அன்பும் அறனும் 8: பண்டிகை ஷாப்பிங் ப்ளான் பண்ணுங்க.. தாயின் பையில் ரெடியாக இருக்கவேண்டியது இவைதான்..
பண்டிகை ஷாப்பிங் தொடங்கும் நேரமிது. தாயின் பைகளில் இடம்பெற வேண்டியவற்றைப் பட்டியலிட்டுக் கொண்டால் கடைகளுக்குச் செல்லும்போது பொருள்களை விடுபடாமல் வாங்கலாம்.
அவசியம் வேண்டும் பாலூட்டத் தலையணை
Feeding pillow எனப்படும் தலையணைகள் பல்வேறு வடிவங்களில் கிடைக்கின்றன. நான் இந்தத் தலையணையைத் தேர்வு செய்ததற்குப் பின்னால் ஒருகதையே உண்டு. கருவுற்ற உடனேயே இலவச ஆலோசனைகளை அள்ளித்தரும் அறிந்தோர் தெரிந்தோர் எல்லாம் முதலில் சொன்னது, "தேவையில்லாம பில்லோ, பெட் எல்லாம் வாங்காத; அதெல்லாம் குழந்தைக்கு வாகாவே இருக்காது. காசை கரியாக்காதே" போன்ற அருமையான சொற்களைத்தான். நம்ம டிசைன் எப்போதுமே எல்லாவற்றுக்கும் 'உம்ம்' சொன்னாலும் நமக்கு என்ன தோன்றுகிறதோ அதைச் செய்வதுதான் என்பதால் தப்பிக்க முடிந்தது. கடைக்குச் சென்றதும் feeding pillow கேட்டேன்.
முதுகோடு சேர்த்து பெல்ட் மாதிரியான அமைப்பில் வெல்க்ரோ பொருத்தப்பட்ட தலையணைகளே அதிகம் விற்பனையாகின்றன என்று காட்டினார்கள். காரணம் பாலூட்டும்போது முதுகுவலி இருக்காது என்றும் சொன்னார்கள். முதுகுவலி மேலோங்கியிருந்த ஏழாம் மாதத்தில் 'முதுகுவலி இருக்காது' என்பதைக் கேட்கவே இன்பமாக இருந்தது. தட்டையான அமைப்புடன் உள்ளே sponge திணிக்கப்பட்டிருந்தது. குழந்தையைப் படுக்கவைத்தால் உருளுமோ எனத் தோன்றியது. C வடிவத்தில் இருந்த தலையணை ஒன்றைப் பார்த்தேன். C யின் இருபுறமும் குறுகி இடுப்புப் பகுதியை லாவகமாகக் கவ்வும் அமைப்பில் இருந்தது. உள்ளே பஞ்சு நிரப்பப்பட்டு மேற்புறம் மெத்தெனவும் இருந்தது. இரண்டில் எதைத் தெரிவுசெய்வதென இரண்டையும் உடலோடு பொருத்திப் பார்த்தேன். முதலில் சொன்ன வெல்க்ரோ உள்ளபடியே முதுகுக்கு இதமாக இருந்தது. பெல்ட் போல வெல்க்ரோ இருப்பதால் தலையணையை நாம் கையால் பிடிக்கத் தேவையில்லை. வசதியாக இருக்கும். அடுத்து சொன்ன C வடிவத்தில் பஞ்சு நிரப்பப்பட்டது மட்டுமே ப்ளஸ். சரியென்று வெல்க்ரோ தலையணையை ஓ.கே செய்யும்பொருட்டு மீண்டும் ஒருமுறை பொருத்தி கழட்டும்போதுதான் தோன்றியது வெல்க்ரோவின் சத்தம். பாலூட்டும் நேரம் குழந்தை தூங்கிவிட்டால் இந்த 'பரக் பரக்' வெல்க்ரோ சத்தம் குழந்தையை எழுப்பிவிடுமே என்று விற்பனையாளரைக் கேட்டதும் வாயடைத்துப் போய்விட்டார். "நாங்களும் எத்தனையோ கஸ்டமரிடம் இதைக் கொடுத்திருக்கோம். ஆனா, இந்தக் கோணத்தில் யாருமே கேள்விகேட்கல, மேடம். உண்மைதான் குழந்தை விழிக்க வாய்ப்பு இருக்கு" என்றார். குழந்தையின் ஆழ்ந்த உறக்கத்தையும் பாதுகாப்பையும் உறுதிசெய்த மகிழ்வோடு C வடிவத் தலையணையை வாங்கிவந்தேன். அந்தத் தலையணை அத்தனை பெரிய உதவியாக இருக்கிறது. அதுபற்றி பாலூட்டும் பகுதியில் பின்னாட்களில் பார்க்கலாம்.
