அசைவமே தோற்றுவிடும்.. அசத்தலான சுவையில் வாழைக்காய் கோலா உருண்டை செய்யலாம்!
மட்டன் கோலா உருண்டையே தோற்றுப் போகும் சுவையில் வாழைக்காய் கோலா உருண்டை செய்யலாம்.
கோலா உருண்டை என்றதுமே நம் அனைவருக்குமே மட்டன் கோலா உருண்டை தான் நினைவுக்கு வரும். ஆனால் சைவ கோலா உருண்டை தெரியுமா? ஆம், வாழைக்காயில் சுவையான கோலா உருண்டை செய்ய முடியும். வாங்க வாழைக்காய் கோலா உருண்டை எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
வாழைக்காய் -3, பொட்டுக்கடலை - 1 கைப்பிடி அளவு, இஞ்சி - 1 இன்ச், பூண்டு -10 பல், சோம்பு - 1 ஸ்பூன், கிராம்பு - 1, பட்டை -சிறிய துண்டு, ஏலக்காய் -3, தேங்காய் - 1/4 மூடி துருவியது, பச்சை மிளகாய் - 3, கசகசா - 1 ஸ்பூன், வெங்காயம் - 2, கொத்தமல்லி - 1/2 கைப்பிடி, மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன், உப்பு - 1/2 ஸ்பூன், பொரிக்க தேவையான அளவு எண்ணெய்.
செய்முறை
வாழைக்காயை தோல் உரித்து அதை அதை காய் சீவல் கொண்டு நன்றாக துருவி கொள்ள வேண்டும். மிக்ஸி ஜாரில், பொட்டுக்கடலை, சோம்பு, பூண்டு, இஞ்சி, கிராம்பு, பட்டை, ஏலக்காய், தேங்காய், கசகசா,பச்சை மிளகாய், வெங்காயம், கொத்தமல்லி, பெருங்காயம், மஞ்சள் தூள் இவை அனைத்தையும் சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
இந்த விழுதை தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு துருவி வைத்திருக்கும் வாழைக்காயை மிக்சி ஜாரில் சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் மைய அரைத்து, ஏற்கனவே அரைத்து வைத்திருக்கும் விழுதை இத்துடன் சேர்க்க வேண்டும். இதனுடன் உப்பை சேர்த்து மறுபடியும் நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
அரைத்த விழுதில் தண்ணீர் அதிகமாக இருப்பது போல் தெரிந்தால், அதனுடன் நாம் பொட்டுக்கடலை மாவையோ அல்லது அரிசி மாவையோ சேர்த்து பிசைந்து உருண்டை பிடித்து தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இப்போது அடுப்பில் ஒரு வாணலியை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை குறைவான தீயில் வைத்துக் கொள்ள வேண்டும். நாம் ஏற்கனவே உருட்டி வைத்திருக்கும் உருண்டைகளை எண்ணெயில் ஒவ்வொன்றாக சேர்க்க வேண்டும்.
இந்த உருண்டை பொன்னிறமாக வெந்த பிறகு அதை எண்ணெயில் இருந்து எடுக்க வேண்டும். அவ்வளவு தான் சுவையான வாழைக்காய் கோலா உருண்டை தயாராகி விட்டது.
குறிப்பு : உருண்டைகளை அடுப்பை மிதமான தீயில் வைத்து பொரிக்கும் போது, உள்ளிருக்கும் மாவானது நன்றாக வெந்து சாப்பிடும் போது மேலே மொறு மொறுவென்று இருக்கும்.
மேலும் படிக்க