Japanese Towel Exercise | அது என்னங்க ஐப்பான் டவல் உடற்பயிற்சி? பத்தே நாட்கள்ல தொப்பை குறையுமா?
தொப்பையை குறைக்க ஜப்பானியர்கள் கண்டுபிடித்த ஆரோக்கியமான மற்றும் பத்தே நாட்களுக்குள் சாத்தியமாகும் ஒரு எளிய உடற்பயிற்சி எப்படி செய்யவேண்டும், எந்த அளவுக்கு தாக்கம் இருக்குமென்பதை பார்க்கலாம்.
வயிற்றுப் பகுதியில் அதிகப்படியான கொழுப்பு குறிப்பாக தீங்கு விளைவிக்கும். வயிற்று கொழுப்பு, அல்லது தொப்பை கொழுப்பு, நீரிழிவு மற்றும் இதய நோய் உள்ளிட்ட சில நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும் என்று அறியப்படுகிறது. இரண்டு வகையான தொப்பை கொழுப்புகள் உள்ளன: தோலுக்கு அடியில் இருக்கும் கொழுப்பு (தோலுக்கு அடியில் குவியும் கொழுப்பு) மற்றும் உள்ளுறுப்பு கொழுப்பு (அடிவயிற்றில் ஆழமாக குவிந்து உள் உறுப்புகளைச் சுற்றியுள்ள கொழுப்பு). வயிற்று கொழுப்பு பெரும்பாலும் உள்ளுறுப்பு ஆகும். மேலும் இந்த வகை கொழுப்பின் அதிக விகிதத்தில் உள்ளவர்களுக்கு நீரிழிவு நோய் வருவதற்கான அதிக ஆபத்து உள்ளது. இப்போது, கேள்வி என்னவென்றால் இந்த உள்ளுறுப்பு வயிற்று கொழுப்பைக் குறைக்க மற்றும் ஆரோக்கியமான உடல் எடையை அடைய நீங்கள் என்ன செய்ய முடியும்? என்ன செய்தால் தொப்பை இல்லாத அழகிய வயிற்றைப் பெறலாம்? ஜப்பானியர்கள் இந்த தொப்பையைக் குறைக்கும் 'டவல்' உடற்பயிற்சியை அறிமுகம் செய்கிறார்கள். "இந்த உடற்பயிற்சி மூலம் 10 நாட்களில் உங்களின் தொப்பையை குறைக்கலாம்'' என யாராவது சொன்னால் அதை நாம் நம்புவோமா? அண்மையில் @tiabagha என்ற சமூக வலைதள பயனர் அவரின் சமூக வலைத்தளங்களில், வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தினம் 5 நிமிடம் செய்யும் ஜப்பானின் 'டவல்' உடற்பயிற்சியினால், பத்தே நாட்களில் தொப்பை குறையும் என திட்டவட்டமாகக் கூறியுள்ளார். இந்த வீடியோவை 2.8 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் சமூக ஊடகங்களில் லைக், கமெண்ட் செய்தும் இருக்கிறார்கள்.
தொப்பையில்லாத கட்டுக்கோப்பான உடலை பெற, ஜப்பானின் புகழ்பெற்ற பாத அழுத்த சிகிச்சை மற்றும் மசாஜ் நிபுணரான மருத்துவர் தோஷிகி ஃபுகுட்சுட்ஸியால், பத்தாண்டுகளுக்கு முன்பு இந்த 'டவல்' உடற்பயிற்சி கண்டுபிடிக்கப்பட்டது. தொப்பை குறைப்பு மட்டுமின்றி சரியான உடலமைப்பு, பலம் வாய்ந்த முதுகுத்தண்டு, நாட்பட்ட முதுகுவலியிலிருந்து நிவாரணம் போன்றவற்றையும், இந்த உடற்பயிற்சியினால் கூடுதலாக பெறலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார். நிபுணர்களைப் பொறுத்தவரை, வயிற்றைச் சுற்றியுள்ள கூடுதல் சதையை இந்த உடற்பயிற்சி குறைக்க உதவும். இந்த உடற்பயிற்சியை இடைவிடாது செய்வதினால், இடுப்புப்பகுதியில் தவறுதலாகப் படிந்துள்ள சதையானது சரிசெய்யப்பட்டு, தொப்பை குறைகிறது.