பேண்ட் வாங்கும்போது!
ஜீன்ஸ் அணிகிறவர்களாக இருந்தால் வயிற்றுப்பகுதியில் stretchable வகையில் கிடைக்கும் பிரத்யேக பேன்ட்களை வாங்கலாம். முடிந்தவரை வயிறை இறுக்காத காற்றோட்டமான தளர்வான பளாசோ வகையிலான பேன்ட்டுகளே பயன்படுத்த இலகுவாக இருந்தன. அதிலும் எலாஸ்டிக், நாடா இரண்டும் கொண்ட அமைப்பில் வாங்கினால் பிரசவகாலம் வரையிலும் பயன்படுத்தலாம். நம் வீட்டில் அடுத்தடுத்த அளவில் பேன்ட்டுகளைப் பயன்படுத்த ஆட்கள் இருந்தால் L, XL, XXL என மூன்று அளவுகளிலும் வாங்கி வரவிருக்கிற அடுத்த மூன்று மாதங்களுக்குப் பயன்படுத்துவிட்டு அவர்களிடம் கொடுக்கலாம். இதில் நான் இரண்டாவது ரகம். மூன்று அளவுகளிலும் பேன்ட்கள் வாங்கியதால் அவசரத்துக்கு நண்பர்கள் யாரும் மாற்றுஉடை இல்லாமல் வீட்டுக்குத் தங்கவரும்போது கொடுக்கப் பயன்படுத்த முடிகிறது.
புத்தாடைக்கு நோ! நோ!
வாங்கியவுடன் அப்படியே உடுத்தும் அழகே தனிதான் என்றாலும் இந்த மூன்று மாதங்களில் புதிதாக ஏதும் ஒவ்வாமை ஏற்படாமல் பார்த்துக்கொள்வது அவசியம். அதனால் புத்தாடைகளை அலசி காயவைத்தே பயன்படுத்துங்கள். புதுத்துணியின் ரசாயன சாயம் எதுவும் உடலில் ஒட்டாமல் தப்பிக்கலாம். "எவ்வளவு கவனமா இருக்கவேண்டியிருக்கு" என்கிற உங்கள் குரல் கேட்கிறது. அவ்வளவு கவனமும் உங்கள் குட்டி உயிரின் நலனுக்காகவே!
- நலன்சார்ந்த பகிர்வு தொடரும்...
முந்தைய தொடர்களை படிக்க...
அன்பும் அறனும் - 1 : குழந்தைக்கு திட்டமிடும் தம்பதியர் இதை படிங்க
அன்பும் அறனும் - 2 : குழந்தை உருவாகிடுச்சா? இதில் கவனம் செலுத்துங்கள்
அன்பும், அறனும் 3: இது அன்னையின் காலம்.. கர்ப்பகாலத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்
அன்பும் அறனும் -4: குட்டித் தொப்பையாய் கர்ப்பகாலம்.. அழகான இரண்டாம் காலாண்டு பருவம்!
அன்பும் அறனும் -5: அழகான கர்ப்பகாலம்.. 5 மாதங்களுக்கு பிறகான கவனமும்! தேவையும்!
அன்பும் அறனும் - 6: அழகான கர்ப்பகாலம்.. 7வது மாதமும்.. தேவை கவனமும்!
அன்பும் அறனும் 7: கர்ப்ப காலத்தில் என்னவிதமான ஆடைகளை அணிய வேண்டும்?
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )