Crab Curry: சளித்தொல்லையா? நண்டு குழம்பு இப்படி செஞ்சு சாப்பிடுங்க - எல்லாம் சரியாகிடும்!
மழைக்காலம் என்பதால் பலருக்கும் சளித்தொல்லை இருக்கும். சளியை ஓட ஓட விரட்டும் நண்டு குழம்பு செய்வது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
கடல் உணவுகள் என்றாலே சத்துக்கள் நிறைந்ததாக கருதப்படுகிறது. அதிலும் குறிப்பாக நண்டு மிகவும் ஆரோக்கியமானது என கூறுகின்றனர். நண்டில் இருக்கும் சத்துக்கள் ஏராளம். நண்டில் மற்ற அசைவ உணவுகளை ஒப்பிடும்போது குறைந்த கலோரிகள் தான் உள்ளது. எடை குறைக்க நினைப்பவர்களுக்கு நண்டு நல்ல தேர்வாக இருக்கும்.
நண்டு நன்மை:
நண்டில் கால்சியம் இருப்பதால், எலும்புகளின் ஆரோக்கியத்தை வலுப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றுகிறது. நண்டில் இருக்கும் குரோமியம், உடலில் இன்சுலின் அளவை சீராக வைக்கப் பயன்படுகிறது. காயங்கள் எளிதில் ஆறவும் உதவும். இதனால் சர்க்கரை நோயாளிகள் நண்டை அசைவ உணவு பட்டியலில் சேர்த்துக்கொள்ளலாம்.
மேலும் தற்போது மழைக்காலம் என்பதால் பலரும் காய்ச்சல், இருமல் மற்றும் சளியால் பாதிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது. அப்படி சளித்தொல்லை இருப்பவர்கள் நண்டு சாப்பிடலாம். நண்டு சூப் செய்து போர் அடித்தவர்களுக்கு அட்டகாசமான சுவையில் நண்டு குழம்பு எப்படி செய்வது என்பது குறித்து பார்க்கலாம்.
நண்டு குழம்பு செய்ய தேவையான பொருட்கள்:
- நண்டு - 500 கிராம்,
- சின்ன வெங்காயம் - ஒரு கைப்பிடி,
- பெரிய வெங்காயம்- 1,
- மிளகு - 1 ஸ்பூன்,
- சீரகம் 1 டீஸ்பூன்,
- சோம்பு - டீஸ்பூன்,
- கறிவேப்பிலை - தேவையான அளவு,
- பச்சை மிளகாய் - காரத்திற்கு ஏற்ப,
- தக்காளி - 2,
- மஞ்சள் தூள் - சிறிதளவு,
- மல்லி தூள் - 2 ஸ்பூன்,
- கரம் மசாலா - 1 ஸ்பூன்,
- தண்ணீர் - தேவையான அளவு,
- தேங்காய் - அரை மூடி,
- முந்திரி - 10
- பூண்டு - 10 பல்
- தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் - ஒரு குழிக்கரண்டி
- கடுகு - சிறிதளவு
- உப்பு
- கொத்தமல்லி
நண்டு குழம்பு செய்முறை:
அரை கிலோ நண்டை மஞ்சள் சேர்த்து சுத்தமாக கழுவி வைத்துக்கொள்ள வேண்டும். பின் ஒரு மிக்ஸி ஜாரில் மிளகு, சீரகம், சோம்பு, கறிவேப்பிலை, பச்சைமிளகாய், வெங்காயம் சேர்த்து கொரகொரவென அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின் ஒரு மண் சட்டி அல்லது பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணய் சேர்த்து, எண்ணெய் சூடானதும் கடுகு சேர்க்க வேண்டும்.
கடுகு வெடித்தபின் நறுக்கி வைத்த பூண்டு சேர்க்க வேண்டும் பச்சை வாசனை நீங்கியதும் பெரிய வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும். நன்கு வதங்கியதும் அரைத்து வைத்த மசாலா கலவையை சேர்த்து வதக்க வேண்டும். பின் தக்காளி, மஞ்சள் தூள், மல்லி தூள், கரம் மசாலா தேவையான தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட வேண்டும்.
நண்டு குழம்பு தயார்:
அது கொதிக்கும் போது அரை மூடி தேங்காய் மற்றும் முந்திரி சேர்த்தி பேஸ்டாக அரைத்து வைக்க வேண்டும். கொதிக்கும் குழம்பில் அரைத்து வைத்த தேங்காய் கலவை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வேண்டும். பின் கழுவி வைத்த நண்டை சேர்த்து மூடி போட்டு கொதிக்க விட வேண்டும். அதன்பின் கொத்தமல்லி தூவி இறக்கினால் சூடான சுவையான நண்டு குழம்பு தயார். இப்படி ஒரு தடவ செஞ்சு பாருங்க, நண்டு குழம்பு சுவை நாவில் தாண்டவமாடும்.
Jovika: ‘படிப்பு ரொம்ப முக்கியம்.. திசை திருப்புவாங்க’ : சீறிய ஜோவிகா.. வைரலாகும் கோபிநாத் வீடியோ..