Mint Leaves : துவையல்.. சட்னி..ஏதாவதொரு வகையில புதினா கண்டிப்பா சாப்டிருங்க.. ஏன் தெரியுமா?
ஆரம்ப காலங்களில் கிரேக்கர்கள், புதினாவின் நறுமணத்திற்காக அதனை வாசனை திரவியமாகப் பயன்படுத்தியுள்ளனர்.
இந்தியாவில் பொதுவாக எல்லா சமையல்களிலும் புதினா சேர்க்கப்படுகிறது. புதினா இலையின் நறுமணம் எந்த அசைவ உணவுகளிலும் இல்லாமல்போக வாய்ப்பு இருக்காது. புதினா இலை என்பது எண்ணிலடங்காத மருத்துவ பண்புகளை கொண்டுள்ளதாக- ஊட்டச்சத்து உணவு நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
உடலில் ஏற்படும் பல்வேறு நோய்களுக்கு ஒரு சிறந்த நிவாரணியாக இது செயல்படுவதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர். ஜலதோஷம் முதல் மாதவிடாய் வலிகள் வரை அனைத்து நோய்களுக்கும் தீர்வாக அமையுமென சொல்லப்படுகிறது. ஆரம்பகால முதல் தற்போது வரை உலக நாடுகளில் இந்த புதினா இலை உணவுகளில் சேர்க்கப்படுகிறது. இது ஒரு மூலிகை தாவரம் எனவும் கூறப்படுகிறது. இது வெறுமனே உணவுகளில் மட்டுமல்லாமல் நாம் பயன்படுத்தும் பற்பசை , பபுள்கம் முதல் பயன்படுத்தும் வாசனை பொருட்கள் வரை அதன் நறுமணத்துக்காக, அனைத்திலும் இந்த புதினா இலை சேர்க்கப்பட்டிருக்கிறது.
சட்னி, பழ சாலடுகள், ரைத்தா, வகை சோறு என சிறந்த சுவையூட்டியாகவும் இந்த புதினா இலைகள் இருக்கின்றன.
நீண்ட நெடிய வரலாற்றை கொண்ட இந்த புதினா மத்திய தரைக்கடலை ஒட்டிய நாடுகளில்தான் முதலில் தோன்றியதாக கூறப்படுகிறது.
பின்னர் பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் இது பரவியதாக சொல்லப்படுகிறது. ஆனால் புதினா பற்றிய முழுமையான வரலாற்று தகவல்கள் இன்னும் தெளிவான முறையில் இல்லை என கூறப்படுகிறது.
இருந்தபோதிலும் ஆரம்ப காலங்களில் இருந்து புதினா மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பொருளாக இருந்திருக்கிறது. கிரேக்கர்கள் புதினாவின் நறுமணத்திற்காக அதனை வாசனை திரவியமாகப் பயன்படுத்தியுள்ளனர். புதினா வாசனை திரவியமானது மனதையும் ,உடலையும் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும் எனவும், மேலும் நோய்க்கிருமிகள் அண்டாதவாறு இது பாதுகாக்கிறது என்பதும், கிரேக்கர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.
ரோமானியர்களும், கிரேக்கர்களும் அவர்களின் முக்கிய பண்டிகைகளின்போது புதினா கிரீடங்களை அணிந்திருப்பதாக கூறப்படுகிறது . இதன் நறுமணம் மட்டுமல்லாமல் ஒரு இதமான மனநிலை அன்பு, காதல் நிறைந்த மற்றும் உணர்வுகளின் அடையாளமாகவும் இந்த புதினாவை வெளிநாட்டு மக்கள் கருதுகின்றனர். அல்ஜீரியா, போஸ்னியா, குரோஷியா, சைப்ரஸ், எகிப்து, பிரான்ஸ், கிரீஸ், இஸ்ரேல், இத்தாலி, மொராக்கோ, ஸ்பெயின், சிரியா போன்ற 20-க்கும் மேற்பட்ட நாடுகளை உள்ளடக்கிய மத்தியதரைக் கடல் பகுதி நாடுகளில் புதினா உருவானதாக அமெரிக்க-இந்திய தாவரவியலாளர் சுஷ்மா நதானி தெரிவித்திருக்கிறார்.
அதேபோல் கி.மு 1000 இல் எகிப்தின் பிரமிடுகளில் உலர்ந்த புதினா இலைகள் கிடைத்ததாகவும் வரலாற்று பதிவுகளில் கூறப்பட்டிருக்கிறது.
இன்று உலகின் பெரும்பாலான நாடுகளில் இந்த புதினா பயிர் செய்யப்பட்டு உணவுகளில் மற்றும் நறுமணப் பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது.
இந்த புதினா வகைகளில் நூற்றுக்கணக்கான வகைகள் இருப்பதாகவும் அவற்றில் ஒரு சில மட்டுமே உணவுக்காகவும், பிற வாசனை திரவியங்களுக்காகவும் பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது.
புதினா இலைகளின் ஆரோக்கிய நன்மைகள்:
1. செரிமானத்திற்கு உதவுகிறது :
புதினா இலைகள் செரிமானத்திற்கு மிகவும் உதவும் என்பதால் தான் உணவுகளில் அதிகளவாக இதனை சேர்த்துக் கொள்கின்றனர். இது வயிறுகளில் ஏற்படும் வாயு, உப்புசம் போன்ற கோளாறுகளிலிருந்து உடனடியாக விடுவிக்கும் நான் சொல்லப்படுகிறது. புதினாவில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், பைட்டோநியூட்ரியண்ட்ஸ் மற்றும் மென்தால் போன்றன உணவை விரைவாக ஜீரணிக்க உதவுகிறது.
2 . ஜலதோஷம் :
ஜலதோஷத்தை போக்கும் சிறந்த நிவாரணியாகவும் இந்த புதினா பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு பருவ கால மாற்றத்தின் போதும் சளி, இருமல், காய்ச்சல் என ஒவ்வொருவரின் உடல் தன்மைக்கு ஏற்ப நோய்கள் தாக்குகின்றன. உடலில் ஏற்படும் இந்த சளி தொந்தரவு தொண்டை வலி போன்றவற்றிலிருந்த இந்த புதினா இலை சிறந்த நிவாரணம் அளிப்பதாக கூறப்படுகிறது. ஒரு கப் மென்தால் நுழைந்த புதினா தேநீரானது தொண்டை வலி மற்றும் இருமலைப் போக்க உதவுவதாக சொல்லப்படுகிறது. மற்றும் இது ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கும் எனவும் கூறப்படுகிறது.
3. மாதவிடாய் வலியை நீக்குகிறது :
புதினா இலைகள் சிறந்த வலி நீக்கியாகவும் பயன்படுத்தப்படுகிறது. இவை உடலில் உள்ள ரத்தத்தை நன்கு சுத்திகரித்து ரத்த ஓட்டத்தை சீர்படுத்துவதாக கூறப்படுகிறது. புதினாவில் உள்ள ஆண்டிஸ்பாஸ்மோடிக் பண்புகள் தசை வலிகளை போக்க உதவுகிறது. மாதவிடாய் பிடிப்பின் போது சூடான புதினா டீயை பருகினால் உடனடியாக நிவாரணம் கிடைக்கும் என நம்பப்படுகிறது.
4. தோல் பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் :
புதினாவில் அழற்சி மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன. இதனால் சருமத்தை நோய்க்கிருமிகள் அண்டாதவாறு பொலிவாகவும் இது வைத்திருக்கிறது. முகத்தில் ஏற்படும் அதிகப்படியான முகப்பருக்களை கட்டுப்படுத்த இந்த புதினா இலைகள் பயன்படுகின்றன. உதாரணமாக தற்போது புதினா ஃபேஸ் வாஷ் மற்றும் கிரீம்கள் சந்தைகளில் இருப்பதை காண முடிகிறது. புதினா இலைகளில் அதிக அளவு சாலிசிலிக் அமிலம் இருப்பதால் முகங்களில் பருக்கள் வராமல் கட்டுப்படுத்தப்படுகிறது.
5. மன அழுத்தத்தை நீக்குகிறது :
பொதுவாகவே புதினாவின் நறுமணம் எல்லோருக்கும் பிடித்தமான ஒன்றாக இருக்கிறது. அதனால் மனதை சமநிலையாக வைத்திருக்க உதவுகிறது.
புதினாவின் நறுமணம் இயற்கையில் மிகவும் இதமானதாக இருக்கும். இது மனதளவிலும் உடலளவிலும் ஓய்வை வழங்கும் நறுமண சிகிச்சையில் பயன்படுத்தப்படுகிறது. புதினாவின் நறுமணம் மனதை அமைதிப்படுத்துவது மட்டுமல்லாது மூளையின் அழுத்தத்தை தளர்த்தவும் உதவுகிறது. புதினா அடாப்டோஜெனிக் பண்புகளை கொண்டுள்ளதால் இது கார்டிசோலை கட்டுக்குள் வைத்திருக்கிறது. மன அழுத்தத்தில் இருந்து நிவாரணம் அளிக்கிறது.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )