KolaPasiSeries 24: மெட்ராஸ் வீதிகளை விருந்து கூடங்களாக்கும் தெருக்கடைகள் - கோடி மக்களின் தெருவோரத் தேடல்
’’இந்த கடற்கரை இல்லையெனில் இந்த நகரமும் அதன் மக்களும் என்ன ஆவார்கள் என்று பல நேரங்களில் யோசித்திருக்கிறேன், அப்படி யோசிக்கும்போதே “மாங்கா, தேங்காய், பட்டானி, சுண்டல் என ஒரு குரல் கேட்கும்’’
சென்னையின் பெரிய உணவகங்களை விடுத்து வெளியே வந்து கொஞ்சம் தெருக்களில் திரியலாம் என்று நினைத்தேன். சென்னையின் தெருவோர உணவுகள் (street food) என்பது பசியைப் போக்க அல்ல மாறாக அதை உண்ணுவது ஒரு உணர்வு என்பேன். சென்னையின் பற்சக்கர வாழ்வில் இருந்து ஒரு விடுதலை வேண்டும் எனில் முதலில் நகரத்தின் ஏதேனும் ஒரு புள்ளியில் இருந்து கிழக்கு நோக்கிப் பயணிக்க வேண்டும், கொஞ்ச நேரத்தில் ஏதேனும் ஒரு கடற்கரை உங்கள் தொடுவானத்தில் தட்டுப்படும். மெரினா முதல் பெசண்ட் நகர் வரை இந்தக் கடற்கரைகள் சென்னை மக்களை சதா தன் மடியில் வைத்து தாலாட்டிக் கொண்டேயிருப்பதாகவே என் கண்களில் தெரியும். இந்தக் கடற்கரை இல்லையெனில் இந்த நகரமும் அதன் மக்களும் என்ன ஆவார்கள் என்று பல நேரங்களில் யோசித்திருக்கிறேன், அப்படி யோசிக்கும் போதே ஒரு குரல் கேட்கும் “மாங்கா, தேங்காய், பட்டாணி, சுண்டல், போளி, முறுக்கு” இந்த வார்த்தைகளைக் கேட்டதும் உங்களால் மறுக்க முடியாது ஒரு மாங்காய் வாங்கி அதை உப்பு மிளகாயில் தொட்டு சாப்பிட்ட தருணத்தில் உங்கள் மனம் கொஞ்சம் லேசாக மாறும்.
மெரினா கடற்கரை என்பதே உணவின் படையல் தான். சுண்டல், மாங்காய், பஜ்ஜி, முறுக்கு, போளி, பணியாரம், புட்டு, இடியாப்பம், ஆப்பம், சமோசா, பேல் புரி, பாணி பூரி, கட்லட், பர்கர், ஸ்ப்ரிங் பொட்டேட்டோ, குல்பி, ஐஸ்கிரீம் எனத் தொடங்கும் பயணம் பல நாட்களில் சுந்தரி அக்கா கடையில் தான் நிறைவு பெறும். இன்னும் கொஞ்சம் ஊருக்குள் நுழைந்தால் மைலாப்பூரில் ஜன்னல் கடையில் இருந்து பஜ்ஜி, போண்டாக்கள் வெளியே வந்து காற்றில் மிதக்கும், அந்த வழியாக செல்பவர்களை வழிமறிக்கும். எதிரில் பாரதி மெஸ் வடைகள் உங்களை வரவேற்றுக் காத்திருக்கும். இந்த இருவருக்கு அருகிலேயே ராகி அடை, பருப்பு அடை, முடக்கத்தான் அடை, வல்லாரை அடை, தூதுவளை அடை, வாழைப்பூ அடை, முருங்கைக் கீரை அடை, சிறுதானிய அடை, வாழைத்தண்டு அடை, ஆனியன் அடை என்கிற ஒரு அடை உலகமே தள்ளுவண்டிக் கடையாகக் காத்திருக்கும். இதை எல்லாம் சாப்பிடும் போது ஒரு வாழைப்பூ வடையைச் சாப்பிட மறந்துவிடாதீர்கள். இன்னும் கொஞ்சம் நடந்தால் பால் கொலுக்கட்டை, இனிப்புப் பணியாரம், காரப் பணியாரம் உங்களுக்கு ஒருவேளை கிடைக்கலாம், மயிலாப்பூர் கற்பகாம்பாள் மெஸ் வாழைப்பூ அடை, கபாளீஸ்வரர் கோவில் அருகில் உள்ள அமுதா பஜ்ஜி ஸ்டாலில் சில பல பஜ்ஜிகள். அடையார் - பெயரில்லாத பஜ்ஜி கடையில் பஜ்ஜி, போண்டா, சமோசா ஒரு மஸ்ட் ட்ரை.
