Teenage Problems: உங்க வீட்டுல டீன் ஏஜ் பசங்க இருக்காங்களா ! அவங்க எதிர்காலம் நலமா இருக்க இதை படிங்க !
குழந்தைகள் தங்களது பருவ வயதை அடையும் பொழுது , உளவியலாகவும் , உடல் அளவிலும் பல ஹார்மோனல் பிரச்சனைகளை சந்திக்கிறார்கள்
உங்கள் வீட்டில் டீனேஜ் வயதில் மகன் அல்லது மகள் இருக்கிறார்களா, அவர்கள் எதிர்கொள்ளும் இந்த பொதுவான பிரச்சனைகளை நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். டீன் ஏஜ் என்பது மிகவும் சவாலுக்குரிய பருவமாகும் .நாம் இதனை பருவ வயது என்கிறோம். குறிப்பாக 14 - 19 வயதுள்ள பையன் அல்லது பெண்ணின் மனநிலை என்பது நிலையற்றதாக இருக்கும். அவர்களுக்கு அதிக கோபம் வரும் .சின்ன விஷயத்திற்கு கூட ஆத்திரமும் எரிச்சலும் அடைவார்கள் . இதனை சில பெற்றோர்கள் புரிந்துக்கொள்ளாமல் அவர்களை குடும்பத்தினர் மத்தியில் உதாசீனப்படுத்துவது, தாழ்த்தி பேசுவது போன்றவற்றை செய்வார்கள் . புரிகிறது ! குழந்தை வளர்ப்பு என்பது அத்தனை எளிதான காரியம் அல்ல ! ஆனால் அவர்களிடம் கடிந்துக்கொள்வதற்கு முன்னதாக வெளிப்படையாக பேசி பழகுங்கள் அது பல வகையில் உங்களுக்கும் உங்கள் டீன் ஏஜ் வாரிசுகளுக்கும் கைக்கொடுக்கும்!
உடல் மாற்றங்கள் :
குழந்தைகள் தங்களது பருவ வயதை அடையும் பொழுது , உளவியலாகவும் , உடல் அளவிலும் பல ஹார்மோனல் பிரச்சனைகளை சந்திக்கிறார்கள் . அதுவரையில் வேறு மாதிரியாக இருந்த தங்களது உடல் , எண்ணம் அனைத்தும் அடுத்த படிக்கு தயாராகும் பொழுது அது அவர்களுக்குள் சோகத்தையும் , குழப்பத்தையும் ஏற்படுத்துகிறது.
குறிப்பாக முகப்பருக்கள் , உடலில் வளரும் ரோமங்கள் ,உயரம், எடை,ள் போன்றவற்றில் ஏற்படும் மாற்றங்கள் டீன் ஏஜ் பருவத்தில் ஏற்படும் மற்ற மாற்றங்கள். ஒவ்வொரு பெற்றோரின் கடமை என்னவென்றால், தங்கள் குழந்தைகள் தங்கள் உடலைப் பற்றி எப்படி உணருகிறார்கள் என்பதை அறிந்துக்கொள்ள வேண்டும் . அதனை அவர்கள் இழிவாகவோ அல்லது சுயமரியாதைக்கு குந்தகம் வருவதாகவோ எண்ணினால் நிச்சயம் அதனை அவர்களது மனதில் இருந்து அகற்ற வேண்டும் .
ஒப்பீடு கூடாது :
நமது வீட்டில் பொதுவாக ஒரு பிரச்சனை இருக்கும் . பருவ வயதை எட்டிவிட்டாலே அடுத்த வீட்டு அல்லது எதிர்வீட்டு குழந்தைகளுடன் நமது குழந்தைகளை ஒப்பிட துவங்கிவிடுவோம். அதனை ஒரு போது செய்யாதீர்கள் அது , உங்களின் டீன் ஏஜ் பையனுக்கோ பெண்ணிற்கோ தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்துவதுடன் உங்களிடம் இருந்து இடைவெளியையும் ஏற்படுத்திவிடும்.
நடவடிக்கைகளை கவனியுங்கள் :
மற்றர்களால் அவர்கள் ஏதேனும் தொந்தரவுகளை எதிர்க்கொள்கிறார்களா என்பதை கவனிக்க வேண்டும் . குழந்தைகள் மற்றவர்களால் துன்புறுத்தப்படும்போது சோகம், தனிமை, மனச்சோர்வு, பதட்டம் போன்ற பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அவற்றையும் கவனத்திக்கொள்ளுங்கள்! முடிந்த அளவு குழந்தைகளிடமோ அல்லது அவர்களின் முன்னிலையிலோ கெட்ட வார்த்தையை பயன்படுத்தாதீர்கள்.
போதை பொருள் குறித்து விளக்குங்கள் :
இந்த டிஜிட்டல் யுகத்தில், டீன் ஏஜ் குழந்தைக்கு ஆல்கஹால் அல்லது போதைப்பொருள் உட்கொள்வது போன்ற பல விஷயங்கள் தெரிந்திருப்பது மிகவும் இயற்கையானது. டீனேஜர்கள் தடைசெய்யப்பட்ட விஷயங்களைப் பற்றி அதிக ஆர்வம் காட்டுகிறார்கள் என்பதே உண்மை. ஒவ்வொரு பெற்றோரும் மது அல்லது போதைப்பொருள் போன்றவற்றின் தீங்கான விளைவுகள் பற்றி முழுமையாக விளக்க வேண்டும்.