International Coffee Day 2022: சர்வதேச காபி தினம் இன்று.. எனர்ஜியை அப்படியே வைக்கும் சில காபிகள் லிஸ்ட் இதோ..
சர்வதேச காபி தினம் ஆண்டுதோறும் அக்டோபர் 1-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
அக்டோபர் 1 சர்வதேச காபி தினம் கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் பெரும்பான்மையான மக்கள் பலரும் குறைந்தது ஒருவேளையாவது காப்பியை அருந்துகிறார்கள். எத்தியோப்பியா நாட்டில் காஃபா (Kaffa) இந்த இடத்தில் முதன் முதலாக காப்பிச்செடி தோன்றியதாக நம்பப்படுகிறது.
காபி செடியின், சிகப்பான பழங்களில் இருந்து கிடைக்கும் கொட்டையை கொண்டு, வறுத்து நீருடன் கொதிக்க வைத்து நேரடியாகவோ அல்லது பாலுடன் கலந்து காஃபியானது தயாரிக்கப்படுகிறது. இந்த காப்பிக்கு ஒன்பதாம் நூற்றாண்டில் இருந்து மிக நீண்ட,பெரிய வரலாறு உள்ளது. முதலில் எத்தியோப்பியாவில் ஆடு மேய்க்கும் சிறுவர்களால்,இந்த காபி கொட்டையானது கண்டறியப்பட்டதாக நம்பப்படுகிறது.
மேய்ச்சலுக்கு சென்று வந்த ஆடுகளில் சில, அதிக உற்சாகத்துடனும்,விழிப்பு நிலையிலும் காணப்பட்டதால், இது எவ்வாறு நடந்தது என்று ஆடு மேய்க்கும் சிறுவர்கள் தேடி கண்டுபிடித்து,தங்களின் தேவைக்கும் காபி கொட்டையை பயன்படுத்தினார்கள். பின்னர் எத்தியோப்பியாவிலிருந்து ஏமன்,துருக்கி வட ஆப்பிரிக்கா,ஐரோப்பா அமெரிக்கா என உலக முழுமைக்கும் இந்த காபியானது பரவியது.
அமெரிக்கா,இந்தியா,தென்கிழக்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவின் பூமத்திய ரேகை பகுதி என இந்தப் பகுதிகள் மட்டுமே உலக காபி கொட்டைகள் உற்பத்தியில் 35 சதவீத பங்களிப்பினை கொண்டிருக்கிறது. இது போலவே பிரேசிலானது காபி கொட்டை உற்பத்தியில் முன்னணியில் உள்ளது. காபியானது பெட்ரோலுக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய வணிக சந்தையை கொண்டிருக்கிறது.
இப்படி உலகம் முழுமைக்கும் காப்பி பரவி இருப்பதற்கான காரணம் அதை குடிக்கையில் அதன் சுவையும் திரும்பத் திரும்ப குடிக்க வேண்டும் என்று தோன்றும், அதன் உற்சாகப்படுத்தும் தன்மையும் மிக முக்கிய காரணமாகும். இது காப்பியானது உலகம் முழுவதிலும் வெவ்வேறு விதமாக தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை அதிலும் குறிப்பாக தமிழகத்தை பொறுத்தவரை பால் கலக்கப்பட்டு காப்பியானது பயன்படுத்தப்படுகிறது. இப்படி உலகம் முழுமைக்கும் சுவையின் காரணமாக பரவி இருக்கும் காபியில் இருக்கும் சில வகைகளை காணலாம்
ப்ளைன் பிளாக் காபி:
தூளாக்கப்பட்ட காபி கொட்டையை நீருடன் நன்றாக கொதிக்கவைத்து அப்படியே பருகுவது, ஐரோப்பியர்களின் பழக்கத்தில் உள்ளது. தேவைப்பட்டால் சிறிது சர்க்கரை சேர்த்துக் கொள்ளப்படுகிறது.
ஃபில்டர் காபி:
இந்தியாவில்,குறிப்பாக தமிழகத்தில், விரும்பப்படும் இந்த காப்பியை தயாரிக்க பால் தேவைப்படுகிறது. பாலை நன்றாக கொதிக்கவைத்து, அதன் பச்சை மனம் போன பிறகு, தேவையான அளவு எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். காபிப்பொடியை, பில்டரில் போட்டு, அதில் கொதிக்க வைத்த தண்ணீரை ஊற்றி,சிறிது நேரம் அப்படியே விட்டு விட்டால்,காபியுடன் சுடுநீர் கலந்து, சிறிது நேரத்தில்,பில்டரின் அடியில் இருக்கும் பாத்திரத்தில் காபி டிக்காக்ஷன் சேர்ந்திருக்கும். சூடான பாலில், தேவையான அளவு காபி டிகாஷனை கலந்தால்,சுவையான பில்டர் காபி தயாராகிவிடும்.இதில் தேவைப்படுவோர் சர்க்கரையை சேர்த்து அருந்தலாம்.
குளிர்ந்த காப்பி:
காபி பொடியுடன் கொதிக்கவைத்த தண்ணீரை,குளிர்ப்படுத்தி, தேவைப்பட்டால் சர்க்கரை கலந்து பெறப்படுவது,குளிர்ந்த காப்பி எனப்படுகிறது. இந்த குளிர் காப்பியானது வெப்ப மண்டல பகுதிகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. சில இடங்களில் இத்தகைய குளிர்ந்த காப்பியில்,பால் கலக்கப்பட்டு, பயன்படுத்தப்படுகிறது. இன்னும் சில இடங்களில் காபியை கொதிக்கவைத்து கிடைக்கும் காபி சாரை, குளிர்ப்படுத்தி, இதனுடன் பால் மற்றும் ஐஸ்கிரீம் கலக்கப்பட்டு கோல்ட் காபி எனப்படும் இந்த குளிர்ந்த காப்பி தயாரிக்கப்படுகிறது.
மல்லி காபி:
காபி கொட்டையில் இருந்து பொடி செய்து கிடைக்கும் காப்பித்தூளுடன் தண்ணீரை சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து அதில் சிறிது தூள் செய்யப்பட்ட மல்லி செடியின் விதைகளை சேர்த்து கொதிக்கவைத்து கிடைப்பது மல்லி காபி எனப்படுகிறது ,மருத்துவ குணங்கள் நிறைந்த நாட்டுச் சர்க்கரை அல்லது பனை கற்கண்டு சேர்த்து பயன்படுத்தலாம்.
இவ்வாறு காப்பியானது உலகம் முழுமைக்கும் பயன்படுத்தப்படுகிறது. தேவைக்கு ஏற்றார்போல, அந்தந்த மண்ணிற்கு தகுந்த உணவுப் பொருட்கள் கலந்து, காபியில் நிறைய வகைகள் மேற்சொன்னவாறு தயாரிக்கப்படுகின்றன