Household Tips: பாத்திரம் அடிபிடிக்குதா? துணிகளில் டீ, காபி கறையா? பயனுள்ள வீட்டுக் குறிப்புகள் இதோ..
அடிப்பிடித்த பாத்திரத்தின் கறையை நீக்க, வெள்ளை சட்டையில் உள்ள டீ கறையை நீக்க எளிய டிப்ஸ்களை பார்க்கலாம்.
பாத்திரத்தில் அடிபிடித்த கறை நீங்க
சமைக்கும் போது பால் பாத்திரம் உள்ளிட்டவை கடுமையாக அடிபிடித்து விட்டதா? இதை கஷ்டப்பட்டு தேய்த்து கழுவ வேண்டாம். அடிப்பிடித்த பாத்திரத்தில், அடிபிடித்த இடம் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றவும். இதில் அரை டீஸ்பூன் பேங்கிங் சோடா சேர்க்கவும். இரண்டு ஸ்பூன் வினிகர் அல்லது எலுமிச்சை சாறு சேர்த்து, இந்த பாத்திரத்தை அடுப்பில் வைத்து அடுப்பை பற்ற வைத்துக்கொள்ளவும்.
தண்ணீர் சூடானதும் ஒரு ஸ்பூன் பாத்திரம் தேய்க்கும் லிக்விடை சேர்க்கவும். இப்போது ஒரு கரண்டியை கொண்டு பாத்திரத்தின் அடிப்பிடித்த பகுதிகளை சுரண்டி விட வேண்டும். இப்போது பாத்திரத்தில் உள்ள நீர் பால் போல் பொங்கி வரும். தொடர்ந்து கரண்டியால் சுரண்டி விடவும். பின் அடுப்பை அணைத்து விட்டு, பாத்திரத்தில் உள்ள தண்ணீரை கீழே கொட்டிவிடவும்.
இப்போது பாத்திரத்தை ஒரு கரித்துணியால், பிடித்துக் கொண்டு பாத்திரம் சூடாக இருக்கும்போதே, கம்பி நார் கொண்டு அடிபிடித்த பகுதியை லேசாக தேய்த்தாலும் அந்த கறைகள் நீங்கி விடும். இப்போது பாத்திரத்தை கழுவினால், பாத்திரம் பளிச்சென இருக்கும்.
மங்கிய கண்ணாடி டம்ளர் பளபளப்பாக
வீட்டில் கண்ணாடி டம்ளர்களை பயன்படுத்தினால், சில நாட்களில் அதன் பளபளப்புத்தன்மை நீங்கி மங்கி விடும். எளிய டிப்ஸை பயன்படுத்தி கண்ணாடி டம்ளரை மீண்டும் பளபளப்பாக முடியும். ஒரு பாத்திரத்தில், கண்ணாடி டம்ளர் மூழ்கும் அளவு வெதுவெதுப்பான தண்ணீரை நிரப்பவும். இந்த தண்ணீரில் 3 ஸ்பூன் வினிகர் சேர்க்கவும். பின் கண்ணாடி டம்ளர்களை இந்த தண்ணீரிக்குள் போட்டு வைக்கவும்.
இதை 10 நிமிடங்கள் அப்படியே ஊறவிடவும். பின் டம்ளரை தண்ணீருக்குள் இருந்து எடுத்து ஒரு சாஃப்டான துணியை கொண்டு ஈரத்தை துடைத்து எடுத்தால், உங்கள் கண்ணாடி டம்ளர் புதியது போன்று பளபளவென மின்னுவதை பார்க்கலாம்.
வெள்ளை சட்டையில் டீ கறை நீங்க
உங்கள் வெள்ளை, சட்டை, அல்லது வெள்ளை துணியில் டீ அல்லது காபி கொட்டிவிட்டதா? இந்த கறையை நீக்க, கறை உள்ள இடத்தை தண்ணீரில் நனைத்துக்கொள்ளவும்.
பின் அந்த இடத்தில் ஒரு ஸ்பூன் ஷாம்பூ சேர்க்கவும். உள்ளங்கை அளவு காபி கறைக்கு ஒரு ஸ்பூன் ஷாம்பு போதுமானது. இதை ப்ரெஷ் கொண்டு தேய்த்து விடவும்.பின் இதை அப்படியே 10 நிமிடங்கள் ஊற விடவும். பின் இதை தண்ணீரில் அலசி எடுத்தால், டீ கறை தடம் தெரியாமல் போய் இருக்கும்.
மேலும் படிக்க
Household Tips: உடையாமல் முட்டை வேகவைக்க! பாத்திரத்தில் ஒட்டாமல் மாவு பிசைய - வீட்டுக் குறிப்புகள்!