்கரையாக இல்லாமல் சாப்பிட நன்றாக இருக்கும்.
சர்க்கரை பாகு தயாரானதும் அடுப்பை அணைத்துவிட வேண்டும். இப்போது கடாயில் சமையல் எண்ணெயை தேவையான அளவிற்கு ஊற்றி சூடாக்கிக்கொள்ள வேண்டும். தேன்மிட்டாய் செய்வதற்கு இட்லி அரிசி, உளுந்து 4:1 என்கிற சதவிதத்தில் எடுத்து 4 மணிநேரம் ஊறவைத்து மிக்சியில் அரைத்துக்கொள்ளலாம்.
புளிக்காத இட்லி மாவு இருந்தால் அதையும் தேன் மிட்டாய் செய்ய பயன்படுத்திக்கொள்ளலாம். இட்லி மாவில் கால் டீஸ்பூன் பேக்கிங் சோடா சேர்த்து, ஆரஞ்சு ஃபுட் கலர் தேவையென்றால் சிறிதளவு சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். ஃபுட் கலர் சேர்த்தால் தான் தேன்மிட்டாய் பார்ப்பதற்கு ஆரஞ்சு நிறத்தில் அழகாக இருக்கும்.
சூடாக இருக்கும் எண்ணெயில் டீஸ்பூன் ஒன்று எடுத்துக்கொண்டு கால் டீஸ்பூன் அளவில் மாவு விட வேண்டும். இதே முறையில் மாவை எண்ணெயில் சேர்க்க வேண்டும். இப்போது தேன்மிட்டாய் சூப்பராக உப்பி வரும். இரண்டிலிருந்து மூன்று நிமிடத்திற்குள் மாவு வெந்து வந்துவிடும்.
எல்லா பக்கமும் சீராக வேகும் அளவிற்கு பார்த்துக்கொள்ள வேண்டும். தேன்மிட்டாய் வெந்ததும் சூடாக இருக்கும் சர்க்கரைப் பாகில் சேர்த்து வட வேண்டும். பாகு சூடாக இருந்தால்தான் தேன் மிட்டாயில் நன்றாக ஊறி சாப்பிடும்போது நல்ல சுவையாக இருக்கும். தேன் மிட்டாயை சர்க்கரை பாகில் 2-இல் இருந்து 3 மணிநேரம் வரை அப்படியே ஊறவிட வேண்டும். பிறகு எடுத்து பார்த்தால் சுவையான அருமையான தேன் மிட்டாய் உங்களுக்கு கிடைத்துவிடும். அவ்வளவுதான் சுவையான தேன் மிட்டாய் தயார் (90ஸ் கிட்ஸ்கள் தேன்மிட்டாய் சாப்பிட ஆசைப்பட்டால், இனி கடை கடையாய் தேடி அலைய வேண்டிய அவசியமில்லை வீட்டிலேயே சுவையான தேன்மிட்டாய் செய்து விட முடியும்)