காளத்தி ஸ்டாலில் ரோஸ் மில்க் அவசியம் கிடைக்கும் ஒரு பாட்டில் வாங்கிக் குடித்து விட்டு மற்றும் ஒரு பாட்டில் ரோஸ் மில்கை வாங்கி உங்கள் பையில் வையுங்கள், அல்லது வண்டி பெட்டியில் போடுங்கள். அந்த ரோஸ் மில்க் அவ்வளவு லேசில் உங்கள் விட்டு விலகாது. மஞ்சள் பால் உங்கள் விருப்பமான பானம் எனில் சைதை கொத்தவால் சாவடி தெருவில் அற்புதமான சுவையில் அது கிடைக்கும். சென்னை முழுவதும் இருக்கும் சாண்ட்விச் கடைகள் தான் என் காலைப் பசியை பல நாட்கள் போக்கியிருக்கிறது. எழும்பூர் அல்சா மால் பிரட் ஆம்லேட் என்றால் அது தனித்த அடையாளத்துடன் இருக்கும். எப்படியும் ஒரு பத்து பதினைந்து வகை சாண்ட்விச்கள் அங்கே தடபுடலாக இருக்கும், ஒவ்வொரு கடைக்கும் ஒவ்வொரு ஐட்டத்திற்கும் தனித்த சுவை தான். சவுக்கார்பேட்டை இடைத்தீனிகளின் உலகமாகவே திகழ்கிறது. மிண்ட் தெருவில் உள்ள காக்கடா, ராம் பிரசாத்தில் கச்சோரி, ஜிலேபியில் இருந்து தொடங்கலாம். அன்மோல் கேசர் லஸ்ஸி, விஜி சாட் சென்டரில் பாணி புரி, குலாப் மசாலா பால், மேத்தா கடையின் வடா பாவ், பங்கஜ் கடையின் முறுக்கு சாண்ட்விச் (தட்டு வடை செட்), ஐஸ் அல்வா, சுடச்சுட குலாப் ஜாமூன், பொடி இட்லி, பால்கோவா பன், காட்டியா. அதே மிண்ட் தெருவில் தஞ்சாவூர் மிலிட்டரி ஹோட்டலின் கறி தோசையை மக்கள் ஒரு ஸ்நாக்ஸ் போல் மாற்றி வைத்திருக்கிறார்கள், ஒரு கறிதோசையை வாங்கி நான்கு பேர் ஆளுக்கு ஒரு வாய் சாப்பிட்டு அடுத்த கடை நோக்கி போயிக்கிட்டே இருக்காங்க, இவர்கள் நிச்சயம் ஸ்நாக்ஸ் பிரியர்கள் அல்ல ஸ்நாக்ஸ் வெறியர்கள்.