முதலில் இந்த உடற்பயிற்சியினை செய்வதற்கு 'டவல்', அதாவது துண்டு மற்றும் ஒரு யோகா மேட் வேண்டும்.
ஸ்டெப் 1: கீழே விரிக்கப்பட்ட யோகா மேட்டில், மேலே பார்த்தவாறு படுத்துக் கொள்ளுங்கள். உங்கள் கை மற்றும் கால்களை நன்றாக நீட்டி மெதுவாக ரிலாக்ஸ் செய்யுங்கள்.
ஸ்டெப் 2: உங்களின் கீழ் முதுகுக்கு அடியில், தொப்புளுக்கு நேர் கீழானப் பகுதியில், ஒரு தடிமன் அதிகமுள்ள துண்டை நன்றாக சுருட்டி வையுங்கள்.
ஸ்டெப் 3: உங்களின் தோள்பட்டை தரையில் நன்றாகப்படுமாறு வைத்து, கால்கள் இரண்டையும் 10 செண்டிமீட்டர் இடைவெளியில் நகர்த்தி வையுங்கள்.
ஸ்டெப் 4: இப்போது உங்களின் கைகளை தலைக்கு மேலே தூக்கி, உள்ளங்கைகள் தரையை பார்த்தபடி இருக்குமாறு வையுங்கள்.
ஸ்டெப் 5: இந்த நிலையில் குறைந்தது 5 நிமிடங்களாவது இருக்கவேண்டும். பிறகு மெதுவாக உடலைத் தளர்த்தி, இயல்பு நிலைக்கு திரும்புங்கள்.
வெறும் ஒரு 10 நாட்களுக்குள் எந்த உடற்பயிற்சினாலும், பலன்களைத் தர முடியாது. அதற்கு இந்த 'டவல்' உடற்பயிற்சியும் விதிவிலக்கல்ல. ஆனால் இந்த உடற்பயிற்சியினை தொடர்ந்து தினமும் செய்ய, கூனில்லாத நேரான, சரியான உடலமைப்பை பெற முடியும். முதுகுவலி சரியாகும். மேலும் படிப்படியாக தொப்பைக் குறையும். கொழுப்பு மிகவும் அழுத்தமாகப் படிந்திருக்கும் வயிற்றின் நடுப்பகுதியில் உள்ள கொழுப்பைக் குறைப்பது என்பது மிகவும் சவாலானது. மற்ற உடற்பயிற்சிகளினால் பெரும்பாலான மக்களுக்கு முதலில் உடலின் மற்ற பாகங்களில் உள்ள சதைகள் எல்லாம் கரைந்த பிறகு இறுதியாகத்தான், இந்த தொப்பை குறைகிறது. மேலும் உணவு, உடற்பயிற்சி, தூங்கும் பழக்கம் மற்றும் மரபணுக்கள் ஆகிய பல காரணிகளும் மெலிந்த மற்றும் கட்டுக்கோப்பான உடலமைப்புக்கு காரணமாக அமைகிறது.
முதலில் இலக்கு வைத்து உடல் எடையை குறைப்பது சாத்தியமில்லை என்பதை நம்பவேண்டும். உடல் எடையை குறைக்க தீர்மானித்து விட்டால், உடலின் அனைத்துப் பகுதிகளிலும் எடை குறையும் என்பசது தான் உண்மை. உடலின் சில பகுதிகளில் ஒவ்வொருவரும் அவரவர் உடல் வாகுக்கு ஏற்ப மற்றவர்களை விட வேகமாக எடையை இழப்பார்கள். அதேபோல் உணவு அல்லது உடற்பயிற்சி ஆகியவற்றால் விரைந்து உடல் எடையைக் குறைக்கலாம், என சொல்பவர்களிடமிருந்து விலகியே இருப்பது நல்லது. திறம்பட உடல் எடையை குறைப்பதற்கு நேரமெடுக்கும். தொப்பையில்லாத மெலிந்த உடலமைப்பை பெறுவதற்கு, அனைத்து சத்துகளும் நிறைந்த சமச்சீர் உணவை உட்கொள்ளவேண்டும். தேவையான தண்ணீர் குடித்து, முறையாக உடற்பயிற்சி செய்து, சரியான நேரத்தில் தூங்கி, மனஅழுத்தம் இல்லாதவாறு பார்த்துக் கொண்டால், உடல் வலுவாகவும், அழகாகவும் இருக்கும்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )