கொள்ளுவில் இவ்வளவு மருத்துவக்குணங்களா? உடனே சேர்த்துக்கொங்க.. உடம்புக்கு நல்லது!
கொள்ளுவில் அதிகளவு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால், உணவில் சேர்த்துக்கொள்ளும் போது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. இதோடு எலும்புக்கும், நரம்புக்கும் வலுசேர்க்கும் எனக்கூறப்படுகிறது.
உடலில் உள்ள ஊளைச்சதைக்குறைத்து எடையைக்குறைப்பது தொடங்கி, கண் நோய், வயிற்றுப்பிரச்சனை, சளி, இருமல் போன்ற மருத்துவக்குணங்களைக் கொண்டுள்ளது தான் சிறுதானிய வகைகளில் ஒன்று தான் கொள்ளு.
கொழுத்தவனுக்குக் கொள்ளு, இளைச்சவனுக்கு எள்ளு என்ற பழமொழியை நம் முன்னோர்கள் அடிக்கடி கூறுவதை நாம் கேட்டிருப்போம். ஆம் இந்த பழமொழிக்கு ஏற்றவாறு தான், உடல் எடையைக்குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் முதலில் தேர்வு செய்வது கானப்பயறு எனப்படும் கொள்ளு. கொள்ளு துவையல், கொள்ளு ரசம் என விருப்பத்திற்கு ஏற்றவாறு இதனை மக்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.
குதிரைகளுக்கு மட்டுமில்லை கொள்ளுவைத் தினமும் நம்முடைய உணவில் சேர்த்துக்கொள்ளும் போது ஏராளமான நன்மைகளை நம்மால் பெறமுடிகிறது. அவை என்னென்ன மற்றும் எப்படியெல்லாம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்து இங்கே தெரிந்துக்கொள்வோம்.
கொள்ளுவில் உள்ள மருத்துவப் பயன்கள்:
பொதுவாக கொள்ளுப்பருப்பில் அதிகளவு மாவுச்சத்து உள்ளதால், இதனை ஊற வைத்து அல்லது வறுத்தும் சாப்பிடலாம். இவை பல்வேறு நோய்களுக்கு சிறந்த தீர்வாக உள்ளது.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு:
கொள்ளுவில் அதிகளவு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால், உணவில் சேர்த்துக்கொள்ளும் போது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. இதோடு எலும்புக்கும், நரம்புக்கும் வலுசேர்க்கும் எனக்கூறப்படுகிறது. எனவே இதனை அரிசியுடன் சேர்த்துக் காய்ச்சி கஞ்சியாக உட்கொள்ளும் போது பசியின்மை நீங்குவதோடு உடலுக்கு வலுச்சேர்ப்பதாக அமைகிறது.
சளியைப் போக்க உதவுகிறது:
கொள்ளுப் பருப்பை நீரில் போட்டு கொதிக்க வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அந்த நீரை தொடர்ச்சியாக அருந்தி வந்தால், ஜலதோஷம், வயிற்றுப்போக்கு, வயிற்றுப் பொருமல், கண் நோய் போன்றவற்றை குணமாகும் எனக் கூறப்படுகிறது.
கொள்ளுவில் தயார் செய்யப்படும் சூப் சளியைப் போக்கும் குணம் வாய்ந்தது. எனவே, குழந்தைகளுக்கு சளி பிடித்தால், கொள்ளு சூப் வைத்துக் கொடுத்தால் உடனடியாக சரியாவிடும்.
உடலில் உள்ள தேவையற்ற ஊளைச்சதையைக் குறைக்கும் திறன் கொள்ளுவிற்கு அதிகளவில் உள்ளது. எனவே தினமும் இதனை ஊற வைத்து, அந்நீரை அருந்தினால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறிவிடும். தொடர்ந்து இதனைப்பின்பற்றி வந்தால், நிச்சயம் உடல் எடையைக்கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.
சிறுநீர் பிரச்சனைக்குத் தீர்வு:
சிறிதளவு கொள்ளுவையும், இந்துப்பையும் சிறிது எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அவற்றுடன் ஒரு லிட்டர் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் அந்த நீரை தினமும் சாப்பிட்டுவந்தால், சிறுநீரகங்கள், சிறுநீரகப்பாதை போன்ற உள்ளுறுப்புகளில் சேரும் கற்களைக் கரைக்க உதவுகிறது.
மேலும் கொள்ளுப் பருப்பை அரைத்துப் பொடியாக்கி ரசத்தில் போட்டு உட்கொண்டால், பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப் போக்கைக் கட்டுப்படுத்துவதுடன், மாதாந்திர ஒழுங்கை சரிப்படுத்தும். பிரசவ அழுக்கை வெளியேற்றும் தன்மை இதில் உள்ளது. இதுப்போன்ற பல்வேறு மருத்துவக்குணங்களை கொள்ளு அதவாது கானப்பயறு கொண்டிருப்பதால் இனி மறக்காமல் உங்களது உணவு முறைகளில் சேர்த்துக்கொள்ளப் பழகுங்கள்.