நீங்கள் ஒரு ஸ்நாக்ஸ் வெறியர் எனில் தண்டையார்பேட்டை லிட்டில் கிருஷ்ணாவில் பல சுவையான ஐட்டங்கள் கிடைக்கும். ராயப்பேட்டை நமீராஹ் சாட் கடை சிக்கன் ஸ்டிக், சிக்கன் சீஸ் பால், சிக்கன் நக்கெட்ஸ், சிக்கன் பர்கர், சிக்கன் பேட்டீஸ், க்ரஞ்சி பிட்சா, சிக்கன் ரோல், சிக்கன் பஜ்ஜி என இவை எல்லாம் ரூ.15 முதல் ரூ.50க்குள்ளான விலையில் கிடைப்பது ஆச்சரியமாக இருந்தது. அதே ராயப்பேட்டையில் முட்டை மிட்டாய் ஒரு அதிசயப் பண்டம், மறக்காமல் இரண்டு மூன்று முட்டைகளை உள்ளே தள்ளுங்கள். சென்னையை இருள் சூழும் நேரம், தெருவில் உள்ள உணவுக் கடைகளில் ஸ்நாக்ஸ் எது இரவு உணவு எது என்பதைப் பற்றி பட்டிமன்றம் நடத்தினாலும் சரி ஒரு பல்கலைக்கழக ஆய்வு நடத்தினாலும் சரி ஒரு முடிவுக்கு வர இயலாது. பாணி பூரி, பேல் பூரி, வடா பாவ், சமோசா சாட், சன்னா மசாலா எல்லாம் மெல்லப் பின்னுக்கு தள்ளப்பட்டு வாழைத்தண்டு சூப், அத்தோ, அத்தோ ஃபிரை என புதிய ஆட்டம் ஆரம்பமாகும். மன்னடி பிர்தவுஸ் கடையில் ஹலீம், மட்டன் சமோசா, மட்டன் கட்லட், மட்டன் ரோல், சிக்கன் சமோசா, சிக்கன் ரோல், சிக்கன் கட்லட், சிக்கன் பன், ஸ்டப்டு சிக்கன்/மட்டன் பன், கைமா சிக்கன் ரோல், பீஃப் பக்கோடா, ப்ரூட் மலாய், கேசர் பாதாம், பாதாம் பால், சைனா கிராஸ், கஸ்டர்ட் என இந்தக் கடைக்கு மாலையில் நீங்கள் செல்லத் திட்டமிட்டால் அன்று மதியத்தில் இருந்தே வயிற்றை காய வைத்து உலர்த்தி எடுத்துச் செல்ல வேண்டும். இந்தக் கடையின் ஆக முக்கிய ஐட்டத்தை நான் இன்னும் உங்களுக்கு அறிமுகம் செய்யவில்லை, அது தான் மாசிக் கருவாடு வடை, இது உலகில் வேறு எங்காவது கிடைக்கிறதா என்று தெரியவில்லை, இது ஒரு அல்டிமேட் டிஷ்.
சென்னை ஜார்ஜ் டவுனில் உள்ள மிஸ்டர் ஃபலாஃபில் ஒரு முக்கியக் கடை. சென்னையில் பெஸ்ட் சாவர்மாக்கள் இங்கே தான் செய்யப்படுகின்றன. சிக்கன் ஷாவர்மா சாண்ட்விச், பீஃப் சாவர்மா, ஃபலாஃபில் சாண்ட்விச் என இவர்களைப் போல் சாவர்மாக்களை நேர்த்தியாகச் செய்வதை நான் பார்த்ததில்லை. தாதாஷாமக்கான் என்பதும் ஒரு தனித்த உலகம். கெபாப், வீல், ஷீக், பீஃப் சமோசா, பீஃப் கட்லட், பீஃப் பக்கோடா, ரோமாலி ரொட்டி, கெபாப் எனத் தொடங்கும் இந்த உலகில் உள்ள உணவுகளைப் பற்றி தனியாக கட்டுரை அல்லது ஒரு புத்தகம் தான் எழுத வேண்டும். இணையத்தில் இந்தப் பகுதியை சுற்றிச் சுற்றி ஏராளமான காணொளிகள் உள்ளது அதைப் பார்த்துவிட்டால் உடனடியாக ரயிலில் பஸ்ஸில் நீங்கள் டிக்கட் போடுவீர்கள், விமானத்தில் டிக்கட் போட்டீர்கள் எனில் நீங்கள் என்னைப் போல் ஒரு உணவு வெறியர் என்று பொருள்.
நான் ஒரு அடுமனைப் பிரியர் என்பதால் சென்னைக்கு வரும் போது எல்லாம் 1928 முதல் இயங்கும் பொஸ்ஸோட்டோ ப்ரோஸ் ஸ்மித் பீல்டு பேக்கரி, வர்கிஸ் பேக்கரி, மெக்ரென்னட் புட்ஸ், அடையாறு பேக்கரி தொடங்கி நான் பயணிக்கும் திசைகளில் உள்ள பேக்கரிகளுக்குள் நுழையாமல் வந்ததில்லை. சமீபத்தில் என்னைப் பெரிதும் ஈர்த்தது அண்ணா நகர் சாந்தி காலனியில் உள்ள பிரிமாஸ் பேக்கர்ஸ், ஒரு கலையாகவே அவர்கள் பல நுட்பமான பண்டங்களைத் தயாரிக்கிறார்கள். நெடுங்காலம் இவர்களின் ஒரு கிளை எழும்பூர் ரயில் நிலையத்தின் வாயிலில் இருந்தது, ஒரு நாள் அந்தக் கடை மூடப்பட்டதைப் பார்த்து அதிர்ந்து போனேன், அதன் பின் ஒரு எட்டு அண்ணா நகர் சென்று வருவது வாடிக்கையாகிவிட்டது. அண்ணா நகர் கார்த்திக் டிபன் செண்டருக்கு ஒரு ரசிகராக மாறிவிட்டேன். சென்னை அண்ணா நகரும் ஒரு தனித்த உணவு உலகமாக பரிணமித்துள்ளது, ஒவ்வொரு சாலையிலும் எத்தனை எத்தனை உணவகங்கள், வண்ணங்கள், ஒளி, ஒலி என மாலையில் அண்ணா நகர் விழாக்கோலம் பூண்டு நிற்கும்.
தெருவோரக் கடைகளில் உணவு மலிவான விலையில் கிடைப்பதால் மக்கள் அங்கே செல்கிறார்கள் என்று ஒரு காலம் வரை சொல்லிப்பார்த்தார்கள், அந்தக் கடைகள் அசுத்தம் என்று சொல்லிப்பார்த்தார்கள். நல்ல உணவு எது என்பதை மக்கள் தான் முடிவு செய்கிறார்கள். நான் மேலே குறிப்பிட்ட பல கடைகளில் மக்கள் வருடக்கணக்கில் காத்து நின்று வாங்கி குடும்பமாகவும் நண்பர்களுடனும் உணவைப் பங்கிட்டு மகிழ்கிறார்கள். இங்கே மக்கள் குவிவதற்கு விலை அல்ல ருசி தான் காரணம். தெருவோரக் கடைகளில் உள்ள ருசி ஏன் பெரிய கடைகளில் இல்லை என்பதை பெரிய கடைகள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். தள்ளுவண்டிகள் முதல் ஃபுட் ட்ரக்குகள் வரை உணவுக் கடைகள் சென்னை முழுவதும் உலவத்தொடங்கி விட்டது, சென்னையின் உணவு என்பதே ஒரு கொண்டாட்டம் தான் இத்தனை பற்சக்கர வாழ்வில் கொண்டாட்ட மனநிலையைத் தொடர்ந்து அடைந்து கொண்டாயிருக்காவிட்டால் மனித மனம் சோர்ந்து விடும், ஆகையால் உணவைக் கொண்டாடுவோம் வாருங்கள்.