'உங்கள் பிள்ளைகளுக்கு பருவ வயதா இது?’ பெற்றோர்களே உஷார்..!
பாலின ஈர்ப்பு, மொபைல் மோகம், பைக் பற்று, போதைப்பொருள் விருப்பம், என இந்த சமூகத்தால் மறைத்து வைக்கப்படுகின்ற பலவற்றை தெரிந்துகொள்ளவும் தெரிந்தபின் அவற்றைத் தனக்கென தேர்வு செய்யவும் அலையும் வயது இது
“ எட்டு எட்டா மனுஷ வாழ்வ, பிரிச்சுக்கோ, நீ எந்த எட்டில் இப்போ இருக்க நெனச்சுக்கோ" என்ற பாடல் வரிகளைப் போல் மனித வாழ்வில் நாம் எந்த வயதில் இருக்கிறோம் என்பதை ஒவ்வொருவரும் அறிந்து வாழ்வதே வாழ்க்கையின் அர்த்தத்தை நமக்கு தெளிவுபடுத்தும்.
ஒரு தாய் என்பவள் கருவுற்ற நாளிலிருந்து தன் உணர்வால் தன் குழந்தையின் அசைவை உணரத் தொடங்கிவிடுகிறாள் என்றுதான் சொல்ல வேண்டும். பத்து மாதமும் பாரம் என்று பாராமல் தன் உடலோடும் உணர்வோடும் தூக்கி சுமந்த தனது குழந்தையை 10 மாதத்திற்கு பின்பும் பக்குவமாய் பார்த்து வளர்த்து வருகிறாள். தன்னைச் சார்ந்தவர்களின் துணையோடு. தன் குழந்தை ஒவ்வொரு வயதை எட்டும் போதும் உச்சிமுகர்ந்து அகம் குளிர அன்பால் அணைத்துக் கொள்ளும் தாயானவள், ஒவ்வொரு வயதிலும் தன் குழந்தைக்கு ஏற்ற உணவு ,உடை ,சூழல் கல்வி, அன்பு, ஆரோக்கியம் என அனைத்தையும் தேர்ந்தெடுத்து கொடுக்கிறாள், ஆனால் தன் குழந்தை பருவ வயதை கடக்கும் வரையில் மட்டும் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டே இருக்கிறாள். ஒரு குழந்தைக்கு தாயும் தந்தையும் தான் பெற்றோர், ஆனால் தாயானவள் தன் குழந்தையின் மீதும் அந்த குழந்தை குறித்த அனைத்து விஷயங்களிலுமே கூடுதல் ஈடுபாட்டுடன் இருக்கக்கூடியவர்கள், எனவேதான் இங்கு தாயை முன்னிறுத்துகிறேன்.
ஆனால் உண்மையில் தாய் தந்தை இருவருக்குமே தங்கள் பிள்ளைகளின் வாழ்க்கையின் மீது கூடுதல் பொறுப்பும் அக்கறையும் இருந்தாக வேண்டும். அப்படிப்பட்ட பொறுப்பும் அக்கறையும் தன் குழந்தைகளின் பருவ வயதில் இன்னும் அதிகமாக இருத்தல் அவசியம். தங்கள் குழந்தைகளுடைய இந்த வயதில் அலட்சியமாக இருந்துவிடக்கூடாது. அதுதான் பருவ வயது.
' இளங்கன்று பயமறியாது ' - என்பது போல் பருவவயது எதையும் அறியாது.. பிள்ளைகளின் மனம், புத்தி, உடல் இவை மூன்றுமே பருவ வயதில் அதன் கட்டுக்குள் சிக்கிக் கொண்டு இருக்கும். 'வயசு கோளாறு' என ஒரு வார்த்தையை பயன்படுத்துகிறோம். உண்மையில் மனித பிறவியில் தன் வாழ்வின் நோக்கம் ஏதுமே அறியாமல் இது தான் வாழ்வு என தன் மனம், புத்தி, உடல் , இவை எதை விரும்புகிறதோ அதை மட்டுமே நினைத்து அதை நோக்கியே குதிரைக்கு கடிவாளம் போட்டது போல இந்த பருவவயது இழுத்து செல்லும் வழியில் பயணிக்க தொடங்குகிறார்கள் பருவ சிட்டுக்கள்.
