சாதத்திற்கு சூப்பர் சைடிஷ்... செட்டிநாடு பூண்டு புளிக்குழம்பு ரெசிபி செய்முறை இதோ!
சாதத்துடன் சேர்த்து சாப்பிட சுவையான செட்டிநாடு பூண்டு, புளிக்குழம்பு ரெசிபி எப்படி செய்வதென்று பார்க்கலாம் வாங்க.
தேவையான பொருட்கள்
தென்னிந்திய உணவுகளில் அரிசி சாதம் ஒரு பிரதான உணவாக திகழ்கின்றது. தினந்தோறும் மதிய வேளைக்கும் பெரும்பாலானோர் சாதம் தான் சாப்பிடுகின்றோம். இந்த சாதத்திற்கு தினம் ஒரு குழம்பு வைப்பது தான் பல்வேறு இல்லத்தரசிகளுக்கு ஒரு பெரும் சவாலான விஷயமாக உள்ளது.
தொடர்ந்து சாம்பார், காரகுழம்பு, மோர் குழம்பு போன்ற ஒரே மாதிரியான குழம்பு வகைகளை சாப்பிட்டு வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு மட்டும் அல்லாமல் பெரியவர்களுக்கும் கூட போர் அடித்து விடும். அதனால் இன்னைக்கு நாம பூண்டு புளிக்குழம்பு ரெசிபி செய்யப்போறோம். இதை சாதத்துடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். வாங்க சுவையான செட்டிநாடு பூண்டு புளிக்குழம்பு எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
சின்ன வெங்காயம் - 1/2 கப் ,பூண்டு - 15 பல், தக்காளி - 2 , புளி - (சிறிய எலுமிச்சை அளவு ), சாம்பார் தூள் அல்லது குழம்பு மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன், வெங்காய கறி வடகம் - 1/4கப், சோம்பு - 1/4 டீஸ்பூன், வெந்தயம் - 1/4 டீஸ்பூன்.
செய்முறை
நன்கு பழுத்த தக்காளியை பொடியாக நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். புளியை தண்ணீரில் ஊற வைத்து கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு கடாயை வைத்து தாளிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் சூடானதும், வெந்தயம், சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும். பின் தோல் உரித்து வைத்துள்ள சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்க வேண்டும்.
வெங்காயம் கண்ணாடி நிறமாக மாறியதும், தக்காளி சேர்த்து வதக்க வேண்டும். தக்காளி நன்றாக வதங்கியவுடன் சாம்பார் பொடி, அல்லது குழம்பு மிளகாய் தூள் சேர்த்து கருகாமல் வதக்க வேண்டும். பின் அதில் கரைத்த புளி கரைசலை சேர்த்து கொதிக்க விட வேண்டும். இத்துனுடன் தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து குழம்பு சற்று கெட்டியாகும் வரை அடுப்பை மிதமான தீயில் வைத்து கொதிக்க விட வேண்டும்.
மற்றொரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி வெங்காய கறி வடகத்தை பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். பொரித்த வடகத்தை பூண்டு புளிக்குழம்பில் சேர்த்து ஒரு கொதி விட்டு அடுப்பை அணைத்து விட வேண்டும். அவ்வளவு தான் சுவையான செட்டிநாடு பூண்டு புளிக்குழம்பு தயார்.
மேலும் படிக்க