Prawn Vada Recipe: ருசியில் எச்சில் ஊறச்செய்யும் இறால் வடையை 10 நிமிடத்தில் செய்துவிடலாம்.. இது மதுரை ரெசிப்பி
வீட்டிற்கு விருந்தினர்கள் வந்தாலோ, குழந்தைகளுக்கு வித்யாசமான ஸ்நாக்ஸ் கொடுக்க விரும்பினாலோ இறால் வடையை செய்து கொடுக்கலாம்
அசைவ பிரியர்களுக்கு கடல் உணவு என்றால் சொல்லவே வேண்டாம். குறிப்பாக கடல் உணவான இறாலை விரும்பாதவர்கள் இருக்க முடியாது. முள், எலும்பு இல்லாத ருசியான உணவான இறாலுக்கு தனி ருசி உண்டு. இறால் பெப்பர் ஃப்ரை, இறால் கிரேவி, இறால் பிரியாணி, இறால் ஃப்ரை, இறால் தொக்கு, இறால் மஞ்சூரியன் என சாப்பிட்டவர்கள் ஒருமுறை இறால் வடை செய்து ருசி பார்க்கலாம். இறாலை வித்யாசமான முறையில் புதுவிதமாக சாப்பிட விரும்புவோருக்கு இறால் வடை நல்ல ருசியை கொடுக்கும்.
வீட்டிற்கு விருந்தினர்கள் வந்தாலோ, குழந்தைகளுக்கு வித்யாசமான ஸ்நாக்ஸ் கொடுக்க விரும்பினாலோ இறால் வடையை செய்து கொடுக்கலாம். இந்த நிலையில் இறால் வடை செய்வதற்கான பொருட்கள் மற்றும் செய்முறையை பார்க்கலாம்.
இறால் வடை செய்ய தேவையான பொருட்கள்
தோல் நீக்கிய இறால் - கால் கிலோ, பொட்டுக்கடலை மாவு- 150 கிராம், கார்ன்பிளவர் மாவு - 50 கிராம், இஞ்சு, பூண்டு விழுது - ஒரு ஸ்பூன், பச்சை மிளகாய் - ஒன்று, வரமிளகாய் தூள், மஞ்சள் தூள் - தேவையான அளவு, பட்டை இலவங்கம் பொடி - ஒரு சிட்டிகை, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - ஒருபிடி, பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - ஒன்று, முட்டை - 2, உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - வடை சுடுவதற்கு ஏற்ற அளவு.
இறால் வடை செய்யும் முறை
முதலில் இறால்களை தோல் நீக்கி நன்றாக கழுவி எடுத்து கொள்ள வேண்டும். இறால்களுடன், மேலே சொன்ன அளவுடைய பொட்டுக்கடலை மாவு, கார்ன்பிளவர் மாவு, இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய், வரமிளகாய் தூள், மஞ்சள் தூள், பட்டை இலவங்கம் பொடி, தேவையான அளவு உப்பை சேர்த்து கொள்ள வேண்டும். இந்த கலவையை மிக்சி ஜாரில் போட்டு வடை தட்டி போடும் பக்குவத்துக்கு அரைத்து எடுத்து கொள்ள வேண்டும். ரொம்ப நைசாக அரைக்காமல், கொஞ்சம் கொரகொரப்பு தன்மையுடன் அரைத்து எடுத்து கொள்ள வேண்டும். பின்னர் அதனுடன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, சோம்பு சேர்த்து மற்றும் இரண்டு முட்டையை உடைத்து ஊற்றி பிசைந்து கொள்ள வேண்டும். மேலும் ருசிக்கு ஒரு பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி போட்டு கொள்ளலாம். இறாலில் தண்ணீர் இருந்தால் நீர் சேர்க்க வேண்டாம். இல்லை என்றால் உருண்டை பிடிக்கும் பதத்தில் சிறிது நீர் சேர்த்து கொள்ளலாம்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய்யை ஊற்ற வேண்டும். எண்ணெய் சூடானதும், அடுப்பை மிதமான சூட்டில் வைத்து கொள்ளவேண்டும். வடைக்காக அரைத்து வைத்த கலவையை சிறு உருண்டையாக பிடித்து, அதை உளங்கையில் வைத்து தட்டி எண்ணெய்யில் போட்டு பொரித்து எடுக்க வேண்டும். செந்நிறமானதும் வடையை திருப்பி விட்டு எடுக்க வேண்டும். இறால் வடை ரெடியாகி விடும். தக்காளி சாஸ் வைத்து இறால் வடையை குழந்தைகள் முதல் பெரியவர்களுக்கு பரிமாறலாம்.
இறாலின் நன்மைகள்
இறாலில் அதிகம் புரதம், வைட்டமின் டி, ஒமேகா-3, கொழுப்பு அமிலங்கள், இரும்பு, துத்தநாகம், பாஸ்பரஸ் உள்ளிட்ட சத்துகள் உள்ளன. இதில் உள்ள கனிமங்கள் தசைகளுக்கு உறுதி அளிப்பதுடன், முடி வளர்ச்சி உதவும் என கூறப்படுகிறது. கார்போஹைட்ரேட் உடல் எடையை குறைக்க உதவும் என கூறப்படுகிறது. பொட்டாசியம், கால்சியம் எலும்பு பலத்துக்கு உதவுவதாக கூறப்படுகிறது.
குறிப்பு
இறாலை சுத்தம் செய்யும் போது அதன் தோலை நீக்கிவிட்டு, உடல் பகுதியின் மேற்புறத்தில் இருக்கும் கருப்பு நிற நரம்பை அகற்றிவிட வேண்டும். அந்த நரம்பை நீக்காமல் சாப்பிட்டால் உடலில் ஒருசிலருக்கு ஒவ்வாமை ஏற்படலாம் என கூறப்படுகிறது.