இன்றைய சமூகத்தில் பருவ சிட்டுக்கள் பலர் சிதைந்து தங்கள் வாழ்வை தொலைத்துக் கொண்டிருக்கிறார்கள், இதற்கு காரணம் சரியான வழிகாட்டுதல் இல்லாததே, பக்குவமில்லாத இந்த வயதை பாதுகாப்பாக ஒவ்வொரு பருவ வயதினரும் கடந்து வர அவர்களின் பெற்றோர்களும், ஆசிரியர்களும் அவர்களைச் சார்ந்தவர்களுமே பொறுப்பு.. இந்த பருவவயது எந்த ஒன்றின் மீது போதை கொள்கிறதோ, அதிலிருந்து மீளமுடியால், மீளத்தெரியாமல் தன் வாழ்வின் சரியான பாதை எது என அறியாமல் போதையில் மிதக்கும்.
பாலின ஈர்ப்பு, மொபைல் மோகம், பைக் பற்று, போதைப்பொருள் விருப்பம், இப்படி இந்த சமூகத்தால் மறைத்து வைக்கப்படுகின்ற பலவற்றை தெரிந்துகொள்ளவும் தெரிந்தபின் அவற்றைத் தனக்கென தேர்ந்தெடுக்கவும் தேடி அலையும் வயது இந்த பருவ வயது.
பெற்றோர்கள் செய்ய வேண்டியது
இந்த வயதில் ஒவ்வொரு பெற்றோர்களும் தன் குழந்தை நேரத்திற்கு சாப்பிடுகிறதா, படிக்கிறதா, தூங்குகிறதா என்பதை மட்டும் கவனிக்காமல் அவர்களின் சிறு சிறு அசைவையும் அவர்கள் சார்ந்த பொருள்களையும், அவர்களை சுற்றி இருக்கக்கூடிய நட்பு, பழக்கவழக்கங்களையும் அதிகம் உற்று நோக்க வேண்டும். ஒவ்வொரு பெற்றோர்களும் நல்ல நண்பராக தன் பிள்ளைகளுக்கு இருக்க வேண்டிய தருணமே அவர்களின் பருவ வயதில் தான்.
இந்த வயதில் பிள்ளைகள் தங்கள் மன ஓட்டங்களையும் , தங்கள் பிரச்சனைகளையும் , தயக்கமின்றி பெற்றோரிடம் பேச பெற்றோர்கள் அவர்களுக்கு வாய்ப்புக் கொடுக்க வேண்டும். இங்கு இருவருக்குமிடையே நட்போடு கூடிய ஒரு புரிதல் மிகமிக அவசியம். பருவ வயது பிள்ளைகள் பலர் தங்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு தற்கொலை என நினைத்து பலர் தவறான முடிவை எடுக்கிறார்கள். அவர்களின் பிரச்சனைக்கும் சரி, அந்த பிரச்சனைக்கான தீர்வுக்கும் சரி அவர்களை சுற்றி இருப்பவர்களே பொறுப்பாகும். பெற்றோர்கள் ஒவ்வொருவரும் தங்கள் வீட்டில் உள்ள பருவ வயது பிள்ளைகளோடு நேரம் செலவிடங்கள். அவர்களின் எண்ணங்கள், செயல்களை புரிந்துக் கொண்டு அவர்கள் செல்லும் பாதையை உற்று நோக்கி தவறான பாதைக்கு செல்வதற்கு முன்பே சரியான பாதையை அவர்களுக்கு தெளிவுப்படுத்துங்கள். அதற்காக அறிவுரைகளை வாரி வழங்காதீர்கள், அது அவர்களை உங்களிடம் நட்புறவுடன் இருக்கவிடாது. அவர்களின் வயது எந்த அறிவுரைக்கும் அசராத வயது.
'வருமுன் காப்பது என்பது இந்த வயதினருக்கானதே' என்று தான் சொல்ல வேண்டும்..