Bottle Gourd Payasam: நீர்ச்சத்து மிகுந்த சுரைக்காயில் ருசியான பாயாசம் செய்யலாம்... செய்முறை இதோ...
சுவையான சுரைக்காய் பாயாசம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
பாயாசத்தில், அடை பாயாசம், பால் பாயாசம், இளநீர் பாயாசம் போன்ற பலவகை பாயாசம் உள்ளன. தற்போது நாம் சமையலுக்கு பயன்படுத்தும் சுரைக்காயை கொண்டு எப்படி சுவையான பாயாசம் செய்வது என்று தான் பார்க்க போகின்றோம். இதை குறைந்த நேரத்தில் மிக எளிமையாக செய்து விட முடியும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த பாயாசத்தை விரும்பி சாப்பிடுவர். சுரைக்காய் நீர்ச்சத்து மிகுந்தது என்பதால், இந்த பாயாசம் நீர்ச்சத்து நிறைந்ததாவுகவும் இருக்கும். வாங்க இந்த பாயாசத்தை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
சுரைக்காய் -1, காய்ச்சிய திக்கான பால் - 1/2 லிட்டர், சர்க்கரை - 1/4 கப், கண்டென்ஸ்ட் மில்க் - 3 டேபிள் ஸ்பூன், ஏலக்காய் - 2, முந்திரி - 10, திராட்சை – 10, நெய் – 3 டேபிள் ஸ்பூன்.
செய்முறை
சுரைக்காயை தோல் நீக்கி, காய் துவருவலைக் கொண்டு சுரைக்காயை துருவி வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு கப் வரும் அளவிற்கு சுரைக்காயை துருவிக்கொள்ளவும்.
முந்திரி, திராட்சையை நெய்யில் வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்து அதே நெய்யில் துருவி வைத்த சுரைக்காய் சேர்த்து மிதமான தீயில் 10 நிமிடம் வரை வதக்க வேண்டும். பச்சை வாடை போகும் வரை வதக்கினால் சுரைக்காயில் உள்ள நீர் வற்றி விடும்.
ஒரு பாத்திரத்தில் அரை லிட்டர் பாலை காய்ச்சி அதில் நெய்யில் வறுத்த சுரைக்காய், சர்க்கரை ஏலக்காய் இரண்டையும் சேர்த்து நன்றாக கலந்த பிறகு ஐந்து நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும். ( சர்க்கரை மற்றும் ஏலக்காயை மிக்ஸி ஜாரில் அரைத்தும் சேர்த்துக் கொள்ளலாம்.)
சர்க்கரை உறுகி சுரைக்காய் மற்றும் பாலுடன் கலந்து வெந்து கொண்டிருக்கும். கடைசியாக கன்டென்ஸ் மில்க் சேர்த்து ஒரு முறை கலந்து ஒரே ஒரு கொதி வந்தவுடன் அடுப்பை அணைத்து விட வேண்டும்.
கடைசியாக ஏற்கனவே வறுத்து வைத்த முந்திரி திராட்சையை இதன் மேல் தூவி விட்டு பரிமாறலாம். அவ்வளவுதான் சுவையான சுரைக்காய் பாயாசம் தயார்.
சுரைக்காய் நன்மைகள்
உணவு மாறுபாட்டாலும், மன அழுத்தத்தாலும் உடலினை இயக்குகின்ற வாத, பித்த, கபத்தில் பித்தத்தின் நிலை அதிகரிக்கும்போது உடல் பலவீனமடைந்து பல நோய்களின் தாக்கம் உண்டாகிறது. சுரைக்காய் அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் பித்தத்தை சமநிலையில் வைத்திருக்கும் என கூறப்படுகிறது.
சுரைக்காயில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. மலச்சிக்கல், குடலில் புண்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சுரைக்காய் மிகவும் நல்லது என கூறப்படுகின்றது.
கோடைக்காலத்தில் ஏற்படும் உடல் சூட்டை தணிக்க சுரைக்காய் உதவும். சருமத்தை மினுமினுப்பாக வைக்கவும் சுரைக்காய் உதவும் என கூறப்படுகிறது.